கொரோனா வைரஸ்: கோவிட்-19 நோய்த் தொற்றை கேரளா வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், இம்ரான் குரேஷி,
- பதவி, பிபிசி இந்திக்காக
கேரளாவில் உள்ள அந்த கிராமத்துக்கு வந்த பேருந்தில் இறங்கிய அந்த இரு இளம்வயதினரை அங்கிருந்த நடுத்தர வயதினர் மூவர் சந்தித்தனர்.
அவர்களில் வயதில் மூத்தவராக இருந்தவர், அந்த இளம் வயது ஆண் மற்றும் பெண்ணிடம், அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கையலம்பும் அறைக்கு செல்லுமாறு சைகையால் சுட்டிக்காட்டினார்.
பொதுவாக திருமண விழாக்களில் அதிக அளவிலான நபர்கள் கை கழுவ வரிசையாக அதிக குழாய்களுடன் இருக்கும் அமைப்பு அங்கிருந்தது. அங்கு தங்கள் கைகளை நன்கு கழுவிய பின்னர், அவர்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு புறப்பட்டனர்.
முகத்தில் அரும்பிய புன்னகையுடன் அந்த நடுத்தர வயதினர் அங்கே நிற்க,அந்த காட்சி ஒலி பின்னணி எதுவும் இல்லாத காணொளியாக வைராலகியுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் போல தோன்றும் இந்த நடுத்தர வயதினருடன், சுகாதார பணியாளர்கள் அங்கில்லை. ஜெபிஹெச்என் என்றழைக்கப்படும் இளநிலை பொது சுகாதார செவிலியர் மற்றும் ஜெஹெச்ஐ என்றழைக்கப்படும் இளநிலை சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோரே அந்த சுகாதார பணியாளர்கள் ஆவர்.

பட மூலாதாரம், Getty Images
சுகாதார பணியாளர் மற்றும் மக்கள் பிரதிநிதி என ஆரம்ப நிலையில் இணைந்து பணியாற்றும் இந்த இணை தான் கோவிட் -19 நோய்தொற்றுக்கு எதிராக போராடி வரும் கேரள மாநிலத்தின் சமூக அளவிலான முதலீடாக கருதப்படுகின்றனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தோன்றிய முதல் மாநிலமாகவும், தற்போது வெற்றிகரமாக எதிர்கொண்டு வரும் மாநிலமாகவும் உள்ள கேரளாவின் பொது சுகாதார அமைப்புக்கு இவர்களே முதுகெலும்பாக அமைந்துள்ளனர். சீனாவின் வூஹானில் இருந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மூவர் கேரளாவுக்கு வந்து 3 மாதங்களாகியும் கேரளாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 3 மட்டுமே.
சீனா போன்ற ஒரு நாட்டை முடக்கநிலையில் கொரோனா வைரஸ் தள்ளிய நிலையில், கோவிட் 19 நோய்த்தொற்றை எதிர்கொள்ள கேரளா தயாராக உள்ளது.
கடந்த ஆண்டு கேரளா சந்தித்த மிக மோசமான வெள்ளத்துக்கு பிறகு எந்த நோய்தொற்றும் ஏற்படாமல் நிலைமையை சமாளித்த அம்மாநிலம், ஏற்கனவே ஹெச்1என்1 வைரஸ் மற்றும் நிப்பா வைரஸ் தொற்று ஆகியவற்றை எதிர்கொண்ட அனுபவத்தை பெற்றுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
சுகாதாரத்துறை பணியாளர் மற்றும் மக்கள் பிரதிநிதி ஆகியோர் அடங்கிய இந்த படை மாநிலத்தின் ஒவ்வொரு கிராமத்துக்கும், வீடு வீடாக சென்று மிக கடும் பாதிப்பை ஏற்படும் இந்த வைரஸ் குறித்து மக்களிடம் எடுத்துரைக்கின்றனர்.
கேரளாவில் அண்மையில் மிக கடுமையான பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்தின்போதும் இவர்கள் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுப்பது குறித்து மிக கடுமையான பிரசாரங்களை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
அதிக அளவில் பயிற்சி அளிப்பது எப்படி?
''இவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் 2,3 நாட்களில் நடந்துவிடும். பயிற்சிபெற்ற இவர்கள் நிபுணர்கள் வழங்கும் பயிற்சி கையேடுகளை கொண்டு மற்றவர்களுக்கு பயிற்சி வழங்குகின்றனர்'' என்று கேரள மாநிலத்தின் முன்னாள் பொது சுகாதாரத்துறை இயக்குநரான ஸ்ரீதர் பிபிசியிடம் தெரிவித்தார்.
''கிராமப்புறங்களில் ஆஷா என்றழைக்கப்படும் அங்கீகாரம் பெற்ற சமூக நல ஆர்வலர்களும், நகர் பகுதிகளில் உஷா என்றழைக்கப்படும் நகர்ப்புற சமூக நல ஆர்வலர்களும் இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர். மக்களுக்கு என்ன மாதிரியான விழிப்புணர்வு அளிக்கப்பட வேண்டும் என அவர்களுக்கு தெளிவாக கூறப்படுகிறது. ஆஷா உறுப்பினர் ஒவ்வொருவரும் கிட்டதட்ட 1000 பேருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொறுப்பை எடுத்துக் கொள்கின்றனர்'' என்று ஸ்ரீதர் மேலும் தெரிவித்தார்.
இளநிலை பொது சுகாதார செவிலியர் 10,000 பேர் கொண்ட மக்கள்தொகைக்கும், இளநிலை சுகாதார ஆய்வாளர் 15,000 பேர் கொண்ட மக்கள்தொகைக்கும் இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொறுப்பை எடுத்துக் கொள்வார்.
''எவ்வாறு முகக்கவசம் அணியவேண்டும் என்பது உள்ளிட்டவைகளை சுகாதார பணியாளர்கள் விளக்குவார்கள். அதேபோல் மக்கள் பிரதிநிதிகளுக்கும் அடுத்து செய்யப்போவது என்ன என்று விளக்கப்படுகிறது'' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
சுகாதார பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அடங்கிய இந்த சமூக நல படைக்கு இதுவரை என்ன செய்தோம் என்றும், வூஹானில் இருந்து கேரள விமான நிலையத்துக்கு முதல் பயணி வந்தவுடன் என்ன செய்யவேண்டும் என்பதும் எடுத்துரைக்கப்பட்டது என்று நினைவுகூர்ந்தார் ஸ்ரீதர்.
''தனிமைப்படுத்தப்பட்ட ஒருவர் விதிமுறைகளை மீறினால், சுகாதார பணியாளர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதி அடங்கிய இந்த படை அவர்களை கண்காணித்து, மீண்டும் அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் வருமாறு செயல்படுகின்றனர்'' என்று விளக்கமளித்தார் ஸ்ரீதர்.
திஷா என்ற பெயரில் கேரளாவில் சமூக நல மையம் உள்ளது. மக்களின் பொது சுகாதாரம் தொடர்பான கேள்விகளை மற்றும் புகார்களை கவனிக்க இலவச அழைப்பு எண்ணையும் அவர்கள் அளித்துள்ளார்கள்.

பட மூலாதாரம், kk shailaja teacher facebook page
வுஹானில் இருந்து மாணவர்கள் நாடு திரும்பியபோது, அவர்களும், அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
ஆனால் விமானநிலையத்தில் தெர்மல் ஸ்கானிங் சோதனையை ஒரு தம்பதியர் தவிர்த்து சென்ற பிறகும், தனியார் மருத்துவமனையில் ஒருவர் காய்ச்சலோடு அனுமதிக்கப்பட்ட பின்னரும் தான் கேரளாவில் பிரச்னை தொடங்கியது.
இத்தாலியில் இருந்து வந்த இந்த தம்பதியர் மற்றும் அவர்களின் உறவினர்களை தேடும் பணியில் மாவட்ட நிர்வாகம் இறங்கியது. அவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது பின்னர் உறுதி செய்யப்பட்டது.
நள்ளிரவில் களமிறங்கிய போலீசார் மற்றும் சுகாதார பணியாளர்கள் அடங்கிய குழு கிட்டத்தட்ட 2000 பேரை கொரோனா பரிசோதனைக்கு உள்ளாக்கியது. மேலும் பல ஆயிரம் பேரை அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தியது.
93 மற்றும் 88 வயதான இந்த தம்பதியரின் பெற்றோர் தான் அண்மையில் கோட்டயம் மருத்துவமனையில் இருந்து 2 வார சிகிச்சைக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்

கேரளாவின் வெற்றி போராட்டம் எப்படி சாத்தியமானது?
''சுகாதார பணியாளர்கள் மற்றும் ஜனநாயகத்தின் கடைசி பிரதிநிதிகளான உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் அடங்கிய எங்களின் சமூக முதலீடே மற்ற மாநிலங்களில் இருந்து கேரளாவை கொரோனா எதிர்ப்பு போராட்டத்தில் மாறுபட்டு நிற்க வைத்துள்ளது'' என்று மருத்துவர் இக்பால் பிபிசியிடம் தெரிவித்தார்.
இவர்கள் உருவாக்கிய வெவ்வேறு துறைகளில் சிறப்பு பயிற்சியும், அனுபவமும் மிக்க 9 மருத்துவர்கள் அடங்கிய சிறப்பு குழு, கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்த பரிந்துரைத்த பிளாஸ்மா சிகிச்சையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அங்கீகரித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
துரிதமாக நோய்தொற்று ஏற்பட மற்றும் பரவ வாய்ப்புள்ள நபர்களை மற்றும் இடங்களை அடையாளம் காண்பது மற்றும் தனிமைப்படுத்துவது, மற்றும் சிறப்பான முறையில் கண்காணிப்பது என இடைவிடாது மேற்கொண்ட பணிகளே இதுவரை கேரளா கொரோனா எதிர்ப்பு போராட்டத்தில் வென்று வருவதற்கு காரணம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
கோவிட் - 19 நோய்த்தொற்றை கட்டுப்படுத்த, பரவலை கண்காணிக்க, கடந்த ஒன்றரை மாதங்களாக தினமும் சந்தித்து பேசும் கேரள மாநில அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு நிபுணர்கள் அடங்கிய மருத்துவ குழு அதற்கான திட்டங்களை தொடர்ந்து ஆலோசித்து வருகிறது.
கேரளாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் சராசரி வயது 37.2 என்று குறிப்பிட்ட இக்பால், 80 வயதுக்கு மேலானவர்கள் இருவருக்கு மட்டுமே இந்த தொற்று உறுதி செய்யப்பட்டது என்றும், 60 வயத்துக்கு மேற்பட்டவர்கள் 9 பேருக்கு மட்டுமே இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டது, இது மாநிலத்தின் கொரோனா எதிர்ப்பு போராட்டத்தில் சாதகமான அம்சம் என்று தெரிவித்தார்.
கேரளாவும், சுகாதார விழிப்புணர்வும்

பட மூலாதாரம், Getty Images
உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் பணியாளரும், தற்போது வாஷிங்டனில் சர்வதேச சுகாதார அமைப்பு ஒன்றின் ஆலோசகராக பணியாற்றிவரும் டாக்டர் எஸ்.எஸ். லால் கேரளாவில் தான் பணியாற்றிய ஆரம்ப காலம் குறித்து பிபிசியிடம் கூறுகையில், ''1990களின் ஆரம்பத்தில் பொது சுகாதார பணியில் இருந்த நான் ஆரம்ப சுகாதார நிலையமொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது அங்குள்ள பணியாளர்கள் அனைவரும் பகல் 12.30 அல்லது 1 மணிக்கே வீட்டுக்கு கிளம்புவர்'' என்று நினைவுகூர்ந்தார்.

''அது குறித்து அவர்களிடம் நான் கேட்டபோது, அதற்கு மேல் செவிலியர்களால் சிறுநீர் கழிக்காமல் இருக்க முடியாது என்றனர். ஏனென்றால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அப்போது முறையான கழிப்பிட வசதிகள் இல்லை''என்றார்.
இதன் பின்னர் அந்த பகுதியின் உள்ளாட்சி பிரதிநிதியை அழைத்து இந்த பிரச்சனையை லால் எடுத்துரைத்துள்ளார். ஆரம்பத்தில் எளிதாக இல்லாவிட்டாலும் பின்னர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகள் கிடைத்தன. ஆரம்ப சுகாதார நிலையமே பொது சுகாதார அமைப்பின் முக்கிய தூணாக அந்த காலகட்டத்தில் தான் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கேரளாவில் ஆரம்ப காலம் முதலே பொது சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு இருந்து வருகிறது. 1957-இல் கேரளாவில் அமைந்த முதல் அமைச்சரவையில் சுகாதார அமைச்சர் ஒரு மருத்துவர் தான் என்றும் லால் மேலும் குறிப்பிட்டார்.
பெங்களுரூவில் உள்ள தேசிய மன நலன் மற்றும் நரம்பியல் நிறுவனத்தை சேர்ந்த பேராசிரியர் வி. ரவி பிபிசியிடம் கேரளாவின் கொரோனா தொடர்பான பணிகள் குறித்து கூறுகையில், ''காசர்கோட் பகுதியில் அவர்கள் மேற்கொண்ட பணிகள் அசாத்தியமானது. மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் ஒவ்வொரு நாளும் அங்கு 30 முதல் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அனைவரையும் தனிமைப்படுத்தி, மிக விரைவாக தொற்று பரவ வாய்ப்புள்ளவர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டனர். விரைவாக வியூகம் மேற்கொண்டு பரிசோதனை செய்த அவர்களின் பணிகளை மற்றவர்களும் பின்பற்றலாம்'' என்று கூறினார்.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












