கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் ஒரே நாளில் 149 அதிகரிப்பு - Coronavirus in India

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 918ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவர்களில் 80 பேர் முழு உடல்நலன் பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில், 19 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 149 பேருக்கு கோவிட்-19 நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் நிலவும் இடப்பற்றாற்குறையை போக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தங்கும் வகையில் விரைவு ரயில்களின் பெட்டிகள் தற்காலிக சிகிச்சை அறைகளாக மாற்றப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், ஒடிசாவின் கமக்யா ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள ரயில் ஒன்றில் ஒவ்வொரு பெட்டியிலும் ஒன்பது தற்காலிக படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

இந்தியாவில் கோவிட்-19 நோய்த்தொற்று பரிசோதனையில் ஈடுபடுவதற்கு 30க்கும் மேற்பட்ட தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றில் இதுவரை 400 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.

Banner image reading 'more about coronavirus'

பாரதியா ஜனதா கட்சியை சேர்ந்த அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்துவதற்காக மத்திய அரசுக்கு வழங்க உள்ளதாக அந்த கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். அதே போன்று, பாஜகவை சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ஒரு கோடி ரூபாயை மத்திய அரசுக்கு வழங்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இத்தாலியில் இருந்து இந்தியா வந்தவர்கள்

கொரோனா வைரஸால் பேரழிவை சந்தித்து வரும் இத்தாலியின் ரோம் மற்றும் மிலன் ஆகிய நகரங்களிலிருந்து அழைத்துவரப்பட்ட இந்தியாவை சேர்ந்த 481 பேர் டெல்லியின் சாவ்லாவில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் முதன் முதலாக கண்டறியப்பட்ட சீனாவின் வுஹான் நகரத்திலிருந்து அழைத்து வரப்பட்ட ஜம்மு & காஷ்மீரை சேர்ந்த மாணவர் மற்றும் புனேவில் உள்ள மருத்துவமனையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் செலிவியர் என இரண்டு பேரை தொலைபேசி வாயிலாக அழைத்து பிரதமர் நரேந்திர மோதி பாராட்டு தெரிவித்ததாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலையால் தலைநகர் டெல்லியில் வேலைவாய்ப்பை இழந்த ஆயிரக்கணக்கானோர் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் நடந்தே செல்லும் அவலநிலை தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், தேசிய தலைநகர் பகுதியிலிருந்து பக்கத்துக்கு மாநிலங்களில் இருக்கும் தங்களது ஊர்களுக்கு நடந்தே செல்லும் அந்த மக்களுக்கு தேவையான போக்குவரத்து, உணவு, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்துவித தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோதி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் உள்ளிட்ட அவசரகால சூழ்நிலைகளை சமாளிக்க உதவும் புதிய நிதியம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு அனைத்து தரப்பு மக்களும் நன்கொடை அளிக்கலாம் என்றும் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

585 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியத்தை பயன்படுத்த கோரிக்கை

21 நாட்கள் இந்தியா முழுவதும் முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளதால் உள்நாட்டிலேயே குடிபெயர்ந்த தொழிலாளர்கள் பலர் வேலை இழந்துள்ளனர்.

அவர்கள் தாங்கள் இருக்கும் நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கும் திரும்ப முடியாமல், வேலை செய்யும் ஊர்களிலும் தங்க முடியாமல் உள்ளனர். இவர்களில் கணிசமானோர் வீடற்றவர்கள்.

கொரோனா வைரஸ்

அவர்களில் பெரும்பாலானவர்கள் முறையான ஆவணங்கள் இல்லாதவர்கள் என்பதால் அரசின் உதவிகளை பெறுவதிலும் சிக்கல் உள்ளது.

அங்கன்வாடிகள், அரசு கல்லூரிகள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், சமுதாயக் கூடங்கள் ஆகியவற்றில் அவர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் மருத்துவ வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று இந்தியா முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், பொருளாதார வல்லுநர்கள், வழக்கறிஞர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் அரசுக்கு கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்திய உணவுக் கழகம் மற்றும் மத்திய அரசின் கிடங்குகளில் இருக்கும் 585 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியத்தை இவர்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டின் நிலவரம் என்ன?

தமிழ்நாட்டில் இதுவரை 1500 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 42 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இவர்களில், இரண்டு உடல்நலன் பெற்றுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொரோனா வைரஸ்

சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள நடிகர் கமல்ஹாசனின் இல்லத்தில் கொரோனா தாக்கத்தால் 'தனிமைப்படுத்தப்பட்ட வீடு' என்ற நோட்டீஸ் ஒட்டப்பட்ட சிலமணிநேரத்தில் அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் கமலின் மகள் சுருதிஹாசன் ஒரு வாரத்திற்கு முன்னர் லண்டனில் இருந்து இந்தியா திரும்பினார். தன்னை தனிமைப்படுத்திகொள்வதாக சமூகவலைதளங்களில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதனால் ஒட்டப்பட்டிருக்கலாம் என கருதப்பட்ட நிலையில், அவர் வேறு இடத்தில் வசிப்பதாக தகவல் வெளியானது. தற்போது அந்த நோட்டீஸை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியுள்ளனர். பிபிசி தமிழிடம் பேசிய மாநகராட்சி அதிகாரி ஒருவர், அந்த நோட்டீஸ் தவறுதலாக ஒட்டப்பட்டிருக்கும் என தெரிவித்தார்.

சென்னை சுமார் 24,000 வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதால், வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள் என்ற தகவலால் ஒட்டப்பட்டிருக்கலாம் என அந்த அந்த அதிகாரி தெரிவித்தார்.

இதனை அடுத்து, மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆழ்வார்பேட்டை வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக அவர் வசிப்பதில்லை என்றும் கட்சியின் அலுவலகமாக அந்த இடம் செயல்படுகிறது என தெரிவித்துள்ளார். ''நான் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக வெளியான செய்தி உண்மையில்லை. வருமுன் தடுக்கும் நடவடிக்கையாக நான் கடந்த இரண்டு வாரங்களாக தனிமைப்படுத்தலை மேற்கொண்டுள்ளேன்,'' என தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: