கொரோனா வைரஸ்: “நாக்பூர் டூ நாமக்கல்” நூறு கி.மீ நடை, லாரிகளில் பயணம் - நாமக்கல் இளைஞருக்கு என்ன நடந்தது?

"நாக்பூர் டூ நாமக்கல்": நூறு கி.மீ நடை, லாரிகளில் மரணம் - நாமக்கல் இளைஞருக்கு என்ன நடந்தது?

பட மூலாதாரம், இந்து தமிழ் திசை

இந்து தமிழ் திசை: நூறு கி.மீ நடை, லாரிகளில் பயணம் - நாமக்கல் இளைஞருக்கு என்ன நடந்தது?

நாக்பூரில் இருந்து சொந்த ஊருக்கு நடந்து வரும்போது, தெலங்கானா மாநிலத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் பள்ளிபாளையத்தில் அடக்கம் செய்யப்பட்டது என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் கிருஷ்ணா நகரைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பவரது மகன் லோகேஷ் (23). மெக்கானிக்கல் பட்டயப் படிப்பினை முடித்துள்ள இவர், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிய கடந்த மாதம் 14-ம் தேதி சென்றார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், நாக்பூரில் இருந்து கடந்த 31-ம் தேதி பள்ளிபாளையத்துக்கு லோகேஷ் புறப்பட்டார். எனினும், வாகனம் ஏதும் கிடைக்காததால், தன்னுடன் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த 25 பேருடன் லோகேஷ் 100 கிமீ தூரம் நடந்து வந்தார்.

பின்னர், வழியில் கிடைத்த லாரி ஒன்றில் லோகேஷ் உள்ளிட்ட 25 பேரும் பயணித்து, தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தை அடுத்த மாரேட்பள்ளி வந்தனர்.

அப்போது, அவர்களை காவல் துறையினர் மீட்டு, அங்குள்ள முகாமில் தங்க வைத்தனர். இந்நிலையில் கடந்த 1-ம் தேதி லோகேஷூக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து, செகந்திராபாத் மாவட்ட வருவாய் துறையினர் மூலம் லோகேஷின் உடல் பள்ளிபாளையம் கொண்டு வரப்பட்டு நேற்று காலை அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், லோகேஷின் குடும்பத்தினரை நாமக்கல் ஆட்சியர் மெகராஜ், கோட்டாட்சியர் மணிராஜ் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும், தமிழக அரசின் நிவாரணத் தொகை விரைவில் வழங்கப்படும் என உறுதியளித்தனர்.

தினமணி: "காஷ்மீா் டிஎஸ்பி தேவிந்தா் சிங்கின் போலீஸ் காவல் ஏப்.10 வரை நீட்டிப்பு"

"காஷ்மீா் டிஎஸ்பி தேவிந்தா் சிங்கின் போலீஸ் காவல் ஏப்.10 வரை நீட்டிப்பு"

பட மூலாதாரம், Getty Images

ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்ததாக கடந்த ஜனவரியில் கைதான ஜம்மு-காஷ்மீா் டிஎஸ்பி தேவிந்தா் சிங்கின் போலீஸ் காவலை ஏப்ரல் 10-ஆம் தேதி வரை தில்லி சிறப்பு நீதிமன்றம் நீட்டித்துள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

இந்த விவகாரம், தில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி முனீஷ் மாா்கன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பு முன்வைத்த கோரிக்கை:

தேவிந்தா் சிங்கையும் வழக்கில் கைதாகியுள்ள ஜாவித் இக்பால், சையது நவீத், இம்ரான் ஷஃபி மீா் ஆகியோரையும் ஒன்றாக வைத்து கடந்த சில தினங்களாக விசாரித்து வருகிறோம்.

இருப்பினும், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருப்பவா்கள், அவா்களின் சதித் திட்டங்கள், அவா்களிடையே நடந்த பணப் பரிமாற்றங்கள் ஆகியவற்றைக் கண்டறிய வேண்டியுள்ளது. எனவே, அவா்களின் போலீஸ் காவலை நீட்டிக்க வேண்டும் என்று காவல் துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அவா்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தேவிந்தா் சிங் மற்றும் சையது நவீத் உள்ளிட்டோரின் போலீஸ் காவலை ஏப்ரல் 10-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டாா்.

ஸ்ரீநகா் விமான நிலையத்தில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த தேவிந்தா் சிங், தனது காரில் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பின் முக்கிய தளபதி நவீது பாபு, ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் அல்தாஃப் ஆகியோருடன் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டாா்.

பயங்கரவாதிகள் இருவரும் சோபியான் மாவட்டத்தில் இருந்து காஷ்மீா் பள்ளத்தாக்குக்கு வெளியே தப்பிச் செல்லும் வகையில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளா் தேவிந்தா் சிங் உதவியதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடா்பாக தேவிந்தா் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதுடன் பணியில் இருந்து அவா் இடைநீக்கம் செய்யப்பட்டாா். தேவிந்தா் சிங் உள்ளிட்டோரின் போலீஸ் காவல் ஏற்கெனவே ஏப்ரல் 3-ஆம் தேதி ஒரு முறை நீட்டிக்கப்பட்டது.

Banner image reading 'more about coronavirus'
Banner

தினத்தந்தி: திவாலாகும் நிலையில் விமான நிறுவனங்கள்

"நாக்பூர் டூ நாமக்கல்": நூறு கி.மீ நடை, லாரிகளில் மரணம் - நாமக்கல் இளைஞருக்கு என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images

திவாலின் விளிம்பு நிலையில் விமான நிறுவனங்கள் இருப்பதாக கூறி, அரசின் உதவியை நாடி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு இந்திய வர்த்தக, தொழில் சம்மேளனம் கடிதம் எழுதி உள்ளது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக, சமூக இடைவெளியை பின்பற்றும் நோக்கத்துடன் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதே போன்று பல்வேறு வெளிநாடுகளும் தடை விதித்து உள்ளன. இதன் காரணமாக எல்லா விதமான பயணிகள் போக்குவரத்து சாதனங்களும் முடக்கப்பட்டுள்ளன.

அனைத்து விமானங்களும் உள்நாட்டு சேவைகளையும், வெளிநாட்டு சேவைகளையும் ரத்து செய்துள்ளன. இதனால் விமானங்கள் பறக்க வழியின்றி, தரையில் நிற்கின்றன. விமான நிறுவனங்களின் நிதி நிலைமை கவலைக்கிடம் தருவதாக அமைந்துள்ளது.

இதை சுட்டிக்காட்டி, அரசின் உதவியைக் கோரி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கும், சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப்சிங் பூரிக்கும் இந்திய வர்த்தக, தொழில் சம்மேளனம் 'பிக்கி'யின் விமான குழு தலைவர் ஆனந்த் ஸ்டான்லி கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கடந்த சில நாட்களாக விமானங்கள் இயங்காமல், விமான தொழில் முடங்கி உள்ளது. இதனால் விமான நிறுவனங்களின் கையிருப்பு நிதி கரையத்தொடங்கி இருக்கிறது. இது மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. பல விமான நிறுவனங்கள் திவாலின் விளிம்பில் இருக்கின்றன.

கொரோனா வைரஸ்

எரிபொருளுக்கான கட்டணங்களை, அவற்றை சந்தையிடும் எண்ணெய் நிறுவனங்களுக்கு விமான நிறுவனங்கள் வட்டியின்றி கட்டுவதற்கான கால வரம்பு 21 நாட்களாக இருக்கின்றன.

இந்த 21 நாள் கால வரம்பை 180 நாட்களாக உயர்த்தினால் விமான நிறுவனங்களின் பணப்புழக்க நிலை பலன் அடையத்தக்க விதத்தில் இருக்கும்.

புதிய டிக்கெட்டுகளை பதிவு செய்வதை விட, பதிவுகளை ரத்து செய்வது அதிகமாக உள்ளது. கொரோனா வைரஸ் பரவி வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அரசுக்கு செலுத்த வேண்டிய சரக்கு, சேவை வரியை விட, டிக்கெட்டுகளை ரத்து செய்வதால் திரும்ப செலுத்த வேண்டிய சரக்கு, சேவை வரி அதிகமாக இருக்கிறது. எனவே விமான போக்குவரத்து துறை சரக்கு, சேவை வரி செலுத்த வேண்டியதை ஒத்தி போட வேண்டும்.

விமான நிறுவனங்கள் எரி பொருளுக்காக செலுத்துகிற சரக்கு, சேவை வரியில் இருந்து உள்கடன் பெறுவதற்கு விமான நிறுவனங்கள் அனுமதிக்கப்பட வேண்டும். அப்போது, விமானங்களின் செயல்பாட்டு செலவு குறையும்.

விமானங்களை நிறுத்துவதற்கும், தரை இறங்குவதற்கும் விமான நிலையங்களுக்கு விமான நிறுவனங்கள் கட்டணம் வழங்குவதையும், ஆதாய உரிமை (ராயல்டி) வழங்குவதையும் ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே பயணிகளுக்கு விற்கப்பட்ட ஆனால் பயன்படுத்தப்படாத டிக்கெட்டுகளுக்கு, 35 பில்லியன் டாலர் (சுமார் ரூ.2 லட்சத்து 59 ஆயிரம் கோடி) தொகையை விமான நிறுவனங்கள் திருப்பி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் கூறுகிறது.

மேலும் ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் விமான நிறுவனங்கள் கையிருப்பில் 61 பில்லியன் டாலரை (சுமார் ரூ.4 லட்சத்து 51 ஆயிரத்து 400 கோடி) கரைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: