கொரோனா வைரஸ் பாதிப்புக்கான மோதி அரசின் நிதி ஒதுக்கீடு யானைப் பசிக்கு சோளப்பொறியா? - ஓர் அலசல்

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், நிதின் சேத்தி
    • பதவி, மூத்த பத்திரிகையாளர்

(இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசியின் கருத்துகள் அல்ல.)

கொரொனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மார்ச் 26ஆம் தேதியன்று மத்திய அரசு ஒரு நிதி தொகுப்பை அறிவித்தது. இது ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் 21 நாட்களில் மோசமடைந்துவரும் பொருளாதார நிலைமையை மேம்படுத்த உதவும்.

எது எவ்வாறாயினும், அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இந்த நிதி உதவிகள், தற்போதைய சூழ்நிலைக்கு எதிர்பார்த்ததை விட மிக மிகக் குறைவு என்பதுடன், போதுமானதாகவும் இல்லை. வரவிருக்கும் மாதங்களில் நிதி உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவுவதற்கு நிச்சயமாக இது போதுமானதாக இருக்காது. இந்த நிதித் தொகுப்பு ஒதுக்கீடு செய்வதில் அரசு கஞ்சத்தனம் காட்டியுள்ளது.

இந்த நேரத்தில் அரசாங்கத்தின் உதவி யாருக்கு தேவை என்பது முக்கியமானது.

நாட்டின் அமைப்புசாரா துறையில் 90 சதவீத இந்திய மக்கள் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு சட்டரீதியான தீர்வு எதுவும் இல்லை. அவர்களின் வாழ்வாதாரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு எந்தவொரு சட்ட பாதுகாப்பும் கிடையாது என்பதும், கோடிக்கணக்கான நகர்ப்புற மற்றும் கிராமப்புற தொழிலாளர்கள் அமைப்புசாராத் துறையில் பணியாற்றுவதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

சமூகத்தின் ஏழ்மையான இந்த மக்கள்தான் எந்தவொரு பொருளாதார ஏற்றத் தாழ்வுகளாலும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த மக்கள் தினசரி, வாராந்திர கூலி மற்றும் மாத ஊதியம் பெற்று, அதில் தான் தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர்.

திடீரென்று வருமானம் நின்றுபோய்விட்டால், அதை சமாளிக்க அவர்களிடம் சேமிப்பு எதுவும் இருப்பதில்லை. அல்லது ஒரு சிறிய தொகை இருக்கலாம். நாடு தழுவிய ஊரடங்கின் காரணமாக நாட்டில் பொருளாதார நடவடிக்கைகள் முழுமையாக ஸ்தம்பித்து நிற்கும் நிலையில், இந்திய சமுதாயத்தின் இந்தப் பிரிவினர்தான் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள்.

Banner image reading 'more about coronavirus'
Banner image reading 'more about coronavirus'

கொரோனா வைரஸின் தாக்குதலில் இருந்து நாட்டை பாதுகாக்க 21 நாள் லாக் டவுன் என்ற ஊரடங்கை அறிவிப்பதற்கு முன்னதாக, நாட்டின் பலவீனமான மக்களுக்கு உதவ பொருளாதார தொகுப்பு மற்றும் வளங்களை அரசு அறிவித்திருக்க வேண்டும். ஆனால், மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு அவ்வாறு செய்யாமல் அலட்சியம் காட்டியது.

இந்த நீண்ட ஊரடங்கு அறிவிப்பானது, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் வாழ்வாதாரத்தை முடக்கிவிட்ட து. 21 நாள் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட 48 மணி நேரத்திலேயே, அதற்கான திட்டமிடல் போதுமானதாக இல்லை என்பது நிதர்சனமாக வெளிப்பட்டது. இன்னும் சில நாட்களில், நிலைமை மிகவும் மோசமாக மாறக்கூடும், மக்கள் பணப் பற்றாக்குறை மற்றும் பட்டினியால் பாதிக்கப்படுவார்கள்.

இத்தகைய சூழ்நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமையன்று நிதி உதவித் தொகுப்பை அறிவிக்கப் போகிறார் என்ற செய்தி வந்ததும், மக்கள் துயரத்தை மத்திய அரசு புரிந்து கொண்டது என்ற நம்பிக்கை துளிர்விட்டது. ஆனால், மக்களின் பிரச்சனைகளை அகற்ற அரசு தயாராக உள்ளது என்று மக்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கையையும், எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற நிர்மலா சீதாராமன் தவறிவிட்டார்.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

மக்களின் நம்பிக்கைகளையும், அரசின் அறிவிப்புகளையும் அலசி ஆராய்ந்து பார்க்கலாம்.

1.7 லட்சம் கோடி நிவாரணத் தொகுப்பை அறிவித்துள்ளதாக மத்திய அரசு கூறியது. இந்தத் தொகை 2019-20 நிதியாண்டில் இந்தியாவின் திருத்தப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.83 சதவீதம் மட்டுமே. கொரோனா வைரஸிலிருந்து எழும் பொருளாதார நெருக்கடிக்கு மற்ற நாடுகள் தங்கள் பொருளாதாரங்களின் அளவிற்கு ஏற்ப மிகப் பெரிய பொருளாதார நிதியுதவியை அறிவித்துள்ளன. அதை பார்க்கும்போது, இந்திய அரசின் நிதி ஒதுக்கீடு மிக மிகக் குறைவு.

அதுமட்டுமல்ல, அறிவிக்கப்பட்ட இந்த நிதித் தொகுப்பும் உண்மைக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது.

நிதியமைச்சர் அறிவித்த தொகுப்பை சற்று கூர்ந்து கவனித்தால், அரசாங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் அடிப்படை தவறுகளை செய்துள்ளது. நிர்மலா சீதாராமன் நிதித் தொகுப்பை அறிவித்தபோது, ஒவ்வொரு பகுதிக்கும் உள்ள தொகையை தனித்தனியாக குறிப்பிட்டார். அவை அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும், மொத்த நிதித் தொகுப்பின் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய் தான் வருகிறது. எடுத்துக்காட்டாக, மன்ரேகா திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிக்கும் நிதித் தொகுப்பைப் பார்ப்போம். இது குறித்து சமூக ஊடகங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டபோது, அரசாங்கம் திருத்தப்பட்ட அறிக்கையை வெளியிட்டது. தொகுப்பின் வெவ்வேறு பகுதிகள் தொடர்பான நிதித் தகவல்கள் காணவில்லை.

அறிவிப்பு எண் -1: மன்ரேகா திட்டத்தின் கீழ், வேலை செய்பவர்களின் ஊதியம் நாளொன்றுக்கு 20 ரூபாய் என்ற அளவில் உயர்த்தப்படும். அதற்காக நிதித்தொகுப்பில் 5,600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு, மன்ரேகாவில் (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையாவாய்ப்பு உறுதியளிப்பு சட்டம்) தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிப்பதாக அரசாங்கம் அறிவிப்பை வெளியிட்டது. இது ஆண்டுதோறும் செய்யப்படுவதுதான். ஆனால், இப்படி அதிகரிக்கப்பட்ட ஊதியமும், ஊரடங்கால் வேலை இல்லாமல் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு பயனற்றது. ஏனென்றால் இவர்கள் அனைவரும் சமுதாய விலகலை பின்பற்ற வேண்டும்.

மன்ரேகா என்பது ஒரு லாப நோக்கமின்றி செயல்படும் பணிகள் என்பதால், இங்கு வேலை இல்லை என்றால் கூலி இல்லை என்று தான் பொருள். கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு மன்ரேகாவில் 6 முதல் 8 கோடி நாட்கள் வேலைவாய்ப்பு குறைந்திருப்பதைக் காண முடிகிறது. (அதன் இறுதி புள்ளிவிவரங்கள் மார்ச் இறுதிக்குப் பிறகு வெளிப்படும்). நிலைமை மோசமடையப் போவதற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரிகின்றன.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

அறிவிப்பு எண்-2: 80 கோடி மக்களுக்கு மூன்று மாதங்களுக்கு கூடுதல் ரேஷன் வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதந்தோறும் ஒரு கிலோ பருப்பு வகைகள் வழங்கப்படும். இதற்கான பட்ஜெட் 40 ஆயிரம் கோடி.

இது மிகக் குறைவான நிவாரணம் என்பது வெளிப்படையாக தெரிகிறது. மொத்த சந்தைகளும் மூடப்பட்டிருக்கும் நிலையில், சில்லறை விற்பனையில் பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், உப்பு, எண்ணெய் மற்றும் சர்க்கரை போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்க ஏழைகளுக்கு பணம் தேவைப்படும். கோதுமை மற்றும் அரிசியின் கூடுதல் ரேஷன் போன்றவை இதுபோன்ற கடினமான காலங்களில் ஏழைகளுக்கு நிவாரணம் அளிக்கும். ஆனால், பொருட்களின் விநியோக சங்கிலி உடைபடும்போது, ஏழை மக்களுக்கு சிக்கல்கள் அதிகரிக்குமே அன்றி குறையாது. பொதுமக்கள், அதிலும், குறிப்பாக வெளியூரில் இருந்து வந்து வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அரசாங்க ரேஷன் கடைகளுக்கு செல்வதும் கடினமாகிவிட்டது. இத்தகைய சூழ்நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களின் நிலைமை எப்படி இருக்கும்?

இரண்டாவதாக, இந்த ஆண்டின் முழு ரேஷனுக்கும் மானியம் வழங்குவதற்கான சுமை அரசுக்கு ஏற்கனவே அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது பங்கின் நிதிச் சுமையை தாங்குமாறு இந்திய உணவுக் கழகத்தை அரசாங்கம் ஆண்டுதோறும் கட்டாயப்படுத்துகிறது. இதனால், இந்த நிதிச் சுமை அரசாங்கத்தின் சொந்த பதிவுகளிலிருந்து இல்லாமல் போகலாம். ஆனால், கணக்குப் போட்டால் உண்மை நிலை என்ன? இது, புதிய நிதியாண்டிற்கான கணக்கில் மேலும் அதிக சுமையை ஏற்படுத்தும்.

அறிவிப்பு எண்-3: சுய உதவிக்குழுக்களுக்கான கடன் தொகையை 10 லட்சத்திலிருந்து இருபது லட்சமாக உயர்த்த வேண்டும்.

பணம் ஒதுக்கீடு செய்வது மட்டும் மிக முக்கியமான விஷயம் அல்ல. அரசாங்கத்தின் புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டு இதுவரை சுய உதவி குழுக்களுக்கு 1500 கோடி ரூபாய் நிதி கொடுக்கப்பட்டுள்ளது. மூன்று லட்சம் ரூபாய் வரையிலான கடன் மட்டுமே, சலுகை வட்டியில் கிடைக்கிறது. மூன்று லட்சத்திற்கும் அதிகமான தொகைக்கு, மகளிர் சுய உதவிக் குழுக்கள் வங்கியின் சாதாரண வட்டி விகிதத்தையே செலுத்த வேண்டும் என்பதால் இந்த அறிவிப்பால் அவர்களுக்கு பெரிய அளவில் பயனில்லை. திடீரென வருமானத்தை இழந்தவர்கள் தங்கள் குடும்பத்தை நடத்துவதற்கே உடனடியாக பணம் தேவைப்படும் நிலையில் இருப்பார்கள். கடன்களை வாங்கும்போது, இடைத்தரகர்கள் மற்றும் வங்கிகளையும் சுய உதவிக்குழுக்கள் சமாளிக்க வேண்டும். கடனுக்கு விண்ணப்பிப்பதற்கும் அதைப் பெறுவதற்கும் இடையிலான காலமும் அதிகமாகவே உள்ளது.

அறிவிப்பு எண் 4: மூன்று மாதங்களில் 20.40 கோடி பெண்களின் ஜன்-தன் கணக்குகளில் 1,500 ரூபாய் போடப்படும். பட்ஜெட்- 30,000 கோடி

அரசாங்கம் விரும்பினால், அதை பெண்களுக்கு மட்டுமல்ல, அனைத்து ஜன்-தன் கணக்குகளுக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்தலாம். மாதத்திற்கு ஐநூறு ரூபாய் என்பது மிகக் குறைந்த தொகை. ஒரு திறமையான தொழிலாளி இதை விட அதிகமாக ஒரு நாளிலேயே சம்பாதித்துவிடுகிறார். திறன் குறைந்த தொழிலாளி இரண்டு நாட்களில் இந்த பணத்தை எளிதாக சம்பாதிக்கிறார். அத்தியாவசிய பொருட்களின் விலைகள் ஏற்கனவே பன்மடங்கு அதிகரித்துள்ளன. நாட்டின் பல பகுதிகளிலும் பொருட்களின் விலைகள் இனி குறையாது. எனவே, வேலைவாய்ப்பு இல்லாதபோது, பல பகுதிகளிலும் வசிக்கும் மக்களின் தினசரி வாழ்க்கைக்கான செலவு அதிகரிக்கப் போகிறது

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

அறிவிப்பு எண் -5: 8.7 கோடி விவசாயிகளுக்கு ஏப்ரல் மாதம் பிரதமர் கிசான் சம்மன் நிதியின் கீழ் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும். பட்ஜெட் - 16 ஆயிரம் கோடி

நில உரிமை இருந்த வைத்திருந்த விவசாயிகளுக்கு இந்த தொகையை ஏப்ரல் மாதத்தில் வழங்க ஏற்கனவே திட்டமிடப்பட்ட்டிருந்தது. இது ஒரு தனிப்பட்ட உதவித்தொகை அல்ல. நிலமில்லாத அல்லது பிறருடைய வயல்களில் பணிபுரியும் மற்றும் விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகளில் பெரும்பாலானோர் இந்த திட்டத்தால் எந்த நன்மையும் பெற மாட்டார்கள்.

அறிவிப்பு எண் 6: அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் விதவைகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவி கிடைக்கும். பட்ஜெட் - மூவாயிரம் கோடி

இந்த சட்டத்தின் கீழ், கைம்பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு இருநூறு முதல் ஐநூறு ரூபாய் வரை ஓய்வூதியம் வழங்குவதற்காக மத்திய அரசு ஏற்கனவே மாநிலங்களுக்கு நிதியுதவி வழங்குகிறது. பல சந்தர்ப்பங்களில், மாநிலங்கள் தங்கள் சார்பாக இன்னும் சில பணத்தைச் சேர்த்து, இந்த தொகையை ஓரளவு அதிகரித்து வழங்குகின்றன. இந்த நிலையில், மாதத்திற்கு 333 ரூபாய் என்ற குறைவான தொகையை மத்திய அரசு கொடுத்தால், அதனால் பெரிய அளவு பயன் ஏதும் இல்லை.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

அறிவிப்பு எண் -7: உஜ்வாலா திட்டத்தின் கீழ் 8 கோடி குடும்பங்களுக்கு 3 மாதங்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர்கள். பட்ஜெட் - 13 ஆயிரம் கோடி

2019-20 விலையில் அரசாங்கம் இலவச சிலிண்டர்களை விநியோகித்தால், சிலிண்டர் ஒன்றின் விலை சுமார் 681 ரூபாயாக இருக்கும். வாடிக்கையாளர்கள் இந்த சிலிண்டர்களை 500 ரூபாய்க்கு பெறுகின்றனர். அப்படியிருந்தும், ஆண்டுக்கு சராசரியாக நான்கு சிலிண்டர்களுக்கு மேல் எந்தவொரு குடும்பமும் பயன்படுத்தவில்லை. அதிக வருமானம் உள்ள வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு சராசரியாக ஏழு சிலிண்டர்களைப் பயன்படுத்துகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் இப்போது அரசாங்கம் இந்த சிலிண்டர்களை ஏழைகளுக்கு இலவசமாக்குவதால், ஒவ்வொரு குடும்பமும் மேலும் அதிகமாக இரண்டு சிலிண்டர்களை பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம். இந்த அதிகபட்ச பயன்பாடு இருந்தாலும்கூட, பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் குறைவாகவே செலவாகும்.

அறிவிப்பு எண் 8: 100க்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட நிறுவனத்தின் இ.பி.எஃப். பங்களிப்பில், ஊழியர்கள் மற்றும் நிறுவனத்தின் பங்கை அரசாங்கம் செலுத்தும். இதில் அந்த நிறுவனத்தின் 90 சதவீத ஊழியர்கள் 15 ஆயிரம் அல்லது அதற்கும் குறைவான சம்பளத்தைப் பெறுபவர்களாக இருக்க வேண்டும்.

இந்த விவகாரம் தொடர்பாக நிதியமைச்சரின் அறிவிப்பிற்கும், அரசாங்கம் பத்திரிகைகளுக்கு கொடுத்துள்ள அறிக்கையிலும் ஒரு குழப்பம் இருக்கிறது. 100க்கும் குறைவான ஊழியர்கள் வேலை செய்யும், மற்றும் ஊழியர்களின் மாத ஊதியம் 15,000க்கும் குறைவாக இருக்கும் ஒவ்வொரு நிறுவனமும் இதன் மூலம் பயனடைய முடியும் என்று பத்திரிகைகளுக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் எழுதப்பட்டுள்ளது. ஆனால், பிசினஸ் ஸ்டாண்டர்டின் சோமேஷ் ஜா எழுதியது போல, அரசாங்கத்தின் இந்த பொறுப்பை நாம் நம்பினால், இதன் பொருள் -

சமூக பாதுகாப்பு முறையின் ஒரு பகுதியாக இருக்கும் இ.பி.எஃப்பின் பயனாளிகளில் பெரும்பாலானோருக்கு இது பயனளிக்காது. யதார்த்தம் என்னவென்றால், அரசாங்கத்தின் இந்த முயற்சியால் நாட்டின் மொத்தம் 47 கோடி இ.பி.எஃ.ப். கணக்கு வைத்திருப்பவர்களில் 16 சதவீத பேருக்கு மட்டுமே பயன் கிடைக்கும்.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

அரசாங்கத்தின் அனைத்து அறிவிப்புகளையும் ஒரே மாதிரியாக, சமநிலையில் இருந்து ஆராய்கிறோம். மக்களுக்கு உதவி என்ற பெயரில் அரசாங்கம் புளிப்பு மிட்டாய்களை விநியோகிப்பதாகவே தெரிகிறது. ஆனால், இது அரசாங்கம் தனது விசாலமான கருணையுள்ளத்தைக் காட்ட வேண்டிய நேரம்.

ஆனால், நேர்மையாக சொல்வதென்றால், உண்மையில், இது மக்களுக்கு பெரிய அளவில் உதவிகள் செய்வதாக சொல்லி, மூளைச்சலவை செய்வதே. உலகெங்கிலும் ஆபத்து மணிகள் ஒலித்தபோது கூட, அரசாங்கம் எச்சரிக்கை செய்யவில்லை, பொருளாதாரத்தை காப்பாற்றுவதற்கான நிதித் தொகுப்பை உருவாக்கும் திட்டங்களையும் மேற்கொள்ளவில்லை.

ஆனால், இந்த திசையில் அரசின் இந்த நடவடிக்கை முதல் படியாக இருக்கும் என்று நாம் நம்பலாம். மேலும், பொருளாதாரத்திற்கு நிவாரணம் வழங்க, இனி எதிர்வரும் நாட்களில் அரசாங்கம் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கும். பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டியை அமல்படுத்திய கடைசி நாட்களில், அவற்றைத் திட்டமிட்டு செயல்படுத்துவதில் செய்த தவறை அரசாங்கம் உடனடியாக ஏற்றுக்கொண்டது. அதேபோல, இந்த முறை அரசாங்கம் தனது தவறை ஏற்றுக் கொள்ளும் என்றே நம்புகிறோம்.

அரசாங்கத்தின் முன் இருக்கும் சவால் மிகவும் தெளிவானது. சரியான உரிய திட்டமிடலின் மூலம் அரசாங்கம் மக்களுக்கு நன்மை செய்ய முடியும். அரசு கொடுக்கும் உதவிகளின் நன்மை மக்களைச் சென்றடைவதற்கான வழிகளில் உள்ள தடைகளை கண்டுபிடித்து, அவற்றை அகற்ற வேண்டும். அதுதான், அனைத்து அரசாங்கத் திட்டங்களின் பயன், தேவைப்படும் குடிமக்களுக்கு சென்று சேரும்.

புதிய நிதியாண்டிற்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை அரசாங்கம் நிர்ணயிக்கும் போது மட்டுமே இந்த நிதித் தொகுப்புகள் போதுமானதாக இருக்கும். இதன் அடிப்படையில், பொருளாதாரத்தின் முன் ஒரு புதிய வகையான போர் உள்ளது. அத்தியாவசிய பொருட்களை வழங்கும் சாதனங்கள் இந்த நீண்ட கால ஊரடங்கு உத்தரவின் போது மக்களை சரியான முறையில் அடைய வேண்டும்.

கொரொனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மிகவும் அவசியமானது. ஏனெனில் இந்த தொற்றுநோயின் அபாயங்களை புரிந்து கொள்வதில் அரசாங்கம் காலதாமதம் செய்துவிட்டது. ஆனால் இப்போது கொரொனா அதிவேகத்தில் பரவும் இந்த நிலையில் அரசாங்கத்தால் தூங்க முடியாது. இந்த தொற்றுநோயின் மோசமான மற்றும் பேரழிவு விளைவுகளை மிகவும் அதிக அளவு அனுபவிப்பது நாட்டின் ஏழை மக்கள்தான்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: