தமிழ்நாட்டில் கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 1200-ஐ கடந்தது

தமிழ்நாட்டில் இன்று 31 பேருக்கு மட்டுமே கொரோனா நோய்த் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. 81 நோயாளிகள் இதுவரை குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளனர். 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறித்த தகவல்களை அளிக்கும் தினசரி செய்தியாளர் சந்திப்பில் இன்று பேசிய சுகாதாரத் துறைச் செயலர் பீலா ராஜேஷ், "தற்போது தமிழ்நாட்டில் 28,711 பேர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். விமான நிலையங்களுக்கு அருகில் உள்ள அரசுக் கண்காணிப்பில் 135 பேர் உள்ளனர். இதுவரை 68,519 பேர் 28 நாட்கள் வீட்டுக் கண்காணிப்பை நிறைவுசெய்துள்ளனர்," என்று கூறினார்.
மேலும், தற்போதுவரை தமிழ்நாட்டில் 19,255 கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 15,502 நபர்கள் இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தற்போதைய சூழலில் 8 பேர் நோய்க் குறிகளுடன் சிகிச்சைபெற்றுவருகின்றனர். ஒருவரும் வென்டிலேட்டரில் இல்லை என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நேற்றுவரை 1173 பேருக்கு கொரோனா தொற்று இருந்த நிலையில், இன்று மேலும் 31 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால், நோயாளிகளின் எண்ணிக்கை 1204ஆக உயர்ந்துள்ளது. 777 சோதனைகளின் முடிவுகள் வெளிவர வேண்டும்.
இன்று தொற்று ஏற்பட்ட 31 பேரில் 15 பேர் ஆண்கள். 16 பேர் பெண்கள். மொத்த கொரோனா நோயாளிகளில் 33 பேர் பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள்.
தில்லியில் நடந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் இதுவரை 1079 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தீவிர மூச்சு தொற்று நோய் உள்ளவர்களுக்கு தொடர்ந்து சோதனைகள் செய்யப்பட்டுவருகின்றன. இன்று 69 பேருக்கு இதுபோல சோதனைகள் செய்யப்பட்டன. ஆனால், அதில் யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஆந்திராவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்ட சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும்போது உயிரிழந்த நிலையில், அவரது சடலத்தை அடக்கம் செய்வதில் நேற்று பிரச்சனை ஏற்பட்டது. இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, அது துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்றும் ஒருங்கிணைப்பில் ஏற்பட்ட தவறினாலும் உறவினர்களுக்கு கொரோனா ஏற்பட்டு அவர்களும் வரமுடியாமல் இந்தப் பிரச்சனை ஏற்பட்டதாகவும், பிறகு அந்த மருத்துவரின் உடல் வேறு ஒரு மயானத்தில் முறைப்படி அடக்கம்செய்யப்பட்டது என்றும் சுகாதாரத்துறைச் செயலர் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் அதிக சோதனைகள் செய்யப்பட்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் ஏன் அவ்வாறு சோதனைகள் நடத்தப்படவில்லையென செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
"அந்த மாநிலங்களில் எல்லாம் நமக்கு முன்பாகவே பலருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுவிட்டது. ஆனால், தமிழ்நாட்டில் மார்ச் 9ஆம் தேதிதான் முதல் நோயாளி அடையாளம் காணப்பட்டார். எந்த சோதனைச் சாலையிலும் ஆட்கள் இல்லாமல் இல்லை. பல்வேறு துறைகளில் இருந்தும் ஆட்கள், இயந்திரங்கள் ஆகியவை சேகரிக்கப்பட்டுள்ளன. ஆகவே சோதனை செய்யும் திறன் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது" என்று தெரிவித்தார் பீலா ராஜேஷ்.
பிளாஸ்மா சிகிச்சையைப் பொறுத்தவரை, நோய் ஏற்பட்டு, குணமடைந்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் பிறகு அவர்களிடம் பிளாஸ்மாவைப் பெற வேண்டும் என்பதால், அவர்களின் ஒப்புதல் பெறப்பட வேண்டுமென்றும் அதற்குப் பிறகே, இந்த சிகிச்சையைத் துவங்க முடியும் எனவும் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
நோயாளிகளைத் தேடிக் கண்டுபிடிப்பதில், இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதாகவும் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- கொரோனா: நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்க ஆயுர்வேத ஆலோசனை கூறும் இந்திய அரசு
- இந்தியாவின் கொரோனா தடுப்பு செயலி அந்தரங்க உரிமைக்கு எதிரானதா?
- கொரோனா வைரஸ்: மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு - பிரதமர் மோதி
- பிராமணர்கள் தப்லிக் ஜமாத் நிகழ்வில் கலந்து கொண்டனரா? - வட இந்திய குழப்பம்
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?












