கொரோனா வைரஸ்: ரயில்,விமானம் - முன்பதிவு செய்யப்பட்ட கட்டணம் திரும்ப கிடைக்குமா? - விரிவான தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினமணி: பயணச்சீட்டுக் கட்டணம் திரும்ப அளிக்கப்படுமா?
நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள சூழலில், பயணிகளுக்கான ரயில், விமான சேவைகள் மே மாதம் 3-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரயில்கள் ரத்து தொடா்பாக ரயில்வே நிா்வாகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
கொரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்வதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில்கொண்டு, பயணிகள் ரயில்கள், விரைவு ரயில்கள், புகா் ரயில்கள், கொல்கத்தா மெட்ரோ ரயில்கள் உள்ளிட்ட சேவைகள் மே மாதம் 3-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ரத்து செய்யப்படுகின்றன.
நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டுசெல்லும் நோக்கில் சரக்கு ரயில்கள் தொடா்ந்து இயக்கப்படும். பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் அனைத்தும் மே மாதம் 3-ஆம் தேதி நள்ளிரவு வரை மூடப்பட்டிருக்கும். ரயில்களில் பயணச்சீட்டை முன்பதிவு செய்வதற்கான வசதி அடுத்த உத்தரவு வரும்வரை ரத்து செய்யப்படுகிறது.
'பணம் திரும்ப அளிக்கப்படும்': மே மாதம் 3-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களில் முன்பதிவு செய்தவா்களுக்கு, பயணச்சீட்டுக்கான மொத்த தொகையும் ரயில்வே நிா்வாகத்தால் வங்கிக் கணக்கில் திரும்பச் செலுத்தப்படும். எனவே, முன்பதிவு செய்தவா்கள் பயணச்சீட்டை ரத்து செய்ய வேண்டாம். அதே வேளையில், முன்பதிவு மையங்களில் பயணச்சீட்டைப் பதிவு செய்தவா்கள் அதற்கான தொகையை ஜூலை 31-ஆம் தேதிக்குள் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
ஜூன் 21-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படாத ரயில்களில் முன்பதிவு செய்துள்ளவா்கள், அதை ரத்து செய்தால் அவா்களுக்கும் பயணச்சீட்டுக்கான மொத்த தொகையும் திரும்ப அளிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
39 லட்சம் பயணச்சீட்டுகள் ரத்து: மே 3-ஆம் தேதி வரை ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்ட சுமாா் 39 லட்சம் பயணச்சீட்டுகள் ரத்து செய்யப்படவுள்ளதாக ரயில்வே அதிகாரி தெரிவித்தாா்.
கட்டணங்கள் ரத்து: அத்தியாவசியப் பொருள்கள் அன்றி மற்ற சரக்குகளை ஏற்றிச் செல்வதற்கான ரயில்களின் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சரக்குகளுக்கான வாடகைக் கட்டணம், இடப் பயன்பாட்டுக் கட்டணம், தாமதக் கட்டணம் உள்ளிட்டவை அதன் உரிமையாளா்களிடமிருந்து மே மாதம் 3-ஆம் தேதி வரை வசூலிக்கப்படாது என்று ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
முன்னதாக இந்தக் கட்டணங்கள் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்தன.
விமான சேவைகள் ரத்து: விமானப் போக்குவரத்து அமைச்சகம் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், 'சா்வதேச, உள்நாட்டு விமான சேவைகள் அனைத்தும் மே மாதம் 3-ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை ரத்து செய்யப்படுகின்றன' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விமானப் போக்குவரத்து அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 'ஊரடங்கை நீட்டிப்பதற்குப் பல்வேறு பொருத்தமான காரணங்கள் உள்ளன. சா்வதேச, உள்நாட்டு விமானங்களின் சேவைகளை அளிப்பதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளா்த்துவது தொடா்பாக மே மாதம் 3-ஆம் தேதிக்குப் பிறகு முடிவு செய்யப்படும்.
இத்தகைய இக்கட்டான சூழலில் மக்கள் எதிா்கொண்டு வரும் துயரங்களைப் புரிந்துகொள்கிறேன். எனினும், அவா்கள் அமைச்சகத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளாா்.
உள்நாட்டு மற்றும் சா்வதேச விமான சேவைகள் கடந்த மாதம் 25-ஆம் தேதி முதல் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்தன. தற்போது அது மே மாதம் 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், விமான நிறுவனங்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. அதன் காரணமாக, பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் பணியாளா்களுக்கான ஊதியத்தைக் குறைத்துள்ளன.
'பயணச்சீட்டுக் கட்டணம் திரும்ப அளிக்கப்படாது': உள்நாட்டு விமான சேவைகள் ரத்து மே மாதம் 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள சூழலில், பயணிகள் முன்பதிவு செய்த பயணச்சீட்டுக்கான கட்டணம் திரும்ப அளிக்கப்பட மாட்டாது என்று விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அதற்குப் பதிலாக அந்தப் பயணிகள் ஊரடங்கு நிறைவுக்குப் பிறகு வேறொரு நாளில் எந்தவித சேவைக் கட்டணமும் இன்றி பயணச்சீட்டை முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
- இவ்வாறாக தினமணி நாளிதழ் விவரிக்கிறது.

இந்து தமிழ் திசை: 'ஆரோக்கிய சேது' செயலி அந்தரங்க உரிமைக்கு எதிரானதா?

பட மூலாதாரம், ANII
'ஆரோக்கிய சேது' செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்த பிறகு, உங்களின் செல்போன் எண், வயது, பாலினம், இருப்பிடம் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படும். கொரோனா வைரஸ் தடுப்புக்காக சேகரிக்கப்படும் இந்த தகவல்கள், வேறு காரணங்களுக்கு பயன்படுத்தப்படவும் வாய்ப்புள்ளது என்று 'இன்டர்நெட் பிரீடம் பவுண்டேசன்' தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோதி அண்மையில் கூறும்போது, 'ஆரோக்கிய சேது செயலியை மாநிலங்களுக்கு இடையிலான பயணத்துக்கு 'இ-பாஸ்' ஆக பயன்படுத்தலாம்' என்று கூறியது நினைவுகூரத்தக்கது.

பட மூலாதாரம், GoI
ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இதுபோன்ற செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. எனினும் செயலியை பயன்படுத்துவோரின் அந்தரங்க உரிமையை பாதுகாக்கும் நடைமுறைகள் அங்கு கண்டிப்புடன் பின்பற்றப்படுகின்றன.
"கொரோனா வைரஸ் தடுப்பு பணி தவிர்த்து வேறு எந்த பணிக்கும் பயன்பாட்டாளர்களின் விவரங்களை பயன்படுத்தக்கூடாது. இதுதொடர்பாக அவ்வப்போது ஆய்வு நடத்த வேண்டும். விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டால் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும்'' என்று ஐரோப்பிய ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
ஆனால் 'ஆரோக்கிய சேது' செயலி விவகாரத்தில் அந்தரங்க கொள்கைகள், பயன்பாட்டு விதிகள் குறித்து எவ்வித சட்ட வரையறையும் இல்லை. பயன்பாட்டாளர்களின் தகவல்கள் எந்த துறை, எந்தெந்த அதிகாரிகளுக்கு அனுப்பப்படுகிறது என்ற விவரம் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நல்லெண்ணத்தில் 'ஆரோக்கிய சேது' செயலி வெளியிடப்பட்டிருந்தாலும் அந்த செயலியை பயன்படுத்துவோரின் அந்தரங்க உரிமையை பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 'இன்டர்நெட் பிரீடம் பவுண்டேசன்' உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.


பட மூலாதாரம், இந்து தமிழ் திசை

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்

தினத்தந்தி: "போதைக்காக மெத்தனாலில் தண்ணீர் கலந்து குடித்த தொழிலாளி சாவு"

பட மூலாதாரம், Getty Images
கடலூர் அருகே மெத்தனாலில் தண்ணீர் கலந்து குடித்த தொழிலாளி உயிரிழந்தார். மேலும் 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடலூர் அருகே உள்ள ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் சந்திரகாசி (வயது 50). தொழிலாளி. இவரும், அதே கிராமத்தை சேர்ந்த மாயகிருஷ்ணன் (50), எழில்வாணன்(35), சுந்தர்ராஜ் மற்றும் ஆணையம்பேட்டையை சேர்ந்த குமரேசன் (26) ஆகியோரும் நண்பர்கள். இவர்கள் 5 பேருக்கும் மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் மது குடிக்க முடியாமல் தவித்த 5 பேரும், எங்காவது மது கிடைக்குமா? என்று பல்வேறு இடங்களில் விசாரித்தனர். நேற்று முன்தினம் இரவு கிராமத்தில் வைத்து போதைக்காக ஒரு திரவத்தை குடித்ததாக கூறப்படுகிறது.
சிறிது நேரத்தில் அவரவர் வீட்டுக்கு திரும்பி சென்றுவிட்டனர். நள்ளிரவில் திடீரென சந்திரகாசிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. வலி அதிகமானதால் சந்திரகாசி அலறி துடித்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், சந்திரகாசியை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதற்கிடையே மாயகிருஷ்ணன், எழில்வாணன், சுந்தர்ராஜ், குமரேசன் ஆகியோருக்கும் வயிற்றுவலி ஏற்பட்டது. உடனடியாக அவர்களும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரகாசி பரிதாபமாக உயிரிழந்தார்.
மற்ற 4 பேருக்கும் டாக் டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுபற்றி தகவல் அறிந்ததும் புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் பூச்சிக்கொல்லி ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்த குமரேசன், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆலையில் இருந்து ஒரு லிட்டர் மெத்தனால் திரவத்தை தனது கிராமத்துக்கு எடுத்து சென்றார். பின்னர் அதை தண்ணீரை கலந்து தனது நண்பர்களுடன் சேர்ந்து போதைக்காக குடித்துள்ளார். இதில் சந்திரகாசி உயிரிழந்து விட்டார் என்பது தெரியவந்தது. இதற்கிடையே மெத்தனால் திரவம் வெளியே கொண்டு செல்லும் வகையில் செயல்பட்ட, சம்பந்தப்பட்ட ஆலைக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












