கொரோனா வைரஸ்: மலேசியாவில் 3,333 பேருக்கு பாதிப்பு: 25 விழுக்காட்டினர் குணமடைந்தனர்

பட மூலாதாரம், Ore Huiying / getty images
மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றியோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று புதிதாக 217 பேருக்கு நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அங்கு பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 3,333ஆக உள்ளது.
இதற்கிடையே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் மூன்று பேர் உயிரிழந்ததையடுத்து கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 53ஆக அதிகரித்துள்ளது. எனினும் நோய்த் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்த மேலும் 60 பேர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.
மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 25 விழுக்காட்டினர் முழுமையாக குணமடைந்திருப்பதாக சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். தற்போது 108 நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சரிபாதி பேருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மலேசியாவில் இறப்பு விகிதம் மிகக் குறைவாகவே உள்ளது
இதற்கிடையே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 80 விழுக்காட்டினருக்கு மிக மெல்லிய (லேசான) அறிகுறிகளே தென்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மீதம் உள்ளவர்களுக்கு மட்டுமே மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாக அந்த அமைச்சு கூறியுள்ளது.
"சுமார் 10 விழுக்காடு நோயாளிகளுக்கு மட்டுமே நோய்த் தொற்றுக்குரிய தீவிர அறிகுறிகள் தென்படுகின்றன. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையின் அடிப்படையில் இறப்பு விகிதத்தை கணக்கிடும் போது 4.7 விழுக்காடாக உள்ளது. ஆனால் மலேசியாவில் இறப்பு விகிதமானது 1.7 விழுக்காடாக மட்டுமே உள்ளது," என டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.
கிருமிப் பரவலின் தொடக்கத்தில் நோய்த் தொற்றுக்குரிய அறிகுறிகள் தென்பட்டால் மட்டும் பரிசோதனை செய்தால் போதுமானது என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த போதிலும், மலேசிய அரசு எத்தகைய அறிகுறியும் தென்படாதவர்களிடமும் பரிசோதனை செய்துள்ளது என்றும் இதன் மூலம் சிலருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
விமான போக்குவரத்து துறை 3.31 பில்லியன் டாலர் நஷ்டத்தை எதிர்கொள்ளும்
கொரோனா வைரஸ் தொற்று தாக்கம் காரணமாக உலகெங்கிலும் உள்ள விமான நிறுவனங்கள் கடும் வருவாய் இழப்பை எதிர்கொண்டுள்ளன. இந்நிலையில் மலேசிய விமான போக்குவரத்து துறை சுமார் 3.31 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான நஷ்டத்தை சந்திக்கும் என அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கம் கணக்கிட்டுள்ளது.
பல்வேறு நாடுகளில் இதுவரை வெற்றிகரமாக இயங்கி வந்த விமான நிறுவனங்களும் தற்போது நிதி நெருக்கடியால் தள்ளாடுகின்றன. மலேசியாவில் விமான நிறுவனங்கள் ஊழியர்களுக்கு 50 விழுக்காடு ஊதிய வெட்டு, மூன்று மாதங்களுக்கு கட்டாய விடுமுறை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை கடந்த இரு மாதங்களாக மேற்கொண்டுள்ளன.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

நடப்பாண்டில் ஆசிய பசிஃபிக் வட்டாரத்தில் பயணிகள் எண்ணிக்கையானது 37 விழுக்காடு அளவுக்கு குறைந்துள்ளது என்றும், இதனால் சுமார் 88 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு விமான போக்குவரத்து துறை நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் இந்த வட்டாரத்துக்கான அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கத்தின் உதவி தலைவரான கான்ரெட் க்ளிஃபோர்ட் தெரிவித்துள்ளார்.
மேலும் பல்வேறு நாடுகள் அறிவித்துள்ள போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாக விமான போக்குவரத்து துறையில் சுமார் 1,69,700 பணியிடங்கள் பாதிக்கப்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
"உலகெங்கிலும் உள்ள விமான நிறுவனங்கள் தங்கள் இருப்பை நிலைநிறுத்த போராடி வருகின்றன. இந்த நெருக்கடியான காலகட்டத்தில் அவை தொடர்ந்து செயல்பட உடனடியாக நிதியுதவி தேவை. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் விமான போக்குவரத்து துறைக்கு ஆதரவாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அதே போல் பிற நாடுகளின் அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என க்ளிஃபோர்ட் வலியுறுத்தி உள்ளார்.
'வைட்டமின் சி' கொரோனா வைரசை தடுக்கும் ஆற்றல் கொண்டதா?
இதற்கிடையே 'வைட்டமின் சி' அதிகம் உள்ள உணவுகள், மாத்திரைகளை உட்கொள்வதால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாது என்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாது என மலேசிய சுகாதார அமைச்சின் குடும்ப மருத்துவ நிபுணரான டாக்டர் சுஃபிடா சைனால் ரஷீத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு தனி நபருக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பது தெரிய வந்தால் அந்நபருக்கு இனி நோய்த் தொற்றே ஏற்படாது என்று கூறப்படுவதும் சரியல்ல என அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.
நோய்த் தொற்று உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ள எவரும் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது என்றும், நோய்த் தொற்று இல்லாதவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்றும் டாக்டர் சுஃபிடா சைனால் ரஷீத் தெரிவித்துள்ளார்.
இன்று இணையம் வழி பொது மக்களுடன் அவர் உரையாடினார். அப்போது நேரலையில் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
"வைட்டமின் சி அதிகம் உள்ளவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படாது என்பதோ, கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதை வைட்டமின் சி தடுக்கும் என்பதோ இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
"பொதுவாக வைட்டமின் சி துணை மருந்தாக பரிந்துரைக்கப்பபடுவது வழக்கம். எனவே அதை அதிகம் உட்கொண்டால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாது என்று கூறப்படுவதை நம்ப வேண்டாம்," என்று டாக்டர் சுஃபிடா சைனால் ரஷீத் கூறினார்.
சிங்கப்பூர் நிலவரம்:
கொரோனாவுக்கு ஐந்தாவது நபர் பலி: பள்ளிகள், பணியிடங்களை ஒரு மாதம் மூட உத்தரவு
சமூக இடைவெளியை மக்கள் முறையாக கடைபிடித்து வரும் நிலையிலும், சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது.
அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், அடுத்த ஒரு மாத காலத்துக்கு நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளையும் பணியிடங்களையும் மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
அத்தியாவசிய சேவை, முக்கியமான பொருளாதார பிரிவுகள் மட்டுமே செயல்படும் என பிரதமர் லீ சியன் லூங் அறிவித்துள்ளார். வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்கும் நோக்கத்துடனேயே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த வாரம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்த நிலையில், சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் ஐந்தாவது நபரின் உயிரைப் பறித்துள்ளது. இதையடுத்து அந்நாட்டு அரசு நோய்த் தொற்று பரவல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
ஒருமாத தடைக் காலத்தில் உணவகங்கள், பேரங்காடிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அத்தியாவசிய அமைப்புகள் இயங்கும் என்றும், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் வீட்டில் இருந்தபடியே கற்கும், கற்பிக்கும் முறைக்கும் மாற வேண்டும் என்றும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஜனவரி 23ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதுவரை ஐந்து பேர் வைரஸ் தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.
இதற்கிடையே, அண்மையில் டெல்லியில் நடைபெற்ற சமயக் கூட்டத்தில் பங்கேற்ற சிங்கப்பூரர் ஒருவரும் இந்தியாவில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என சிங்கப்பூர் ஊடகம் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












