கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியது

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரிட்டன் பிரதமர், உலகத்திலேயே முதல்முறையாக அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு உள்ளான புலி. கொரோனா தொடர்பாக சர்வதேச அளவில் நடக்கும் நிகழ்வுகளின் தொகுப்பு.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. உலகம் முதல் உள்ளூர் வரை சமீபத்திய நிலவரம் என்ன?

    சமீபத்திய நிலவரம் குறித்த இன்றைய நேரலைப் பக்கத்துக்குச் செல்ல கீழே உள்ள இணைப்பைச் சுட்டவும்.

  2. நன்றி நேயர்களே!

    இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.

    நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும். மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.

  3. “இலங்கையில் 2000 பேருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும்”

    இலங்கையில் இதுவரை 178 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

    இவர்களில் ஐவர் உயிரிழந்துள்ள அதேவேளை, 34 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவிக்கின்றது.

    அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான 137 பேர் தொடர்ந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து விரிவாக படிக்க: இலங்கையில் கொரோனா வைரஸ் நிலவரம் என்ன?

    இலங்கை

    பட மூலாதாரம், Getty Images

  4. “ஐரோப்பிய ஒன்றியம் மிகப்பெரிய சவாலை எதிர் கொண்டுள்ளது”

    ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப்பட்டதிலிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சவாலை கொரோனா வைரஸின் காரணமாக சந்தித்து வருவதாக ஜெர்மனியின் சான்சலர் ஏங்கலா மெர்கல் தெரிவித்துள்ளார்

    கோவிட்-19 பாதிப்பிலிருந்து ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் மீண்டு வருவது மிகவும் அவசியம் என்றும் மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான கருவிகளை உற்பத்தி செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

    “ஐரோப்பிய ஒன்றியம் மீண்டெழுந்தால்தான் நீண்டகால அடிப்படையில் ஜெர்மனியும் சிறப்பாக செயல்படும்” என்று தனது அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு பேசிய ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.

    கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் கொண்ட நான்காவது நாடாக விளங்கும் ஜெர்மனியில், இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,590 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுத்தளம் கூறுகிறது.

    ஜெர்மனியின் சான்சலர் ஏங்கலா மெர்கல்

    பட மூலாதாரம், AFP

    படக்குறிப்பு, ஜெர்மன் சான்சலர் ஏங்கலா மெர்கல்
  5. இந்தியாவில் ஒரே நாளில் 693 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 704 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறிப்பட்டுள்ளது.

    இதன் மூலம், இன்று (திங்கட்கிழமை) மாலை வரை இந்தியாவில் 4,281 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,445 பேர் தப்லிக் ஜமாத் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.

    மேலும் பாதிக்கப்பட்டவர்களில் 76 சதவீத பேர் ஆண்கள் மற்றும் 24 சதவீத பெண்கள் என மத்திய சுகாதாரத் துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

  6. டொனால்டு டிரம்பின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டாரா நரேந்திர மோதி?

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் கோரிக்கையை ஏற்றுகொண்டு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கு இந்திய அரசு ஆலோசனை செய்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸுக்கு எதிரான “யுத்தத்தின் போக்கை மாற்றக்கூடியது” என்று இந்த மருந்தை டிரம்ப் கூறியிருந்தார்.

    மலேரியாவை குணப்படுத்தவல்ல குளோரோகுயின் எனும் மருந்தை ஒத்த ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு கடந்த சனிக்கிழமை இந்திய அரசு தடைவிதித்தது. அதற்கு அடுத்த நாளே இந்திய பிரதமர் நரேந்திர மோதியிடம் தொலைபேசி வாயிலாக பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்வதில் இருந்து அமெரிக்காவுக்கு விலக்கு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

    டிரம்ப்

    பட மூலாதாரம், Getty Images

  7. 1,200 கி.மீ நடந்தே தமிழகம் வந்த இளைஞர்கள்: நடந்தது என்ன?

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்த நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த ஏழு இளைஞர்கள் அங்கிருந்து தமிழகத்திற்கு நடந்தே வந்துள்ளனர்.

    அதுகுறித்த காணொளி இதோ:

  8. சிக்கலில் பிரான்ஸ் நாட்டின் பொருளாதாரம்

    இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் மிகப்பெரிய பொருளாதார பிரச்சனையை கொரோனா வைரஸின் காரணமாக பிரான்ஸ் எதிர்கொண்டுள்ளதாக அந்த நாட்டின் நிதி அமைச்சர் புருனோ லு மைர் தெரிவித்துள்ளார்.

    2020இல் பிரான்சின் பொருளாதார வளர்ச்சி ஒரு சதவீதம் குறைவாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு இருந்த நிலையில், தற்போது அது கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தலால், 2009ஆம் ஆண்டு பொருளாதார மந்தநிலையின் போது ஏற்பட்ட -2.2 வீழ்ச்சியை விடவும் மோசமான நிலையை அடையும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  9. ஈக்குவேடாரில் நிலவும் பரிதாப நிலை

    கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உலக நாடுகள் திணறி வரும் நிலையில், ஈக்வேடார் நாடு கொரோனாவால் மரணமடைந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய இடமில்லாமல் தவித்து வருகிறது.

    தென் அமெரிக்க கண்டத்தில் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடாக ஈக்வேடார் உள்ளது. குறிப்பாக அந்த நாட்டின் மிகப்பெரிய நகரமான குவயாகீலில், நூற்றுக்கணக்கானோர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர்.

    ஈக்வேடார்

    பட மூலாதாரம், AFP

  10. கொரோனா வைரஸின் இசை வடிவம் தயார்

    கொரோனா வைரஸ் எப்படி இருக்கும் என்று நீங்கள் புகைப்படங்களில், காணொளிகளில் பார்த்திருக்கலாம். ஆனால், முதல் முறையாக மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் கொரோனா வைரஸின் கட்டமைப்பை இசை வடிவமாக மாற்றியுள்ளனர்.

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸின் இந்த இசை வடிவம், இந்த நோய்த்தொற்று குறித்து நுண்ணோக்கி மூலம் விஞ்ஞானிகளால் காண முடியாததை விளக்கும் என்று அந்த பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    கொரோனா வைரஸின் தொற்றுத் தன்மைக்கு காரணமான அதன் புரதங்களின் கட்டமைப்பு குறித்து அறிவதற்காக தங்களது குழுவினர் ஏற்கனவே இந்த இசை வடிவத்தை பயன்படுத்தி அதன் அதிர்வு கட்டமைப்பை பகுப்பாய்வு செய்துள்ளதாக பேராசிரியர் மார்க்கஸ் கூறுகிறார்.

    “கொரோனா வைரஸின் அதிர்வு கட்டமைப்பை புரிந்துகொள்வது, இந்த நோய்த்தொற்று எதிரான மருந்துகளை உருவாக்குவதற்கு மிகவும் பயன்படும்.”

    கொரோனா வைரஸ்

    பட மூலாதாரம், Getty Images

  11. தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று

    தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) மேலும் 50 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதன் மூலம், தமிழகத்தில் கோவிட்-19 நோய்த்தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 621ஆக அதிகரித்துள்ளது.

    மேலும், தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், இதன் மூலம் இதுவரை உயிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

  12. சீனாவிலிருந்து தமிழகம் வரும் மருத்துவ கருவிகள்

    கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை உடனடியாக சோதித்து முடிவுகளைத் தெரிவிக்கும் 'கிட்'களை சீனாவிலிருந்து தமிழ்நாடு வாங்கவிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ஒரு லட்சம் கிட்கள் வரும் 9ஆம் தேதி தமிழகத்திற்கு வருமென்றும் அவர் கூறியிருக்கிறார்.

    கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொளி அழைப்பு மூலம் ஆய்வுக்கூட்டம் ஒன்றை நடத்தினார் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், அரசு மருத்துவமனைகளுக்கென 2,500 வென்டிலேட்டர்கள் வாங்குவதற்கான ஆணையும் பிறப்பிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

    சீனாவிலிருந்து தமிழகம் வரும் மருத்துவ கருவிகள்

    பட மூலாதாரம், Facebook

  13. கொரோனா வைரஸ்: உலகளவில் உயிரிழப்பு 70 ஆயிரத்தை தாண்டியது

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, உலகிலேயே அதிகபட்சமாக இத்தாலியில் 14,887 பேரும் ஸ்பெயினில் 13,055 பேரும் பிரான்சில் 8,088 பேரும் இதுவரை கோவிட்-19 நோய்த்தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

    அதேபோன்று, உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,86,409ஆக உள்ளது அதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 3,37,933 பேரும் ஸ்பெயினில் 135,032 பேரும் இத்தாலியில் 1,28,948 பேரும் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அதே சமயத்தில் உலகம் முழுவதும் 2,76,098 பேர் கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து முற்றிலும் குணமடைந்துள்ளனர் என்று அந்த தரவுத்தளம் கூறுகிறது.

    கொரோனா வைரஸ்

    பட மூலாதாரம், Getty Images

  14. இந்தியாவுக்கு மூன்று மில்லியன் டாலர்கள் நிதியுதவி - அமெரிக்க அரசு அறிவிப்பு

    கொரோனா வைரஸூக்கு எதிரான இந்தியாவின் முயற்சிகளுக்கு அமெரிக்க அரசாங்கம் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் டாலர்களை நிதியுதவியாக அறிவித்துள்ளது.

    இந்த நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு யு.எஸ்.ஐ.ஐ.டி., நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் மற்றும் பிற அமெரிக்க அரசு துறைகள் இந்தியாவுடன் இணைந்து செயல்படும் என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் கூறினார்.

    "கோவிட் -19 நோய்த்தொற்று உலகளாவிய பொது சுகாதார அச்சுறுத்தலாகும். இதை உலக நாடுகளின் அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கிடையேயான நெருக்கமான ஒத்துழைப்பால் சிறப்பாக எதிர்கொள்ள முடியும்" என்று ஜஸ்டர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சிக்கான அமைப்பு (யு.எஸ்.ஐ.ஐ.டி.) மற்றும் இந்தியாவில் சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள உலக சுகாதார அமைப்பின் இந்திய பிரிவு ஆகியவற்றின் செயல்பாடுகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அவர் மேலும் அறிவித்துள்ளார்.

  15. ஸ்பெயினில் தொடர்ந்து குறையும் உயிரிழப்புகள்

    ஸ்பெயினில் தொடர்ந்து நான்காவது நாளாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

    ஸ்பெயினில் இன்று (திங்கட்கிழமை) கோவிட்-19 நோய்த்தொற்றின் காரணமாக 637 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது நேற்று 674ஆக இருந்தது. இதன் மூலம் மார்ச் 24 முதலான கடந்த இரண்டு வார காலத்தில் ஸ்பெயினில் பதிவாகும் குறைந்தபட்ச உயிரிழப்பாக இது உள்ளது.

    இருப்பினும், இன்று (திங்கட்கிழமை) ஸ்பெயினில் மேலும் 4,273 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸால் உலகிலேயே இரண்டாவது அதிகபட்ச உயிரிழப்புகளை கண்டுள்ள ஸ்பெயினில் அந்த நோய்த்தொற்றின் தாக்கம் உச்சநிலையை அடைந்துவிட்டதாக அந்த நாட்டு அதிகாரிகள் நம்புகின்றனர்.

    ஸ்பெயின்

    பட மூலாதாரம், Getty Images

  16. “இத்தாலி, ஸ்பெயின் நம்பிக்கையளிக்கிறது” - அமெரிக்கா

    கொரோனா வைரஸால் உலகிலேயே மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளான இத்தாலி மற்றும் ஸ்பெயினில் கடந்த சில நாட்களாக அந்த நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது, அமெரிக்காவின் "எதிர்காலம் என்னவாக இருக்கும்" என்பதில் "நம்பிக்கையைத் தருகிறது" என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் கொரோனா வைரஸ் தொடர்பான ஆலோசகர்களில் ஒருவரான டெபோரா பிர்ஸ் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் மையமாக விளங்கும் நியூயார்க் நகரத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த நோய்த்தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

    “பல வாரங்களுக்கு முன்னர் நியூயார்க் உள்ளிட்ட அமெரிக்க நகரங்களில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் வரும் வாரத்தில் கட்டுக்குள் வரும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று டெபோரா தெரிவித்துள்ளார்.

    கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் இதுவரை 337,274 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 9,619 பேர் உயிரிழந்துள்ளனர்.

    டெபோரா பிர்ஸ்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, டெபோரா பிர்ஸ்
  17. கொரோனா பரிசோதனை மையத்தை அடித்து நொறுக்கிய மக்கள்

    மேற்கு ஆஃப்ரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில், தங்கள் பகுதிக்கு அருகே அமைக்கப்பட்ட கொரோனா வைரஸ் பரிசோதனை மையத்தின் வாயிலாக தங்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தில் மக்கள் அதை அடித்து நொறுக்கினர்.

    இன்னும் கட்டுமானத்தில் உள்ள அந்த பரிசோதனை மைய கட்டடத்தை அடித்து நொறுக்கும் காணொளியில், “எங்களுக்கு இது வேண்டாம்” என்று மக்கள் கூறுவதைப் போன்று காட்சிகள் உள்ளன.

    இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அந்த நாட்டின் சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர், அந்த இடத்தில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு திட்டம் எதுவும் இல்லை என்றும் அது பரிசோதனை மேற்கொள்வதற்காக மட்டுமே அமைக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    ஐவரி கோஸ்ட்டில் இதுவரை 260 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அந்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

  18. ஆப்கானிஸ்தானில் கொரோனா வைரஸால் முதல் மருத்துவர் உயிரிழப்பு

    கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஆப்கானிஸ்தானில் முதல் முறையாக மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளதை பிபிசியிடம் அந்த நாட்டின் சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

    காபூலில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்துகொண்டிருந்த அந்த மருத்துவரின் உடன் பணிபுரியும் 20 பேருக்கு தற்போது கோவிட்-19 நோய்த்தொற்று பரவியுள்ளதா என்பதை கண்டறிய அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    ஆப்கானிஸ்தானில் இதுவரை 367 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், 10 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, இரானுடனான எல்லைப்பகுதியில் அமைந்துள்ள ஹேரத் மாகாணம் இந்த நோய்த்தொற்று தாக்குதலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தான், போரினால் பாதிக்கப்பட்டது மட்டுமின்றி, பலவீனமான பொது சுகாதார அமைப்பைக் கொண்டுள்ளது. தொற்றுநோயை எதிர்த்துப் போராட தங்கள் நாட்டுக்கு சர்வதேச ஆதரவு கிடைக்காவிட்டால், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது.

    ஆப்கானிஸ்தானில் கொரோனா வைரஸால் முதல் மருத்துவர் உயிரிழப்பு

    பட மூலாதாரம், Reuters

  19. சிங்கப்பூர் - கொரோனா நிலை

    சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 120 புதிய கொரோனா தொற்று நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். குறிப்பாக வெளிநாட்டு பணியார்கள் தங்கியிருந்த இரண்டு முகாம்கள், புதிய கொரோனா தொற்றுக்கான மையமாக இருந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து, சுமார் 20,000 வெளிநாட்டு பணியாளர்கள் தங்களுடைய முகாம்களில் வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டுள்ள நாட்களில், அந்த பணியாளர்களுக்கான ஊதியம், உணவு, பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவை அளிக்கப்படும் என சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

    ஆனால் ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ள தனிமைப்படுத்தப்பட்டுள்ள வெளிநாட்டு பணியாளர்கள் சிலர், தங்கள் அறைகளில் கழிவறை நிரம்பி வழிவதாகவும், உணவுக்கு வரிசையில் நிற்க வேண்டி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். தற்போது வரை சிங்கப்பூரில் 1300 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

  20. கொரோனா வைரஸ்: கனிகா கபூர் குணமடைந்தார்

    கனிகா கபூர்

    பட மூலாதாரம், Instagram

    உத்தர பிரதேசத்தில் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகி கனிகா கபூரின் 6-வது ரத்த சோதனை முடிவு நெகட்டிவ்வாக வந்ததையடுத்து அவர் வீடி திரும்பினார்.

    மார்ச் 19ஆம் தேதி பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    மார்ச் மாதம் லண்டனிலிருந்து இந்தியா திரும்பிய அவருக்கு நிலையத்தில் அவருக்கு தெர்மல் ஸ்கீரினிங் செய்தபோது கோவிட் -19 இருப்பதற்கான அறிகுறி ஏதும் தென்படவில்லை.

    அதனைத் தொடர்ந்து அவர் இரண்டு மூன்று பெரிய அளவிலான பார்டிகளில் கலந்து கொண்டார். அதில் பல நட்சத்திரங்களும் கலந்துகொண்டுள்ளனர்.

    ஆனால், மார்ச் இரண்டாம் வாரத்தில் னிகா கபூருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியது.

    கனிகா கலந்துகொண்ட விருந்தில் ராஜஸ்தான் எம்.பி துஷ்யந்தும் கலந்து கொண்டார். இவர் பின்னர் நாடாளுமன்ற கூட்டங்களிலும் கலந்து கொண்டார். இது பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அதுமட்டுமல்லாமல், இவர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கொடுத்த விருந்திலும் கலந்து கொண்டுள்ளார்.

    ராம்நாத் அந்த விருந்தில் கலந்து கொண்டவர்களுடன் கை குலுக்கவில்லை என்றாலும், அவருக்கும் தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

    இந்நிலையில் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகி கனிகா கபூருக்கு 4 முறை ரத்த சோதனை மேற்கொண்டபோது கொரோனா தொற்றை உறுதி செய்யும் விதத்தில் பாசிட்டிவ் என சோதனை முடிவுகள் வெளிவந்தது.

    இதனிடையே 5-வது மற்றும் 6-வது சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை(நெகட்டிவ்) என்று ஆய்வு முடிவுகள் வந்ததையடுத்து கனிகா கபூர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.

    இந்தியாவின் நிலை?

    இந்தியாவில் இன்று (திங்கட்கிழமை) காலை நிலவரப்படி 3666 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. 109 பேர் மரணம் அடைந்துள்ளன, 291 பேர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளனர்.

    அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 690 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 45 பேர் பலியாகி உள்ளனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு