கொரோனா வைரஸ் நெருக்கடி: மோதி அரசு பதிலளிக்க வேண்டிய கேள்விகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சிங்கி சின்ஹா
- பதவி, பிபிசி செய்தியாளர், டெல்லி
அண்மையில் 'மான் கி பாத்' நிகழ்ச்சியில், பேசிய பிரதமர் நரேந்திர மோதி, நாட்டில் முடக்கநிலை அமல்படுத்தப்பட்டதால் மக்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்காக மன்னிப்பு கோரினார்.
"நாட்டு மக்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், நீங்கள் என்னை மன்னிப்பீர்கள் என்று நினைக்கிறேன்" என்று பிரதமர் மோதி அப்போது குறிப்பிட்டார்.
"உங்களுக்கு பல சிரமங்களை ஏற்படுத்திய சில முடிவுகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. நமக்கு கிடைத்திருக்கும் இந்தப் பிரதமர் ஏன் இவ்வளவு பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்துகிறார் என்று ஏழை சகோதர சகோதரிகள் யோசிக்கலாம். அவர்களுக்கு சிக்கல் ஏற்படுத்தியதற்காக மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று நாட்டுமக்களிடம் பிரதமர் மன்னிப்புக் கோரினார்.
பிரதமர் மன்னிப்பு கேட்டால் போதுமா?
மன்னிப்பு கேட்ட போதிலும், பதிலளிக்க வேண்டிய பல கேள்விகள் இருக்கின்றன.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பற்றி அரசாங்கம் அலட்சியமாகஇருந்தது ஏன்?
மார்ச் 24 ஆம் தேதி இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர், கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக நாடு முழுவதும் 21 நாள் முடக்கநிலை என பிரதமர் அறிவித்த பிறகுதான் பெரிய நகரங்களிலிருந்து கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு மக்கள் இடம்பெயரத் தொடங்கினார்கள்.
முடக்கநிலை அறிவிப்பு இரவு 12 மணி முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டது.
இத்தகைய சூழ்நிலையில், உணவு பொருட்களையும், மருந்துகளையும் வாங்கி சேகரிக்க மக்களுக்கு சில மணிநேரங்கள் மட்டுமே கிடைத்தது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல முடியாது, அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காதது போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொண்டனர். ஆனால் கட்டுமான மற்றும் அமைப்புசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் சிக்கலான முடக்கநிலை அறிவிப்பை எவ்வாறு எதிர்கொள்வார்கள் என்பது தொடர்பாக பிரதமரின் உரையில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை.

பட மூலாதாரம், Getty Images
பசி, நோய், நீண்ட தொலைவு நடந்து சென்றது மற்றும் சாலை விபத்துக்கள் காரணமாக பல தொழிலாளர்கள் உயிரிழந்ததை பல ஊடகங்களும் வெளிப்படுத்தியுள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 50 பேர் இறந்துள்ளனர்.
பெரிய நகரங்களில் இருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் மக்கள் தொகை குறித்த புள்ளிவிவரங்கள் அரசாங்கத்திடம் இல்லை என்று சொல்ல முடியாது.
தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக, மேற்கத்திய நாடுகளும் திடீரென லாக் டவுனை செயல்படுத்தின.
பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது, மருத்துவ வசதிகள், சோதனை கருவிகள் அல்லது பிற பிரச்சனைகள் பிற நாடுகளுக்கும் இருந்தாலும், இந்தியாவில் இருப்பது போன்று புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இல்லை.
தினசரி வேலை செய்துதான் வாழ வேண்டும் என்ற நிர்பந்தத்தில் வாழும் மிகப் பெரிய மக்கள்தொகை நம் நகரங்களில் இருக்கிறது.
2011 மற்றும் 2016 க்கு இடையில், கிட்டத்தட்ட 90 லட்சம் மக்கள் பணம் சம்பாதிப்பதற்காக ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்குச் சென்றதாக 2017 ஆம் ஆண்டின் பொருளாதார ஆய்வு தெரிவித்துள்ளது.

- கொரோனா தொற்று குறித்த முக்கிய சந்தேகங்களும், அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ்: தமிழ்நாட்டில் எப்படி சிகிச்சையளிக்கிறார்கள் மருத்துவர்கள்?
- கொரோனா: உலக நாடுகளின் அச்சமும், பின்பற்றும் வழிமுறைகளும்

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டிற்குள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை சுமார் 1.39 கோடி ஆகும்.
சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பான சர்வதேச மக்கள் தொகை அறிவியல் அமைப்பின் (International Institute of Population Sciences) கூற்றுப்படி, புலம்பெயர்ந்த தொழிலாளிகளுகு பெருமளவு வேலைவாய்ப்புகளை வழங்குகிறது கட்டுமானத் துறை. சுமார் நான்கு கோடி தொழிலாளர்கள் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதைத் தவிர, ஆண்கள் மற்றும் பெண்கள் என சுமார் இரண்டு கோடி தொழிலாளர்கள் வீட்டு வேலைகளை செய்கின்றனர். ஜவுளித் துறையில் 1.1 கோடி மற்றும் செங்கல் சூளைகளில் ஒரு கோடி மக்கள் வேலை செய்கின்றனர்.
இது மட்டுமல்ல, போக்குவரத்து, சுரங்கம், விவசாயம் என பல்வேறு தொழில்களிலும் கணிசமான எண்ணிக்கையில் ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
லாக் டவுன் அறிவிப்புக்கு பிறகு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைகள் பறிபோயின. கட்டுமானம் மற்றும் பிற தொழில்களில் பணிகள் நிறுத்தப்பட்டதால், அவர்கள் இருக்குமிடங்களில் இருந்து வெளியேற வேண்டியிருந்தது.

பட மூலாதாரம், Getty Images
இதுபோன்ற நெருக்கடி ஏற்படும் என்பதைஅரசுஏன் எதிர்பார்க்கவில்லை?
ஏழைகளுக்கு பணப் பரிமாற்றம் செய்வதாகவும், உணவு பொருட்கள் விநியோகம் செய்வது போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் அறிவித்துள்ளது, ஆனால் பல தொழிலாளர்களுக்கு வங்கி கணக்குகளோ ரேஷன் கார்டுகளோ கிடையாது.
லாக் டவுன் காலத்தில் வீட்டு உரிமையாளர்கள் இந்த மாத வாடகையை தொழிலாளர்களிடம் கேட்க மாட்டார்கள் என்று அரசாங்கம் அறிவித்தது. இந்த உத்தரவுகளை பின்பற்றாதவர்களுக்கு, ஐபிசியின் பிரிவு 188 ன் கீழ், ஆறு மாத சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்த்து.
மார்ச் 24 அன்று 21 நாட்கள் முடக்கநிலையை பிரதமர் அறிவித்தபோது, இதை பிரதமர் சொல்லவில்லை. மக்களுக்கு அன்றாட வாழ்க்கை மற்றும் உணவு பிரச்சனை ஏற்படாமல் அரசு பார்த்துக் கொள்ளும் என்று அவர் அப்போதே மக்களுக்கு உறுதியளித்திருக்க வேண்டும்.
நிலைமை மோசமடைந்தபோதுதான், அரசாங்கத்திற்கு இது நினைவுக்கு வந்தது. பிரதமர் மோதியின் முடக்கநிலை அறிவிப்பு, 2016 ஆம் ஆண்டில் அவர் வெளியிட்ட பண மதிப்பிழப்பு அறிவிப்புடன் ஒப்பிடப்படுகிறது. திடீரென்று, நாட்டின் நாணயத்தின் 80 சதவீதத்தை பிரதமர் செல்லாக் காசாக்கினார்.
இதற்குப் பிறகு, நாடு முழுவதும் ஒரு நெருக்கடியும், பரபரப்பும் எழுந்தது.

சற்று கால அவகாசம் கொடுங்கள், எல்லாம் சரியாகிவிடும், இல்லையெனில் நான் நீங்கள் சொல்வதை கேட்கிறேன் என்று பிரதமர் மோதி மக்களிடம் கேட்டுக் கொண்டார்.
லண்டனின் கிங்ஸ் கல்லூரியின் பேராசிரியரும், தி பாண்டெமிக் பெர்ஹேப்ஸ் (2015) (The Pandemic Perhaps) புத்தகத்தின் ஆசிரியருமான கார்லோ காட்ஃப் தற்போது இந்தியாவில் வசிக்கிறார்.
"இந்தியாவில், ஏழ்மையான, விளிம்புநிலை மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே பாகுபாட்டை எதிர்கொள்ளும் இந்த மக்கள் மேலும் மோசமாக பாதிக்கப்படுவார்கள்" என்று காட்ஃப் கூறுகிறார்.
இத்தகைய கடுமையான நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்கு முன்பு அவற்றின் தாக்கங்கள் மற்றும் பாதிப்புகள் பற்றி ஏன் விவாதிக்கப்படவில்லை என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
பொருளாதார வல்லுனர் ஜீன் ட்ரெஸ் ஒரு கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார். "நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த நிவாரண உதவித்தொகுப்பில், பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா (PMGKY) திட்டத்தில் ஏற்கனவே 16,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டமான மன்ரேகாவில் 5,600 கோடி ரூபாய் ஊதிய உயர்வு அறிவித்தார். இது ஏற்கனவே ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் 23ஆம் தேதியே அறிவிக்கப்பட்டது தான்".
ரேஷன் மற்றும் பண பரிமாற்றத்தின் அடிப்படையில் இந்த நிவாரண தொகுப்பு நன்றாக உள்ளது. ஆனால், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை தரவுகளின்படி, அனைத்து ஏழைகளும் இன்னும் பி.டி.எஸ் எனப்படும் பொது விநியோக முறை வரையறைக்குள் கொண்டு வரப்படவில்லை என்பதை அவர் சுட்டிக் காட்டுகிறார்.
பி.எம்.ஜி.கே.ஒய் ஒதுக்கீட்டின் கீழ் பணப் பரிமாற்றத்திற்காக ஒதுக்கப்பட்ட 31,000 கோடி பணம், பிரதான் மந்திரி ஜன தன் யோஜனாவின் கணக்குகளில் நேரிடையாக போடப்படும். ஒவ்வொரு ஏழைக்கும் முதல் மூன்று மாதங்களுக்கு மாதந்தோறும் 500 ரூபாய் கிடைக்கும். ஆனால் எந்தவொரு குடும்பமும் 500 ரூபாயைக் கொண்டு ஒரு மாதம் வாழ்ந்துவிட முடியுமா? இது சாத்தியமில்லை என்று ஜீன் ட்ரெஸ் குறிப்பிடுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
PDS அல்லது PMGKY இன் கீழ் வராத ஏழை மக்களுக்கு என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த குறைபாடுகள் ஏன் அகற்றப்படவில்லை?
21 நாட்கள் முடக்கநிலையை தவிர வேறு வழியில்லையா?
இந்த தொற்றை உலகின் வளர்ந்த நாடுகளை எவ்வாறு தன் முன் மண்டியிட வைத்துள்ளது என்பதை அரசாங்கம் கவனித்து வருவதாக மார்ச் 24 அன்று பிரதமர் மோதி கூறினார்.
இந்த நாடுகள் தொற்றுநோயை சமாளிக்க போதுமான நடவடிக்கைகளை எடுத்தன, அவற்றிடம் போதுமன வசதிகள் இருந்தன என்பதையும் பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். உண்மை என்னவென்றால், கொரோனா வைரஸ் துரிதமாக பரவுகிறது. பலவிதமான ஏற்பாடுகளும் முயற்சிகளும் மேற்கொண்ட போதிலும், உலக நாடுகள் கொரொனா வைரஸை கையாள்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்றன.
தற்போது கொரொனாவை திறம்பட எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்கான ஒரே வழி சமூக விலக்கம் அதாவது கூட்டத்தில் இருந்து விலகி இருப்பதுதான் என்று அவர் கூறினார்.
இதை சமாளிக்க பல்வேறு நாடுகள் மேற்கொண்ட முயற்சிகளை ஆராய்ந்த பிறகு அரசாங்கம் இந்த முடிவுக்கு வந்துள்ளது என்று பிரதமர் கூறினார்.
இருப்பினும், இந்த நோயைக் கட்டுப்படுத்துவதில் தென் கொரியா வெற்றிபெற்றுள்ளது. அங்கு தொடர்ந்து மேலும், மேலும் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
இந்த வைரஸ் தொற்றை தடுக்க வேண்டுமானால், சமூகத்தில் இருந்து கூட்டத்தில் இருந்து விலகியிருக்கும் சமூக இடைவெளியை கட்டாயமாக கடைபிடிக்கவேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
சமூகத்தில் இருந்து விலகியிருத்தல் மற்றும் லாக் டவுன் மூலம் மட்டுமே கொரோனா வைரஸ் சங்கிலியை உடைக்க முடியும் என்ற ஒரே பாடத்தை மட்டுமே இந்தியா கற்றுக்கொண்டது என்பது தெளிவாகப் புரிகிறது.
அரசாங்கம் மற்றும் அமைப்பு மீதான விமர்சனங்கள் தொடங்கியபோது,உத்தரபிரதேசத்தின் யோகி அரசு டெல்லிக்கு பேருந்துகளை அனுப்பியது, மக்கள் ஒன்றாக பேருந்துகளில் அமர்ந்து செல்ல முற்பட்டனர். இந்த சூழ்நிலையில், லாக் டவுன் மற்றும் சமூக விலகலை பராமரிப்பது என்ற பேச்சும் அடிபட்டுப் போனது.
புலம் பெயர்ந்தவர்கள் தங்கள் கிராமங்களுக்குச் சென்றார்கள், ஆனால் அவர்களுடைய சொந்த மாநில அரசாங்கங்கள் அவர்களை எப்படி கையாண்டன என்பதும் அனைவரும் அறிந்ததே. அவர்களை தனிமைப்படுத்துவதாக கூறப்பட்டது, ஆனால் அதற்கான அடிப்படை வசதிகள் கூட அங்கு செய்யப்படவில்லை.

பட மூலாதாரம், Getty Images
தென் கொரியாவிடம் இருந்து இந்தியா ஏன் பாடம் கற்றுக்கொள்ளவில்லை?
கொரோனா வைரஸ் உலகளாவிய தொற்றுநோய் என்று உலக சுகாதார அமைப்பு, 2020 மார்ச் தொடக்கத்தில் அறிவித்தது. அது பரவாமல் தடுக்க, சமூக விலகலையும், சுய தனிமைப்படுத்தலையும் பின்பற்ற வேண்டும் என்று அது கூறியது.
இந்த விஷயத்தில் தென் கொரியா ஒரு விதிவிலக்காக இருந்தது, இது பெரிய அளவிலான சோதனைக்கு முயன்று, கொரோனா வைரஸ் சங்கிலியை உடைப்பதில் வெற்றிகரமாக செயல்பட்டது. லாக் டவுன் போன்ற கடுமையான நடவடிக்கைகளை தென் கொரியா எடுக்கவில்லை.
கொரோனாவை எதிர்கொள்ளும் இந்திய அரசின் திட்டத்தில் பரிசோதனைகளை பெரிய அளவில் செய்வது என்ற முக்கியமான விஷயம் சேர்க்கப்படவில்லை.
Reframing The Corona Conventions என்ற தனது புத்தகத்தில் பேராசிரியர் காடஃப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். "மருத்துவ வசதி உடனடியாகக் கிடைக்கும் இடங்களில், போதுமான எண்ணிக்கையில் மருத்துவ பணியாளர்கள் இருகின்றனர், அவர்கள் திறமையானவர்கள். அந்த இடங்களில் உள்ள நோயாளிகள் உயிர் பிழைக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஸ்பெயினில் 1000 பேருக்கு மூன்று படுக்கைகள் என்ற அளவில் உள்ளது. இது இத்தாலியில் 1000க்கு 3.2, பிரான்சில் 6, ஜெர்மனியில் 8 மற்றும் தென் கொரியாவில் 12.3 என்ற அளவில் இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
சோதனைக் கருவிகளை உருவாக்க தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி கொடுப்பதில் தாமதம் ஏன்?
இந்தியாவில் கருவிகள் இல்லாததால், இங்கு போதுமான அளவு பரிசோதனை செய்ய முடியவில்லை என்று தெரியவருகிறது ஆரம்பத்தில், ஐ.சி.எம்.ஆர், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) மற்றும் ஐரோப்பியாவின் சி.இ. சான்றிதழ்கள் கொண்ட சோதனை கருவிகள் அங்கீகரிக்கப்பட்டன. இதில், சென்னையைச் சேர்ந்த டிரிவிட்ரான் ஹெல்த்கேர் போன்ற இந்திய நிறுவனங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை.
ட்ரிவிட்ரான் நிறுவனம், ஐந்து லட்சம் கிட்களை சீனாவுக்கு அனுப்பியுள்ளது. ஒரே நாளில் ஆயிரக்கணக்கான மாதிரிகளை சோதிக்கக்கூடிய கருவிகளை நிறுவனம் உருவாக்கி வந்தாலும், இந்திய அரசாங்கம் ஆரம்பத்தில் பரிசோதனை கிட்களை கிட்டத்தட்ட இருமடங்கு விலையில் இறக்குமதி செய்தது.
ட்ரிவிட்ரான் மற்றும் மைலாப் டிஸ்கவரி போன்ற நிறுவனங்கள் ஐ.சி.எம்.ஆர் மற்றும் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதலுக்காக இன்னும் காத்திருக்கின்றன.
மறுபுறம், சுவிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ரோஷே டயக்னாஸ்டிக்ஸ் இந்தியாவுக்கு உரிமம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் எஃப்.டி.ஏ அங்கீகாரம் பெற்ற மூலக்கூறு கண்டறியும் நிறுவனம் மைலாப் நிறுவனம் தான். 2019 ஆம் ஆண்டில், எச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி மற்றும் சி ஆகியவற்றை பரிசோதிப்பதற்கான கருவிகளை உருவாக்கும் நிறுவனம் மைலாப்.

பட மூலாதாரம், Getty Images
ட்ரிவிட்ரானின் தொழில் கூட்டாளியாக சீனாவில் இயங்கும் LabSystems Diagnostics சீனாவில் கிட்களை விற்பனை செய்து வந்தது. நாள்தோறும் 7.5 லட்சம் சோதனை கருவிகளை தயாரிப்பதாக ட்ரிவிட்ரான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐ.சி.எம்.ஆர் நெட்வொர்க்கில் இணைந்திருக்கும்ஆய்வகங்கள் நடத்திய கோவிட் -19 சோதனைக்கு 4,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது ஏழைகளுக்கு மிகப்பெரியத் தொகை.
அமெரிக்க நிறுவனமான தெர்மோ ஃபிஷர் சயின்டிஃபிக் மற்றும் சுவிஸ் நிறுவனமான ரோச் டையக்னாஸ்டிக்ஸ் கருவிகளை ஐ.எம்.சி.ஆர் பயன்படுத்துகிறது.
அமெரிக்க மற்றும் இந்திய நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு நிறுவனமான கோசரா தொடர்பாக மற்றொரு சர்ச்சை எழுந்தது. அமெரிக்காவின் எஃப்.டி.ஏ சான்றிதழ் பெற்றிருக்கிறதா என்பதை தெளிவு படுத்திக் கொள்வதற்கு முன்பே, பரிசோதனை கருவிகளை உருவாக்க ஆரம்பக் கட்டத்தில் இந்த நிறுவனத்திற்கு உரிமம் கொடுக்கப்பட்டது.
புனேவின் தேசிய வைராலஜி நிறுவனத்திடமிருந்து சோதனைக்கு ஒப்புதல் பெற்ற உள்நாட்டு உற்பத்தியாளர்கள் அனைவரையும் பரிசோதனை கருவிகளை உற்பத்தி செய்ய அனுமதிக்கலாம் என்று அரசு இறுதியில் தனது கொள்கையை மாற்றிக் கொண்டது.

பட மூலாதாரம், Getty Images
உலகிலேயே மிகக் குறைந்த அளவில் பரிசோதனை செய்யும்நாடுகளில் இந்தியா இடம் பெற்றிருப்பது ஏன்?
மார்ச் 27 வரை, இந்தியா 26,798 சோதனைகளை மட்டுமே செய்துள்ளது, இது உலகெங்கிலும் உள்ள நாடுகளுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைந்த அளவிலானது.
இந்தியாவில் எத்தனை சோதனைகள் நடைபெறுகின்றன என்பது பற்றிய தெளிவான தகவல்கள் இல்லை மற்றும் சோதனை கருவிகள் இல்லாததால் சோதனையின் அளவுகோல் கண்டிப்பானது.
இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சென்றுத் திரும்பியவர்கள் அல்லது கோவிட் -19 நோயாளிகளுடன் தொடர்பு கொண்டவர்கள் மட்டுமே தற்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
அறிகுறிகளின் அடிப்படையில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அதிக ஆபத்துள்ளவர்களையும் சேர்க்கலாம் என்று ஐ.சி.எம்.ஆர். மார்ச் 20ஆம் தேதியன்று பரிந்துரைத்துளது.
1000 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கவேண்டும் என்ற WHO பரிந்துரைக்கிறது. ஆனால், இந்தியாவில் 10,000 பேருக்கு ஒரு மருத்துவர் தான் இருக்கிறார்.
இந்த நேரத்தில் கிட் மற்றும் பி.பி.இ உற்பத்தியை ஏன் அதிகரிக்கவில்லை என்ற கேள்விகளை இந்தியா எதிர்கொள்கிறது. அதுமட்டுமல்ல, வென்டிலேட்டர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த ஏன் தீவிர முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்ற கேள்விகளும் எழுகின்றன.
கொரொனா தொற்றின் மூன்றாம் கட்டத்தை நாடு எட்டியுள்ளது என்பதை அரசாங்கம் மார்ச் 3ஆம் தேதியன்று சுட்டிக்காட்டியது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும், நாட்டில் மருத்துவ உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் மத்திய அரசு ரூ .15,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக பிரதமர் தனது இரண்டாவது உரையில் தெரிவித்திருந்தார்.
"இது கொரோனா சோதனை பிரிவுகள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ), தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், ஐசியு படுக்கைகள், வென்டிலேட்டர்கள் மற்றும் பிற அத்தியாவசிய உபகரணங்களின் எண்ணிக்கையை விரைவாக அதிகரிக்க உதவும்" என்று பிரதமர் கூறியிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
வென்டிலேட்டர்களின் பற்றாக்குறை எவ்வாறு சமாளிக்கப்படும்?
மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவின் பொதுத்துறையிடம் 8,432 வென்டிலேட்டர்கள் மட்டுமே உள்ளன, தனியார் துறையில் 40,000 வென்டிலேட்டர்கள் உள்ளன.
வென்டிலேட்டர்கள் தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, ஹூண்டாய் மோட்டார் இந்தியா, ஹோண்டா கார்ஸ் இந்தியா, மாருதி சுசூகி இந்தியா ஆகி நிறுவனங்களை அரசாங்கம் கேட்டுள்ளது.
கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வென்டிலேட்டர்கள் அடிப்படையானத் தேவையாக இருக்கிறது.
தற்போது நாட்டில் உள்ள வென்டிலேட்டர்களின் எண்ணிக்கையை விட 8-10 மடங்கு அதிகமாக இந்தியாவுக்கு வென்டிலேட்டர்கள் தேவைப்படும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கார் நிறுவனங்கள் இப்போது வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யத் தொடங்கினாலும், நாட்டிற்கு தேவைப்படும் அளவுக்கு வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்வது மிகப்பெரிய சவாலாகும்.
மற்ற நாடுகள் வென்டிலேட்டர்கள் விஷயத்தில் கவனமாக இருந்தன. அத்துடன் சமூக விலகலுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற இறக்குமதி செய்யப்பட்ட கருத்துக்களை விட, மருத்துவ ஏற்பாடுகள் அதிகமான அளவில் செய்யப்பட வேண்டும் என்று ஊடக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
கோவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து பல கேள்விகள் முளைத்துக் கொண்டே இருந்தாலும், அவை விடை தெரியா வினாக்களாகவே தொக்கி நிற்கின்றன.












