கொரோனா வைரஸ்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் முன்னேற்றம்

ஊரடங்கு தற்போது நடைமுறையில் இருப்பதால், தோட்டக்கலைத் துறையின் 500 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்களை விற்பனை செய்ய முடிவெடுத்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.

    நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும். மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.

  2. போலி செய்தி பரப்பியவர் நீதிமன்றத்தில் ஆஜர்

    தென் ஆப்ரிக்காவில் சமூக வலைதளத்தில் கொரோனா குறித்த தவறான தகவலை பரப்பிய நபர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.

    தென் ஆப்ரிக்காவில் மூன்று வார கால ஊரடங்கு போடப்பட்டுள்ளது அங்கு போலி செய்திகளை பரப்புவது சட்டவிரோதமானது எனவும் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குற்றம் சுமத்தப்பட்ட இந்த நபர் வீடு தோறும் கொரோனா பிரிசோதனை செய்ய வரும்போது தடுக்க வேண்டும் என்றும், அந்த சோதனை மூலம் வைரஸ் மேலும் பரவக்கூடும் என்றும்வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.

    அந்த வீடியோ வைரலாகியுள்ளது.

  3. தமிழ்நாட்டில் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று

    தமிழ்நாட்டில் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690ஆக உயர்ந்துள்ளது.

    சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ், கொரோனா தொற்றினால் ஒருவர் உயிரிழந்திருப்பதாகத் தெரிவித்தார். இதன் மூலம் இந்நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

    உயிரிழந்தவர் 65 வயது பெண்மணி என்றும் அவருக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளிட்ட பிற பிரச்சனைகளும் இருந்த நிலையில், அவர் இன்று சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

    இன்று 69 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில், 63 பேர் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள். 3 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் வேறு மாநிலத்திலிருந்து பயணம் செய்து வந்தவர். மற்றொருவர் வெளிநாட்டுக்குச் சென்று வந்தவருடன் தொடர்பில் இருந்தவர். மற்றொருவருக்கு எப்படி ஏற்பட்டது என்பது விசாரிக்கப்பட்டு வருகிறது என்றும் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

  4. கொரோனா வைரஸ்: தவறான நம்பிக்கையில் மதுவருந்திய 600 பேர் இரானில் உயிரிழப்பு

    கொரோனா வைரஸ் தொற்றால் சீனாவுக்கு அடுத்தபடியாக ஆசியாவில் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ள இரானில், இதுவரை இந்த தொற்றால் 62 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மேலும் ஒரு பிரச்னை ஏற்பட்டுள்ளது.

    மது அருந்தினால் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எதுவும் இருக்காது என்ற எண்ணத்தில், சட்டவிரோதமாக தயாரிக்கப்படும் தரமற்ற மதுவை அருந்தியதில் இரானில் இதுவரை 600-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

    மேலும், இந்த தரமற்ற மதுவை அருந்தியதில் கிட்டத்தட்ட 3000க்கும் மேற்பட்டவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    சட்டவிரோதமாக தரமற்ற மதுவை தயாரித்ததாக குற்றம் சாட்டி அந்நாட்டில் நூற்றுக்கணக்கானோரை காவல்துறை கைது செய்துள்ளது.

    கோப்புப்படம்

    பட மூலாதாரம், Getty Images

  5. ஸ்பெயினில் மே மாதத்தில் கால்பந்து போட்டிகள் நடத்த பிரபல கால்பந்து கிளப் திட்டம்

    கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் உலகில் அதிகமானவர்கள் ஸ்பெயினில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள பிரபல ‘லா லிகா’ கால்பந்து லீக்கின் தலைவரான ஜேவியர் டேபாஸ், நடப்பில் உள்ள சாத்தியங்களை கணக்கில் எடுத்துக் கொண்டால் மே மாதம் 28-ஆம் தேதியன்று உள்ளூர் கால்பந்து போட்டிகள் தொடங்கக்கூடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    கடந்த மார்ச் 11-ஆம் தேதிக்கு பிறகு ஸ்பெயினில் எந்த கால்பந்து கிளப் போட்டியும் நடக்கவில்லை.

    சர்வதேச பத்திரிகையாளர்களுடன் கான்பிரன்ஸ் கால் மூலம் உரையாடிய டேபாஸ், 2019-20 லா லிகா கால்பந்து சீசன் போட்டிகள் நடக்கவில்லையென்றால் கிட்டத்தட்ட 1 பில்லியன் யூரோக்கள் வரை நஷ்டம் ஏற்படும் என்று தெரிவித்தார்.

    குறைந்தளவு ரசிகர்கள் பங்கேற்குமாறு மைதானத்தில் இருக்கைகளை ஒதுக்குவது, முற்றிலுமாக மூடப்பட்ட மைதானங்கள் என பல புதிய கட்டுப்பாடுகளுடன் போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

    கோப்புப்படம்

    பட மூலாதாரம், Getty Images

  6. போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் முன்னேற்றம்

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், திங்கட்கிழமை மாலையில் வைரஸ் தொற்று தீவிரமடைந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை ஸ்திரமான நிலையில் இருப்பதாக பிரிட்டன் பிரதமர் இல்லமான 10 டெளனிங் ஸ்ட்ரீட்டை சேர்ந்த செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பிராணவாயு தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் தற்போது சிரமமில்லாமல் மூச்சு விடுவதாகவும், அவருக்கு செயற்கை சுவாச கருவிகள் எதுவும் தேவைப்படவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

    உலக நாடு ஒன்றின் அரசுக்கு தலைமை தாங்குபவர்களில் முதல்முறையாக போரிஸ் ஜான்சன் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் திங்கட்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

    போரிஸ் ஜான்சன்

    பட மூலாதாரம், Reuters

  7. கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன?

    இந்த கோவிட் 19 முதன்முதலில் காய்ச்சலாக தொடங்கும். பின் வறட்டு இருமல் அதன்பின் ஒரு வாரம் கழித்து சுவாசக் கோளாறுகள் ஏற்படும். ஆனால் இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அர்த்தமில்லை. இந்த அறிகுறிகள் பிற பொதுவான வைரஸாலும் ஏற்படக்கூடியவை.

    இந்த கோவிட் 19 தீவிரமாக இருந்தால், நிமோனியா, சிறுநீரக பழுது, தீவிர சுவாசப் பிரச்சனை, தீவிர நிலையில் உயிரிழப்பும் ஏற்படலாம். பொதுவாக இந்த அறிகுறிகள் சராசரியாக ஐந்து நாட்களில் தெரியலாம என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் சிலருக்கு அதைக்காட்டிலும் தாமதம் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.

    சிலருக்கு உடல் நலக்குறைவு இருப்பது தென் படுவதற்கு முன்னரே அவர் தொற்றை பரவலாம் என்றும் கூறப்படுகிறது.

    ஒருவரின் உடல் வெப்ப நிலையை தெரிந்துகொள்ள எந்த பகுதிகளில் தெர்மாமீட்டர் வைத்து சோதிக்கலாம்?

  8. கொரோனா தொற்று குறித்த போலி செய்திகளை கட்டுப்படுத்த வாட்சப் புதிய கட்டுப்பாடு

    இன்று ஒரு முக்கிய நிகழ்வாக, கொரோனா வைரஸ் தொற்று குறித்த போலி செய்திகளை கட்டுப்படுத்தும் விதமாக வாட்சப் நிறுவனம் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    அதன்படி ஏற்கனவே அதிகமுறை பகிரப்பட்ட ஒரு செய்தியை வாட்சப் பயனர்கள் இனி ஒருமுறை மட்டுமே பகிர முடியும் என்ற புதிய கட்டுப்பாடு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொடக்கத்தில் ஃபார்வர்ட் செய்திகளை கட்டுப்பாடுகள் இன்றி பலருக்கும் பகிரும் வசதி இருந்தது.

    பின்னர் போலி செய்திகளை கட்டுப்படுத்தும் விதமாக 5 பேருக்கும் மட்டுமே பகிரமுடியும் என்ற கட்டுப்பாட்டை வாட்சப் நிறுவனம் விதித்தது

    GETTY

    பட மூலாதாரம், Getty Images

  9. கொரோனா வைரஸ் தொற்று: இந்தியாவில் அண்மைய தகவல் என்ன?

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4421-ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

    கடந்த 24 மணி நேரத்தில் 356 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்ட்டுள்ளதாக தெரிவித்த அவர், இதுவரை 326 பேர் குணமாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

    கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு வகுத்து வரும் வியூகங்கள், ஆக்ரா, கெளதம் புத்தா நகர், கிழக்கு டெல்லி இடங்களில் எதிர்பார்த்த ஆக்கபூர்வமான விளைவுகளை தந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்காக கிட்டத்தட்ட 250 ரயில் பெட்டிகளில், 40,000 தனி படுக்கைகளை இந்திய ரயில்வே தயார் செய்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

    ANI

    பட மூலாதாரம், ANI

  10. கொரோனா வைரஸ் குறித்த போலி செய்திகளை தடுக்க வாட்சப் அறிமுகப்படுத்தும் புதிய அம்சம்

    கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமாக பரவிவரும் நிலையில், வைரஸ் தொற்று தொடர்பான போலிச் செய்திகளை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒரு முக்கிய அறிவிப்பை வாட்சப் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

    அதன்படி, ஏற்கனவே அதிகமுறை பகிரப்பட்ட ஒரு செய்தியை வாட்சப் பயனர்களால் இனி ஒருமுறை மட்டுமே பகிர முடியும் என்ற புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    தொடக்கத்தில், ’ஃபார்வர்ட்’ செய்திகளை கட்டுப்பாடுகள் இன்றி பலருக்கும் பகிரும் வசதி இருந்தது. பின்னர், போலிச் செய்திகளை கட்டுப்படுத்தும் நோக்கில் ஐந்து பேருக்கு மட்டுமே பகிர முடியும் என்ற கட்டுப்பாட்டை நிறுவனம் அறிவித்திருந்தது. ஒரு மெஸேஜ் ஃபார்வட் செய்யப்பட்டது என்பதை குறிக்கும் அம்சங்களும் கொண்டுவரப்பட்டன.

  11. ஸ்பெயினில் மீண்டும் உயிரிழப்புகள் அதிகரிப்பு - அண்மைய தகவல் என்ன?

    கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 4 நாட்களாக ஸ்பெயினில் உயிரிழப்புகள் குறைந்த வந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 743 பேர் இறந்துள்ளதாக, அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 13,798 இறந்துள்ளதாக ஸ்பெயின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ஸ்பெயினில் திங்கள்கிழமையன்று 637 மரணங்கள் பதிவான நிலையில், கடந்த 2 வாரங்களில் ஸ்பெயினில் பதிவாகியுள்ள குறைந்த அளவு மரணங்கள் இதுதான் என்று கூறப்பட்டது.

    ஸ்பெயினில் இதுவரை 1,40,000க்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஸ்பெயின் தான் உலகிலேயே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது

    corona

    பட மூலாதாரம், Getty Images

  12. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தடுப்பு மருந்து எப்போது கிடைக்கும்?

    கொரோனா வைரஸ் தொற்று இதுவரை 180க்கும் மேற்பட்ட நாடுகளில் (அண்மைய தகவலின்படி) பரவியுள்ளது.

    இப்போது வரை கொரோனா வைரஸ் தொற்று வராமல் தடுப்பதற்கான மருந்து எதுவும் தயாராகவில்லை.

    ஆனால், இந்த நிலை எப்போது மாறும்?

    கொரோனா வைரஸ் தொற்று

    பட மூலாதாரம், Getty Images

  13. ஸ்பெயினில் முதல்முறையாக குறைந்த உயிரிழப்பு; ரஷ்யாவில் அதிகரித்த பாதிப்பு

    ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டுள்ள ஸ்பெயினில் திங்கள்கிழமையன்று 637 மரணங்கள் பதிவாகியுள்ளன.

    கடந்த 2 வாரங்களில் ஸ்பெயினில் பதிவாகியுள்ள குறைந்த அளவு மரணங்கள் இதுதான்.அதேபோல் ஸ்பெயினில் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

    இதனிடையே, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ரஷ்யாவில் முதல்முறையாக ஒரேநாளில் 1000க்கும் கூடுதலாக அதிகரித்துள்ளது.

    ரஷ்யாவில் இருந்து கிடைத்த அண்மைய தகவலின்படி, அங்கு புதிதாக 1154 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,அங்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7497-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை ரஷ்யாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 58-ஆக அதிகரித்துள்ளது.

    கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தலைநகர் மாஸ்கோவில் பாதியளவு முடக்கநிலை அமலில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    GETTY

    பட மூலாதாரம், GETTY IMAGES

  14. விவசாய விளைபொருட்களை விற்க சலுகை

    கொரோனா ஊரடங்கு: விவசாய விளைபொருட்களை விற்க சலுகைகளை அறிவித்தது தமிழக அரசு

    144 தடை உத்தரவு இருக்கும் காலகட்டத்தில் உணவுப் பொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்க தமிழக அரசு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விளைபொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல்வதில் பிரச்சனைகள் இருந்தால்மாவட்ட வேளாண் அலுவலர்களைத் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறப்பட்டு, அவர்களது தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.

    இந்த அலுவலர்கள் வியாபாரிகளைத் தொடர்பு கொள்வது, சரக்குகளை எடுத்துச் செல்ல உரிய அனுமதியைப் பெற்றுத் தருவது ஆகியவற்றில் உதவுவார்கள்.

    தமிழ்நாட்டில் காய்கறிகளைப் பாதுகாக்க அரசின் சார்பில் குளிர்பதனக் கிடங்குகள் பராமரிக்கப்பட்டுவருகின்றன. இந்தக் கிடங்குகளில் காய்கறிகளை வைத்துக்கொள்ள விவசாயிகள் கட்டணம் செலுத்தவேண்டும். தற்போதைய சூழலை மனதில் கொண்டு இந்தக்கட்டணம் ஏப்ரல் 30ஆம் தேதிவரை ரத்துசெய்யப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

    மேலும், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து நியாயமான விலையில் விற்க முன்வரும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு பத்து லட்ச ரூபாய் வரை கடன்வசதி செய்து தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    ஊரடங்கு தற்போது நடைமுறையில் இருப்பதால், தோட்டக்கலைத் துறையின் 500 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்களை விற்பனை செய்ய முடிவெடுத்திருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    தற்போது விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்யும்போது அவற்றுக்கு சந்தைக் கட்டணமாக அவற்றின் மதிப்பில் ஒரு சதவீதம் வசூலிக்கப்படுகிறது. இந்தத் தொகை ஏப்ரல் 30ஆம் தேதிவரை தள்ளுபடி செய்யப்படுகிறது.

    கொரோனா

    பட மூலாதாரம், Getty Images

  15. வெளிநாட்டு விமானங்களை கட்டுப்படுத்தும் சீனா

    சீனாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளால் மற்றொரு முறை கொரோனா தொற்று பரவுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

    ஏற்கனவே வெளிநாட்டு பயணிகளின் விசாவை ரத்து செய்து, வெளிநாட்டு பயணிகளின் வருகைக்கு சீனா தடை விதித்துள்ளது.

    சீனாவின் சர்வதேச விமானங்கள் மற்றும் வெளிநாட்டு விமானங்களின் சேவைகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    வாரம் ஒரு முறை ஒரு சர்வதேச விமான சேவைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த விமானமும் இருக்கைகளின் எண்ணிக்கையில் 75%க்கும் அதிகமான பயணிகளுடன் இயங்க கூடாது.

  16. ஜப்பானில் அவசரநிலை அறிவிக்கத் திட்டம்

    ஜப்பானின் முக்கிய நகரங்களான டோக்கியோ மற்றும் ஒசாகாவில் அவசர நிலை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    "மக்களின் வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும் ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இன்று மாலை, அரசாங்கத்தின் தலைமையகத்தில் அதிகாரிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து அவசரகால நிலையை அறிவிக்க திட்டமிட்டுள்ளேன்,'' என செவ்வாய்க்கிழமை அன்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்தார்.

    எனவே இன்று நள்ளிரவு மாநில ஆளுநர்கள் தங்கள் மாநிலத்தில் உள்ள வர்த்தக நிலையங்களை முடக்கி மக்களை வீட்டிற்குள்லேயே பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

  17. இந்தியா - 10 முக்கிய தகவல்கள்

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் குறித்த சமீபத்திய தகவல்களை 10 முக்கியப் புள்ளிகளாக தொகுத்து வழங்குகிறோம்.

  18. உலகம் முழுவதும் என்ன நடக்கிறது?

    கொரோனா பரவல், தடுப்பு நடவடிக்கைகள், மரணங்கள், மருத்துவ ஆய்வு ஆகியவை குறித்த பிபிசி தமிழின் சிறப்பு காணொளி.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  19. அமைச்சரவைக் குழுவின் கூட்டம்

    இந்தியாவில் கோவிட்-19 தொற்று கட்டுப்பாட்டுக்கான அமைச்சரவைக் குழுவின் கூட்டம் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்து வருகிறது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு