கொரோனா குறித்து ஈஷா கூறுவதென்ன -சிவராத்திரிக்கு வந்த லட்சக்கணக்கானோர்

Isha Foundation

பட மூலாதாரம், Isha Foundation facebook page

கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் பிப்ரவரி 21ஆம் தேதியன்று மகா சிவராத்திரிக்கென லட்சக்கணக்கானவர்கள் திரண்ட நிலையில், அதில் யாருக்கும் கொரோனா இல்லை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் கோவிட் - 19 வைரஸை ஒரு பெருந்தொற்று என அறிவிப்பதற்கு முன்பாகவும் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பிப்பதற்கு முன்பாகவே வெளிநாட்டினர் ஈஷாவுக்கு வந்துவிட்டதாகவும், சீனா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட கோவிட் -19 வைரஸ் தாக்கிய நாடுகளை சேர்ந்தோர் ஈஷா யோகா மையத்துக்கு வர வேண்டாம் என்று சொல்லிவிட்டதாகவும் அந்த மையம் தெரிவித்திருக்கிறது.

ஈஷாவுக்கு வந்த மற்ற வெளிநாட்டினர்கள் கட்டாயம் 28 நாட்கள் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் தங்கி இருப்பவர்களும் தன்னார்வலர்களும் சாதாரண நாட்களில்கூட கடுமையான மருத்துவ, சுகாதார நெறிமுறைகள் பின்பற்றி வருவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.

Banner image reading 'more about coronavirus'
Banner

பிப்ரவரி 21ஆம் தேதி ஈஷா யோகா மையத்தில் பிரம்மாண்டமான முறையில் நடத்தப்பட்ட மகா சிவராத்திரி விழாவில் உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்றனர். ஜனவரி மாத இறுதியிலேயே இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டுவிட்ட நிலையில், இந்த மகா சிவராத்திரி விழாவில் பெரும் எண்ணிக்கையில் ஆட்கள் கூடியது குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இதையடுத்தே இந்த விளக்கத்தை ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் சென்னையில் அம்மா உணவகங்களைப் பார்வையிட்ட முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமியிடம் ஈஷா மைய விழாவில் பங்கேற்றவர்களுக்கு நோய் தொற்று குறித்த சோதனைகள் செய்யப்படுமா என்று கேள்வியெழுப்பப்பட்டபோது, நோய்க்கான அறிகுறிகள் இருந்தால் சோதனை செய்யப்படும் என்று தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: