தமிழகத்தில் கொரோனா வைரஸ்: வீட்டுக் கண்காணிப்பில் 90,412 பேர்; பாதிப்பு எண்ணிக்கை 400-ஐ கடந்தது

பட மூலாதாரம், Getty Images
கொரோனா நோய் தொடர்பாக தமிழ்நாட்டில் 90,412 பேர் வீட்டிலேயே வைத்து கண்காணிக்கப்படுவதாக மாநில சுகாதாரத் துறைச் செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்திருக்கிறார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 411ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை செயலர், இன்று கொரோனா நோய் இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட 102 பேரில் 100 பேர் டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றுவரை 309ஆக இருந்த நிலையில், இன்று மேலும் 102 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே, மொத்த எண்ணிக்கை 411ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், நோய் அறிகுறிகளைக் கொண்டவர்கள் என 1580 பேர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
"வெளிநாட்டுக்குச் சென்றவர்கள், நோய் தொற்று உடையவர்களுடன் இருந்தவர்கள் ஆகியோரிடையே கொரோனா அறிகுறி இருந்தவர்களுக்கு மட்டும் பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால், சமூகத் தொற்று இருக்கிறதா என்பதை ஆராய வேறு வகையில் மூச்சுத் திணறல் ஏற்பட்ட 376 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. ஆனால், அவர்களில் 3 பேருக்குத்தான் கொரோனா இருந்தது. ஆகவே தமிழ்நாட்டில் இன்னமும் இந்த நோய் இரண்டாம் கட்டத்தில்தான் இருக்கிறது" என்று தெரிவித்தார் பீலா ராஜேஷ்.
வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டவர்களில் 5080 பேர் தனிமைப்படுத்துதலில் இருந்து வெளியில் வந்திருப்பதாகவும் தமிழ்நாட்டில் இதுவரை 3684 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டிருப்பதாகவும் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

இதுவரை அரசு மருத்துவமனைகளில் மட்டுமே கொரோனா நோயாளிகள் சிகிச்சைபெற அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிலர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்புவதால், அரசு அதற்கு அனுமதி அளித்திருப்பதாகவும் சுகாதாரத்துறைச் செயலர் தெரிவித்தார்.
எந்தெந்த மருத்துவமனைகள் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கலாம் என பட்டியலிடப்பட்டிருப்பதாகவும் அந்த மருத்துவனைகள் மட்டுமே கொரோனா நோயாளிகளை சேர்த்து சிகிச்சையளிக்கலாம் என்றும் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரே ஒருவர் மட்டுமே உயிரிழந்திருப்பதாகவும் மற்ற அனைவருமே நலமாக இருப்பதாகவும் தெரிவித்த சுகாதாரத்துறைச் செயலர், யாருக்கும் தீவிர சிகிச்சைகூட தேவைப்படவில்லையெனத் தெரிவித்தார்.
டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என இதுவரை சுமார் 1200 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் இவர்களில் சுமார் 360 பேருக்கு அந்நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டாலும் மேலும் 300 பேருக்கு அந்நோய் இல்லை எனத் தெரியவந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












