கொரோனா வைரஸ்: சமத்துவமும் நீதியும் நிறைந்த சமூகத்தை கட்டமைப்பதற்கான வாய்ப்பா? இந்தியா என்னவாகும்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரீதிகா கேரா
- பதவி, பிபிசிக்காக
பல நாடுகளை அழித்த அதே இரண்டாம் உலகப் போர்தான் புதுவகை சமூகத்தை உருவாக்குவதற்கான களமாகவும் ஆனது. கொரோனாவுக்குப் பிறகு இவ்வுலகு என்னவாக மாறலாம்?
இரண்டாம் உலகப் போர்
இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் இருந்த உலகத்தின் நிலைமைக்கும் தற்போதைய கொரோனா தொற்றுக் காலத்தில் உலகத்தின் நிலைமைக்கும் நிறைய ஒற்றுமை உண்டு.

பட மூலாதாரம், Getty Images
இரண்டாம் உலகப் போரின்போது பல லட்சம் மக்கள் இறந்தனர், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது, ஹிட்லரைப் போன்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் அதிகாரத்தில் இருந்தார்கள்.
பல நாடுகளை அழித்த அதே இரண்டாம் உலகப் போர்தான் புதுவகை சமூகத்தை உருவாக்குவதற்கான களமாகவும் ஆனது.

பட மூலாதாரம், Getty Images
பிரிட்டனில் அனைவருக்கும் சுகாதார சேவை வழங்கும் நேஷனல் ஹெல்த் சர்வீஸ் (தேசிய சுகாதார சேவை) அப்போதுதான் உருவாக்கப்பட்டது. இதற்காக பெவன் பிரபுவுக்கும் மருத்துவர்கள் சங்கத்துக்கும் இடையே பல ஆண்டுகால கடுமையான பேச்சுவார்த்தைக்குப் பிறகே இது சாத்தியமானது. அதுவரை மருத்துவர்களின் பணி தனியார் துறையில்தான் இருந்தது.
சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்
இதே காலத்தில்தான் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. வேலையில்லாக் கால உதவித்தொகை வழங்கும் திட்டம் அமலுக்கு வந்தது.

பட மூலாதாரம், Getty Images
அதேநேரம், மக்கள் தொகையில் பெரும்பகுதி முறைசார்ந்த, திரட்டப்பட்ட தொழிலாளர்களாக, பணியாளர்களாக ஆனது. இதனால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை பெருகியது. தாங்கள் செலுத்தும் வரி, இலவசக் கல்வியாக, சுகாதார சேவையாக, சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்களாக தங்களுக்கே திரும்பி வருவதை மக்கள் கவனித்தனர். இதனால் அரசாங்கங்கள் 30 முதல் 50 சதவீதம் வரையில் வரிவிதிக்க முடிந்தது.
மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு இந்த மாதிரி கடந்த 50 ஆண்டுகளாக நன்கு வேலை செய்தது. அதிக வரிவிகிதம் தொழில் முனைவுக்கோ, ஊக்கத்துக்கோ கேடு எதையும் விளைவிக்கவில்லை என்பதை வாசகர்களுக்கு நினைவுபடுத்துகிறோம். அந்த கால கட்டத்தில் மக்களும், அரசியல்வாதிகளும், அப்போதிருந்த சிக்கலை, மேலும் மனிதத்தன்மை மிக்க உலகைப் படைப்பதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டனர்.
இரண்டாம் உலகப் போரின்போது குண்டுகள் விழுந்தால் அவை ஏழை, பணக்காரன் என்று தரம் பிரித்துப் பார்ப்பதில்லை என்பதை மக்கள் உணர்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. கொரோனா வைரசும் அப்படியே ஏழை, பணக்காரன் பேதம் பார்க்காமல் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

பட மூலாதாரம், Getty Images
மூன்றடுக்கு சிக்கல்
இன்று இந்தியா மூன்றடுக்கு சிக்கலை சந்திக்கிறது. ஒன்று கொரோனா வைரசால் ஏற்படும் சுகாதாரச் சிக்கல், இரண்டாவது தொற்று பரவியதால் அமல்படுத்த நேர்ந்த முடக்க நிலை அல்லது ஊரடங்கு. மூன்றாவது, திடீரென, திட்டமிடாமல் அமல்படுத்தப்பட்ட முடக்க நிலையால் ஏற்பட்ட மானுட சிக்கல்.
முடக்க நிலையால் ஏற்படும் பொருளாதாரத் தாக்கம் நம் அனைவராலும் உணரப்படும். கொடூரமான அந்த வைரஸ் தொற்றாமல் தப்பியவர்களும்கூட இதில் இருந்து தப்ப முடியாது.
(20 சதவிதம் பேருக்கு இந்த வைரஸ் தொற்றவும், அப்படித் தொற்றியவர்களில் 1 முதல் 3 சதவீதம் பேர் இறக்கவும் வாய்ப்புள்ளது என்கிறது ஒரு மதிப்பீடு.)
இந்தியாவில் பல்வேறு வேலை செய்கிறவர்களில் 17 சதவீதம் பேர், அதாவது சுமார் ஐந்தில் ஒருவர், சம்பளம் வாங்கும் வேலையில் இருக்கின்றனர். மூன்றில் ஒருவர் கூலி வாங்கும் தற்செயல் தொழிலாளர்கள், வேலை செய்கிறவர்களில் சுமார் சரிபாதி பேர் பல்வேறு விதமான சுய தொழில் செய்வோர். காய்கறிக் கடைக்காரர்கள், தள்ளுவண்டி கடை நடத்துவோர், தையல்காரர்கள், மெக்கானிக்குகள், சைக்கிள் ரிப்பேர் செய்வோர், உணவகங்கள் நடத்துவோர், கடைக்காரர்கள், பெரிய வியாபாரம் செய்வோர், தொழில் முனைவோர் உள்ளிட்டோர் இந்தப் பிரிவில் அடக்கம். ஊதியம் பெறாத இந்தப் பிரிவில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்த முடக்க நிலையால் வாழ்வாதாரச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால், இந்தியாவில் முடக்க நிலையின் பொருளாதார விளைவுகள், மற்ற நாடுகளை ஒப்பிடும்போது வேறுபட்டதாக இருக்க வாய்ப்புள்ளது. முடக்க நிலை அமல்படுத்தப்பட்ட ஒரு வாரத்திலேயே, வந்திருக்கிற செய்திகளைத் தொகுத்துப் பார்க்கும்போது பசி, வெப்பம், களைப்பு, சாலை மூடல், தற்கொலை போன்ற காரணங்களால் 40 முதல் 90 பேர் வரை இறந்திருக்கிறார்கள்.
முடக்கநிலை அறிவித்துள்ள பிற நாடுகளில், பெரும்பாலான மக்கள் சம்பளம் வாங்குகிறவர்கள், அவர்களில் பலருக்கு சமூகப் பாதுகாப்பு அல்லது வேலையில்லாக் கால நிவாரணங்கள் உண்டு. அந்த நாடுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 முதல் 10 சதவீதம் சுகாதாரத் துறைக்கு செலவிடப்படுகிறது. இந்தியாவில் அரசாங்கம் 1 சதவீதம்தான் சுகாதாரத் துறைக்கு செலவிடுகிறது.
அந்த வகையில், இந்தியாவில், மேலை நாடுகளில் உள்ளவர்களைப் போன்றே வாழ்க்கை முறை அமைந்திருக்கிற சமூகப் பிரிவினருக்கு உதவி செய்யும். சம்பள வருவாய் அல்லது சேமிப்பு உள்ளவர்களுக்கு இந்த முடக்க நிலையில் தாக்குப் பிடிப்பதற்கான பொருளாதார வலு இருக்கும். அவ்வப்போது சோப்பு போட்டு கைகழுவ உதவும் வகையில், குழாயில் தண்ணீர் வருகிற, நாகரிகமான வீடுகளில் இருப்பவர்களுக்கு வீடுகளிலேயே முடங்கியிருப்பதால் சுகாதார இடர்ப்பாடு குறையும். வீடுகளிலே இருப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படும் என்பதால் மீண்டும் தூர்தர்ஷனில் ராமாயணம் ஒளிபரப்பும் அளவு அரசாங்கம் கருணையோடு இருக்கிறது. ஆனால், இதெல்லாம் 30 சதவீதம் மக்களுக்குதான்.
ஆனால் மீதி 70 சதவீதம் பேருக்கு வீட்டிலேயே தங்குவது சுகாதார இடர்பாட்டை ஏற்படுத்தக்கூடியது. ஏனெனில் அவர்கள் நெருக்கடியான வீடுகளில் வசிப்பவர்கள் என்பதால் வைரஸ் சமூகத் தொற்று மூலம் பரவும் வாய்ப்பு அதிகம். பொருளாதார ரீதியாக முடக்கநிலை அவர்களுக்கு பேரழிவு. சம்பாதித்தால்தான் அவர்களால் சாப்பிட முடியும். மாநகரங்களில் உள்ளவர்கள் வாடகை கொடுப்பதெல்லாம்கூட பிறகுதான்.
அந்த தொழிலாளிகளில் பலர் புலம் பெயர்ந்து, தங்கள் வீடுகளில் இருந்து, சொந்த ஊர்களில் இருந்து பல நூறு கிலோமீட்டர் கடந்து சென்று வசித்தவர்கள், வேலை செய்தவர்கள். சரியாகச் சொன்னால், அவர்கள் தங்களுடைய வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல 4 மணி நேரம்தான் தரப்பட்டது. இந்த மக்களில் பலர் தற்போது பட்டினியின் விளிம்பில் வசிக்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம் எளிதில் நொறுங்கிவிடக்கூடியது. திடீர் முடக்கநிலை அல்லது ஊரடங்கு அறிவிப்பு என்பது அவர்களுக்கு வாழ்வதற்கும் சாவதற்கும் இடையிலான வேறுபாட்டைப் போன்றது. அதனால்தான் அவர்களில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகள் பல நூறு கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருந்தாலும் நடந்தாவது திரும்பிச் சென்றுவிடவேண்டும் என்று அவர்கள் முடிவு செய்தது அதனால்தான்.
அவர்களது முதல் தேவை உணவுக்கு உத்தரவாதம். பொது விநியோக தானியப் பங்கீட்டின் அளவை மூன்று மாதங்களுக்கு இரட்டிப்பாக்குவதாக அரசு அறிவித்தது வரவேற்கத்தக்க முடிவு. ஆனால், இதன் மூலம் பலன் பெறுவதற்கு அவர்கள் முதலில் தங்களுடை வீடுகளுக்குத் திரும்பிச் சென்றாகவேண்டும்.
பள்ளிகள், சமூக கூடங்களில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டு, சமுதாய சமையலறைகள் மூலம் அவர்களுக்கு உணவு விநியோகம் செய்யப்படும் என்று முடக்கநிலை அறிவிப்பின்போதே உறுதி அளித்திருந்தால் அது மிகவும் நன்றாக இருந்திருக்கும். மிகையான உணவுக் கையிருப்புதான் இன்று உணவு அமைச்சகம் எதிர்கொள்ளும் பிரச்சனை. இந்நிலையில் அந்த மிகையான உணவு தானியக் கையிருப்பை இதைவிட எப்படி நல்ல முறையில் பயன்படுத்த முடியும்? இப்போதும்கூட முழுமையாக காலம் கடந்துவிடவில்லை. தங்கள் வீடுகளை நோக்கி பாதி தொலைவில் சென்று கொண்டிருப்பவர்களுக்காக கூட இந்த அறிவிப்பை செய்ய முடியும்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

புலம் பெயர் தொழிலாளர்கள்

பட மூலாதாரம், Getty Images
கொரோனாவுக்கு எதிராக முடக்கநிலைதான் ஒரே தீர்வாகத் தோன்றியிருக்கும் என்றால், புலம் பெயர் தொழிலாளர்களுக்காக குறைந்தபட்சம், 2 முதல் 4 நாள் வரை கால அவகாசம் தந்திருக்கவேண்டும் அரசாங்கம். அதன் பிறகே பேருந்துகள், ரயில்கள் நிறுத்தப்பட்டிருக்கவேண்டும். ஏனெனில் அவர்களின் சொந்த கிராமங்களில் குறைந்தபட்சம் அவர்களின் தலைக்கு மேல் ஒரு கூரைக்கும் கொஞ்சம் உணவுக்கும் உத்தரவாதம் உண்டு.
அவர்களைப் பற்றி அரசு முன்கூட்டியே சிந்திக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. பிறகு, தங்கள் குடும்பத்தோடும், எளிய உடைமைகளோடும் புலம் பெயர் தொழிலாளர்கள் நடந்தே பயணிப்பதைக் காட்டும் படங்கள் வெளியாயின. நடந்து செல்லமுடியாத அளவு தங்கள் இடங்கள் தொலைவில் இருப்பதால் நடக்கத் தொடங்காதவர்கள் வீடியோ மூலம் தங்கள் மாநில முதல்வர்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். தங்களால் எவ்வளவு காலத்துக்கு வெறும் தண்ணீரைப் பருகியே வாழ முடியும் என்று கேட்ட அவர்கள்கள் தங்களை தங்கள் ஊருக்கு கொண்டுபோய் விடும்படி கேட்டனர்.
அவர்களின் பரிதாப நிலை குறித்த கூக்குரல்கள் எழுந்தபோது, அவர்களுக்காக ஏதாவது நிவாரண அறிவிப்பு வரும் என்றுகூட சிலர் எதிர்பார்த்தனர். ஆனால் நிதியமைச்சர் வெளியிட்ட நிவாரண அறிவிப்புகளில் அவர்களுக்கானது எதுவும் இல்லை. உணவுக்கான அறிவிப்பும் இல்லை. இருப்பிடத்துக்கான அறிவிப்பும் இல்லை.
பலவீனமானவர்களுக்கு உணவு, பணம் இரண்டும் சேர்த்த நிவாரணம் தரவேண்டும் மத்திய அரசு. ஜன் தன் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு ரூ.5 ஆயிரம் தருவது போதுமானதல்ல. நோய்ப் பரவலைத் தடுக்கவேண்டும் என்பதற்காக தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால், அடுத்த 3 மாதங்களுக்கு அவர்களுக்கு 10 நாள்களுக்கான ஊதியம் தரப்படவேண்டும். பிறகு அவர்களுக்கு வேலை தரலாம். 2006ம் ஆண்டு முதல் வயோதிகர் ஓய்வூதியத் திட்டத்துக்கு ஆள் ஒருவருக்கு ரூ.200 பங்களிப்பாகத் தருகிறது மத்திய அரசு. இத்தொகையை அதிகரிக்கவேண்டும்.
பொருளாதாரச் சிக்கல் மட்டுமல்ல
பொருளாதாரச் சிக்கல் மட்டுமல்ல இது. சமூகரீதியிலான சவாலும்கூட. துயரத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்ய எவ்வளவு பேர் முன் வந்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்க மனம் நெகிழ்கிறது. ஆனால் ஒன்றை நாம் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். இது போன்ற சூழ்நிலைகளுக்காகவே அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கிறோம். அரசாங்கத்தின் கடமையை தனியார் அற உதவிகளால் பதிலீடு செய்ய முடியாது.

பட மூலாதாரம், Getty Images
லண்டனில் இருந்து திரும்ப வந்து, உத்தரவைப் புறக்கணித்து, தம்மைத் தாமே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற அறிவுரையை உதாசீனம் செய்த, கல்விகற்றதாக சொல்லிக்கொள்கிற நபர்களை நாம் கண்டுகொள்ளாமல் விடமுடியாது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிற டாக்டரை வீட்டை காலி செய்யச் சொல்லிய வீட்டு உரிமையாளர்கள் பற்றிய மற்றொரு செய்தியும் வந்தது.
புரிதலின்மையைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் சோதனைகளை, அவர்களுக்குப் போலீஸ் இழைத்த கொடுமைகளை காட்டும் காட்சிகள் நம் திரைகளுக்கு ஏராளமாக வந்தன. இவை அரசின் கூர்மையான கண்களில் மட்டும் படாமல் போயிருக்குமா? அப்படிப் போயிருக்கும் என்றால், முடக்க நிலையை மீறுவோருக்கு விளையாட்டு அரங்கத்தை தற்காலிக சிறைச்சாலையாகப் பயன்படுத்தும் அரசின் முடிவை எப்படிப் புரிந்துகொள்வது? மிகச்சரியாக அதே நேரத்தில், தாம் வீட்டில் ராமாயணம் பார்க்கும் படத்தை ட்விட்டரில் பகிர ஒரு அமைச்சர் முடிவெடுத்ததை எப்படிப் புரிந்துகொள்வது?
வீடு திரும்ப முயற்சித்த தொழிலாளர்களை ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கண்டித்தார். அவர்களுக்கு ஒன்றும் கிராமத்தில் வேலை காத்துக்கொண்டிருக்கவில்லை என்றும், விடுமுறையைக் கழிக்கவே அவர்கள் கிராமத்துக்குச் செல்ல விரும்புகிறார்கள் என்றும் அவர் கருதினார்.
மிகச் சிறப்பான தருணங்களில்கூட கொள்கை வகுக்கும்போது நாட்டின் 70 சதவீத மக்களைக் கணக்கில் கொள்வதே இல்லை. இவ்வளவு பிரும்மாண்டமான மக்கள் பிரிவினர் நாட்டின் கொள்கை வகுப்பவர்கள் கண்களுக்குத் தெரிவதே இல்லை என்பதை வளர்ச்சிப் பொருளியலாளர்கள் கவனித்து வந்துள்ளனர். கூருணர்ச்சி மிக்க பத்திரிகையாளர்களுக்கு கூட உலகம் சிறு குறு விவசாயிகளோடு உலகம் முடிந்துவிடுகிறது. அவர்கள் கண்களுக்கு விவசாயத் தொழிலாளர்கள் தெரிவதில்லை. முடக்கநிலை அவர்களில் பலரை நம் கண்களுக்குத் தெரியவைத்திருக்கிறது, முதல் முறையாக.
நம்பிக்கை அளிக்கின்றன

பட மூலாதாரம், Getty Images
மனம் கலங்க வைக்கும் இந்தக் காலத்தில்கூட, பல மாநில அரசுகள் எடுக்கும் முன் நடவடிக்கைகள் நம்பிக்கை அளிக்கின்றன. கேரளத்திலும், தமிழ்நாட்டிலும் (அம்மா உணவகம் போல) உள்ள சமூக உணவகங்கள் பயன்மிக்க பணியைச் செய்கின்றன. முடக்கத்தால் வெளியே மாட்டிக்கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தவருக்கு அந்த மாநில அரசு இலவசமாகப் போக்குவரத்து ஏற்பாடு செய்து தந்தது. ஒடிஷா மாநில அரசு தங்குமிடங்கள் அமைத்துள்ளது. அங்கு வந்து சேருகிற புலம் பெயர் தொழிலாளர்கள் சோதனை செய்யப்படுகிறார்கள். அங்கு அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. சில மாநில முதல்வர்கள் மற்ற மாநில முதல்வர்களுடன் ஒருங்கிணைந்து நிவாரண உதவிகளைத் திட்டமிடுகிறார்கள்.
சுகாதாரத்தைப் பொறுத்தவரை, பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், சுகாதாரப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதும் அவசரத் தேவைகள். இந்த சிக்கல் நீடிக்கும் குறுகிய காலத்துக்காக என்றாலும்கூட தனியார் மருத்துவமனைகளை அரசு கையகப்படுத்தவேண்டும். ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில அரசுகள் ஏற்கெனவே சில மருத்துமனைகளை கையகப்படுத்திவிட்டன. யாருக்கும் சிகிச்சை மறுக்கப்படாமல் கிடைப்பதை இது உறுதி செய்யும்.
கடந்த பல பதிற்றாண்டுகளாக சுகாதார அமைப்புக்கு செலவிடாமல்விட்டது பெரும் பிழை என்பதை உணர்வதற்கு இதுதான் நேரம். விமானப்படை விமானங்களைத் தயாரிப்பது, பெரிய மேம்பாலங்களைக் கட்டுவது போன்ற நடவடிக்கைகளால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்வதைப் போலவே மருத்துவமனைகளைக் கட்டுவதாலும்கூட உயரும் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். கல்விக்கும், சுகாதாரத்துக்கும் நாம் போதிய கவனத்தை செலுத்தியிருந்தால், இது போன்ற உலகளாவிய தொற்றை சமாளிக்க நாம் இன்னும் சிறப்பான முறையில் தயாராக இருந்திருப்போம்.
நீண்ட கால நோக்கில், எதிர்காலத்துக்கு என்ன மாதிரியான சமூகத்தை நாம் கட்டமைக்கவேண்டும் என்பது பற்றி நாம் சிந்திக்கவேண்டும். அது சமத்துவம், நீதி ஆகியவற்றின் அடிப்படையிலான கூருணர்ச்சியுள்ள சமூகமாக இருக்கவேண்டுமா? அல்லது நாம் தற்போது வாழ்ந்துகொண்டிருப்பதைப் போன்ற சாதி, வகுப்பு, மதம், பாலினம் ஆகிய அடிப்படைகளின் பேரில் பிளவுண்ட சமூகமாக இருக்கவேண்டுமா?
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












