பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் நேர்காணல்: கொரோனா 40 நாள் ஊரடங்கின் விளைவுகள் எப்படி இருக்கும்?

பட மூலாதாரம், Getty Images
கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கு மே 3ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுமென பிரதமர் நரேந்திர மோதி அறிவித்திருக்கிறார். ஆனால், இந்த நீட்டிப்பு எவ்விதமான விளைவுகளை பொருளாதாரத்திலும் சமூகத்திலும் ஏற்படுத்தக்கூடும் என்பது குறித்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார் பேராசிரியர் டாக்டர் ஜெ. ஜெயரஞ்சன். பேட்டியிலிருந்து:
கே. ஊரடங்கு மே 3ஆம் தேதிவரை, மேலும் பல நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவுகள் என்னவாக இருக்கும்?
ப. இந்தியா பொருளாதார ரீதியில் மிக வலுவான இடத்தில் இருப்பதாக சொல்லிவந்தோம். அதாவது உலகிலேயே ஐந்தாவது மிகப் பெரிய பொருளாதாரம் என்று கூறிவந்தோம். ஆனால், இப்படிச் சொல்லும்போது மக்கள் தொகை என்ற விஷயத்தைக் கவனத்தில்கொள்ள வேண்டும். சீனாவின் மக்கள் தொகை நம்மைவிட அதிகம்தான். ஆனால், அவர்களின் பொருளாதாரமும் நம்மைவிட பல மடங்கு பெரியது. இரண்டாவதாக அவர்கள் மிக வலிமையான உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக் கட்டமைப்பை உருவாக்கிவிட்டார்கள்.

அவர்களுடைய ஏற்றுமதியின் அளவு இறக்குமதியைவிட பல மடங்கு அதிகம். ஆனால், நம்மைப் பொறுத்தவரை, இறக்குமதிதான் அதிகம். நாம் பெரிதும் நம் உள்நாட்டுச் சந்தையைத்தான் நம்பியிருக்கிறோம். இதில் சாதகமும் உண்டு; பாதகமும் உண்டு. நம்முடைய பொருளாதாரம் ஆரோக்கியமாக இருக்கும்வரை வெளிநாட்டுப் பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் நம்மைப் பாதிக்காது.
ஆனால், எந்த மூன்றாம் உலக நாடும் செய்யாத ஒன்றை நாம் செய்திருக்கிறோம். முழுமையாக நாட்டையே மூடியிருக்கிறோம். பிற நாடுகள் பலவற்றைக் கணித்து, சில தளர்வுகளுடன் இதைச் செய்திருக்கிறார்கள். இப்படி நாட்டையே மூடியிருப்பதால் பல இழப்புகள் ஏற்படுகின்றன. முதலாவதாக வாழ்வாதார இழப்பு. இந்த ஊரடங்கின் காரணமாக பலர் வேலை இழந்துள்ளனர். கூலி இழந்துள்ளனர். இதற்கு நஷ்ட ஈடாக என்ன செய்யலாம் என்றால் அரசு பெரிய அளவில் செலவு செய்ய வேண்டும். ஐரோப்பாவின் பல நாடுகளில் இதைத்தான் செய்கிறார்கள். வேறு சில நாடுகளில் இப்படி நாட்டையே மூட வேண்டியதில்லை என முடிவுசெய்து, வேறுவிதமாக இதனை எதிர்கொள்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
நாம் எல்லாவற்றையும் மூடி ஊரடங்கு என முடிவெடுத்த பிறகு, இழப்பீடு என்பதைப் பற்றியே நாம் பேசவில்லை. அல்லது அடையாளமாக மிகச் சிறிய தொகையை அளிக்கிறார்கள். அல்லது ஏற்கனவே திட்டமிடப்பட்ட செலவுக்கான தொகையை முன்கூட்டியே அளிக்கிறார்கள். இரு ஆண்டுகளுக்கு முன்பாக நம்முடைய பொருளாதாரம் மிக வலிமையாக இருக்கிறது என்று சொன்னவர்கள் இப்போது அதைப் பற்றியே பேசுதில்லை. இது பாதிக்கப்படும் மக்களுக்குச் செய்யப்படும் அநீதி.
பொருளாதார ரீதியாக எதுவுமே செய்யாமல், வீட்டை விட்டு வெளியில் வராமல் தடுக்கும் உரிமையை மட்டும் எடுத்துக்கொள்கிறது. ஆனால், பொருளாதார உதவிகளைச் செய்வார்களா, செய்ய மாட்டார்களா என்பது குறித்து எதுவுமே தெரியவில்லை. பிரதமருடைய இன்றைய உரையிலும் அது குறித்து ஏதும் இல்லை.

கே. இந்த 40 நாட்கள் ஊரடங்கு எந்த அளவுக்கு பொருளாதாரத்தைப் பாதிக்கும்?
ப. மிகப் பெரிய அளவில் பாதிக்கும். கடந்த ஆண்டு நம்முடைய உள்ளாட்டு உற்பத்தியின் மதிப்பு சுமார் 200 லட்சம் கோடி ரூபாய் என்று வைத்துக்கொள்ளலாம். இந்த ஆண்டு அது சுமார் 220 லட்சம் கோடி ரூபாயாகியிருக்கலாம். அப்படியானால், நாற்பது நாட்களுக்கான உற்பத்தி என்பது இல்லாமல்தானே போய்விட்டது? ஆனால், இந்த உற்பத்தி பாதிப்பு என்பது ஒரு எண். இது எல்லோரையும் ஒரே மாதிரி பாதிக்காது.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் மிகப் பெரிய ஏற்றத்தாழ்வு இருக்கிறது. பெரும்பாலானவர்கள் வேளாண்துறையையும் அமைப்புசார தொழில்களையும்தான் நம்பி இருக்கிறார்கள். 90 சதவீதத்திற்கும் மேலான பணியாளர்கள் இம்மாதிரி துறையில்தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு எந்த விதமான சமூகப் பாதுகாப்பும் கிடையாது.
இதனால்தான் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டவுடன் பல லட்சம் பேர் தங்கள் ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் வேலை தேடி நகரங்களை நோக்கி வந்தார்கள். ஆனால், இம்மாதிரி சூழலில் அவர்களுடைய வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற எந்த ஏற்பாடும் நகரங்களில் இல்லை. ஆகவே அவர்கள் தங்கள் கிராமங்களை நோக்கி திரும்பிச் செல்கிறார்கள். இவர்கள்தான் இந்தியாவின் மிகப் பலவீனமான பகுதி. ஐரோப்பிய நாடுகளில் இம்மாதிரியான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறார்கள். டிரம்ப்கூட பல்வேறு நிதிச் சலுகைகளை அறிவித்திருக்கிறார். அவர்களிடம் நிதி இருக்கிறது செய்கிறார்கள்; நம்மிடம் பணம் இல்லை என்கிறார்கள் இவர்கள். ஆனால், ஏன் நம்மிடம் பணம் இல்லை என்பதைக் கேட்க வேண்டும்.


பட மூலாதாரம், ANII
கே. இந்த ஊரடங்கின் தொடர் விளைவுகள் எப்படி இருக்கும்?
ப. மிகக் கடுமையாக இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பாக பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி அறிமுகம் எல்லாம் சேர்த்து மிகப் பெரிய மந்தம் ஏற்பட்டது. அந்த மந்தத்திற்கு முக்கியமான காரணம், தேவை குறைந்ததுதான். அன்றாடம் உபயோகிக்கும் பொருளில் இருந்து, வீடு, கார் போன்ற வாழ்வில் ஒரு முறை - இரு முறை வாங்கும் பொருட்கள்வரை தேவை குறைந்தது. அதற்குக் காரணம், மக்களிடம் பணம் இல்லாமல் வாங்கும் சக்தி குறைந்தது.
ஆனால், இந்த ஊரடங்கால் இரு விதமான விளைவுகள் ஏற்படும். ஒரு புறம் மக்களிடம் பொருட்களை வாங்கப் பணம் இருக்காது. மற்றொரு பக்கம் உற்பத்திக்கான தேவை குறையும். இதனால் வேலைக்கு ஆட்கள் தேவைப்பட மாட்டார்கள். அதனால், மக்களிடம் பணம் இருக்காது. இது ஒரு சுழல். இதிலிருந்து பொருளாதாரத்தை மீட்டெடுத்து நாம் விட்ட இடத்தைப் பிடிக்கவே வெகுகாலம் பிடிக்கும். அதற்குப் பிறகுதான், அதைத் தாண்டிச் செல்வதைப் பற்றியெல்லாம் யோசிக்க முடியும்?

கே. இந்த ஊரடங்கு மற்றும் முடக்கத்தால் சமூகத்தின் எந்தப் பிரிவினர் அதிகம் பாதிக்கப்படக்கூடும்?
ப. மிகவும் கீழ்மட்டத்தில் இருப்பவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸைச் சேர்ந்த ஒருவர் கட்டுரை ஒன்றை சில நாட்களுக்கு முன்பாக எழுதி, பதிப்பித்திருந்தார். பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது கிடைத்த புள்ளிவிவரங்களின்படி பார்த்தால், 16 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருக்கின்றன. இதில் 60 சதவீதப் பணம், இந்திய மக்கள் தொகையில் ஒரு சதவீதம் பேரிடம் குவிந்திருக்கிறது. அதாவது 130 கோடி மக்கள் தொகை என்று எடுத்துக்கொண்டால், 1.3 கோடி பேரிடம்தான் 60 சதவீதப் பணம் இருக்கிறது. இதில் 0.01 சதவீதம் பேரிடம் இந்த 16 லட்சம் கோடி ரூபாயில் மூன்றில் ஒரு பங்கு அவர்களிடம் இருந்தது.

பட மூலாதாரம், Getty Images
நம் மக்களில் 45 சதவீதம் பேர் அன்றாடம் சம்பாதித்து, வாழ்பவர்கள். இவர்கள், தினச் சம்பளம் வாங்கலாம், மாதச் சம்பளம் வாங்கலாம். ஆனால், இவர்களிடம் சேமிப்பு என்று ஏதும் இராது. 25 நாட்கள் ஊரடங்கு போட்டதிலேயே 20 சதவீதம் பேரிடம் எந்தப் பணமும் இல்லாமல் போய்விடும். இந்த ஊரடங்கை மேலும் சில நாட்கள் நீடித்தால், மீதமுள்ள 80 சதவீதம் பேரிடமும் ஏதும் இல்லாமல் போய்விடும். இப்போது அந்தக் கட்டத்தில்தான் இருக்கிறோம்.
இன்றைக்குச் செலவுக்குப் பணமில்லை; கொஞ்சம் பணம் கடனாகக் கிடைக்குமா என்ற குரலை நான் மாணவராக இருக்கும்போது கேட்டது. அதற்குப் பிறகு அந்தக் குரலைக் கேட்கவேயில்லை. இப்போது அந்தக் குரல்கள் மீண்டும் கேட்க ஆரம்பித்திருக்கின்றன.


- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்

கே. பொருளாதார ரீதியாக இந்த விவகாரத்தை மத்திய அரசு அணுகும்விதம் எப்படி இருக்கிறது?
ப. மிகப் பரிதாபமாக இருக்கிறது. ஒரு பக்கம் இந்திய உணவுக் கழகத்தின் சேமிப்புக் கிடங்குகளில் உள்ள தானியங்களை எடுத்து இந்தியாவில் தானியம் தேவைப்படுபவர்களுக்குப் பகிர்ந்தளித்தால், அடுத்த ஒரு வருடத்திற்கு உணவளிக்க முடியும். ஒரு கட்டத்தில் எவ்வளவு உணவு தானியம் எவ்வளவு தேவைப்படுமோ அதைப் போல நான்கு மடங்கு ஸ்டாக் வைக்கப்பட்டுள்ளது. இப்போது அறுவடை வேறு துவங்கிவிட்டது.

பட மூலாதாரம், Getty Images
ஊரடங்கு அறிவிக்கும்போது உணவு தானியங்களை வழங்குவதாகச் சொன்னதைத் தவிர, வேறு எந்த அறிவிப்பும் இல்லை. அதுவும்கூட ரேஷன் கார்டு இருப்பவர்கள்தான் பெற முடியும். நமது உணவு தானியக் கிடங்குகளைத் திறந்துவிட வேண்டுமென வணிகப் பத்திரிகைகள்கூட எழுதிவிட்டன. ஆனால், அதற்கான எந்த முயற்சியும் இதுவரை நடக்கவேயில்லை.

கே. இந்த ஊரடங்கால் விவசாயத் துறை எம்மாதிரியான சிக்கல்களை எதிர்கொள்கிறது?

பட மூலாதாரம், Getty Images
ப. விவசாயத் துறை தொடர்ந்து பாதிக்கப்படும் ஒரு துறையாகத்தான் இருந்துவருகிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் கொள்முதல் விலை சற்று உயர்த்தப்பட்டது. இந்தக் கொள்முதல் விலை என்பது எல்லா பயிர்களுக்கும் கிடைக்காது. நெல், கோதுமை, பருத்தி, கரும்பு போன்ற சில வகைப் பயிர்களுக்கு மட்டும்தான் கிடைக்கும்.
தவிர, தேர்தலுக்கு முன்பு இந்த அரசு அறிவித்த பிஎம்கிஸான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பணமும் விவசாயத் தொழிலாளர்கள், குத்தகைதாரர்கள் ஆகியோருக்குக் கிடைக்காது. நில உரிமையாளருக்கு மட்டுமே கிடைக்கும். அதிலும் எல்லோருக்கும் அந்த 2,000 ரூபாய் கிடைத்ததா என்பது இனிமேல்தான் தெரியும்.

கே. ஊரடங்கு காலத்தில் விளைபொருட்களின் விலை ஏறியிருக்கிறது. இது விவசாயிகளுக்கு பலனளிக்குமா?
ப. விவசாயிகளால் தங்கள் விளைபொருட்களைச் சந்தையில் கொண்டுவந்து சேர்க்க முடியவில்லை. ஆனால், யாருமே தங்களுக்கு கூடுதல் விலை கிடைத்ததாக சொல்லவில்லை. எல்லோருக்கும் இழப்புதான் ஏற்பட்டிருக்கிறது. ஒரு விவசாயி, தன் வயலில் விளைந்ததை அறுவடை செய்தால், கூடுதல் இழப்பு ஏற்படும் நிலை இருக்கிறது. பூ விவசாயிகள் வாங்குவதற்கு ஆள் இல்லாமல், அப்படியே ட்ராக்ரை வைத்து உழுதுவிடுகிறார்கள்.
அழுகக்கூடிய பொருளாக இல்லாத கரும்பு, தேங்காய் போன்றவற்றை பயிரிட்டவர்கள் சற்று தப்பலாம். இவற்றை பத்து நாட்கள் கழித்து விற்கலாம். காய்கறிகளைப் பயிரிட்டவர்களுக்கு பெரும் இழப்புதான்.

கே. ஊரடங்கு முடிந்து தேக்க நிலை ஏற்பட்டால், பணத்தைப் பெருமளவில் அச்சிட்டு சந்தையில் விடுவது பிரச்சனையைக் குறைக்குமா?
ப. அது ஒரு வாய்ப்பு. ஆனால், நிதிப் பற்றாக்குறையில் கவனமாக இருப்பவர்கள் அதனை ஏற்கமாட்டார்கள். பணத்தை பெருமளவில் புழக்கத்தில்விட்டால், விலைவாசி அதிகரிக்கும் என்பார்கள். ஆனால், இப்போதைய சூழலைப் பார்க்கும்போது விலைவாசியெல்லாம் அதிகரிக்குமா என்பது சந்தேகம்தான். யாரிடமும் பணம் இல்லை. அப்படியிருக்கும்போது எப்படி விலைவாசி ஏறும்?
Fiscal deficit குறித்து கவலைப்பட வேண்டிய நேரமில்லை என சர்வதேச நிதியமே சொல்கிறது. ஆனால், இந்தியா மாதிரி நாடுகள் ரேட்டிங் ஏஜென்சிகள் தங்களுக்கு குறைவான தர மதிப்பீடு அளித்துவிட்டால் என்ன செய்வதென பயந்துகொண்டிருக்கிறார்கள்.

கே. இந்தச் சூழலில் பொருளாதார மீட்சிக்கான வழி என்ன?
ப. பொருளாதாரம் மீள்வதெல்லாம் இரண்டாவது கவலை. முதலில் துன்பட்டுக்கொண்டிருப்பவர்களை மீட்க வேண்டும். அவர்கள் துன்பத்தைக் குறைக்க வேண்டும். எல்லா வளங்களையும் இதற்காக பயன்படுத்த வேண்டும். மாநில அரசுகள் தங்களிடம் இருப்பதை வைத்து ஏதோ செய்கின்றன. ஒன்றிய அரசு எதையும் செய்யாமல் இருக்கிறது. ஆனால், அவர்களிடம்தான் வலிமை, வாய்ப்பு போன்ற எல்லாம் இருக்கிறது. ஆனால் அவர்கள் ஏதும் செய்யாமல் இருப்பதுதான் ஆச்சரியமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












