கொரோனா சிகிச்சையில் அல்லாடும் மருத்துவ ஊழியர்கள் - கருவிகள் இல்லை, பாதுகாப்பு இல்லை

கோப்புப்படம்

பட மூலாதாரம், ARUN SANKAR / getty images

படக்குறிப்பு, கோப்புப்படம்
    • எழுதியவர், ஜுபைர் அகமது
    • பதவி, பிபிசி

பிகாரில் கிராமப் பகுதி ஒன்றில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி தென்பட்டால், அதற்கான பரிசோதனை செய்து கொள்வதற்கு அவர் 250 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்தாக வேண்டும். 13 கோடி மக்கள் தொகை கொண்ட அந்த மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பைக் கண்டறிய இரண்டு நகரங்களில் ஐந்து பரிசோதனை நிலையங்கள் மட்டுமே உள்ளன.

130 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் சுமார் 90 பரிசோதனை மற்றும் சிகிச்சை மையங்கள் மட்டுமே உள்ளன. மேலும் 27 மையங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் அச்சமூட்டும் வகையில் உள்ள குழப்பமான சுகாதார நடைமுறைகள் குறித்து எனது வெளிநாட்டு நண்பர்களில் ஒருவர் மிகுந்த கவலை தெரிவித்தார். தொழில் திறன், அலுவலர்கள் எண்ணிக்கை மட்டுமின்றி மருத்துவ சாதனங்கள் மற்றும் இதற்குத் தேவையான ஆதார வளங்களிலும் பற்றாக்குறை அதிகமாக உள்ளது.

இருந்தபோதிலும், முன்களத்தில் நின்று இந்த ஆட்கொல்லி வைரஸுக்கு எதிராகப் போராடி வரும் மருத்தவப் பணியாளர்களுக்கு இன்னும் பெரிய கவலை இருக்கிறது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தில் என்-95 (N95) வகை முகக்கவசம், கையுறைகள் போன்ற சில அடிப்படை வசதிகள் கூட போதுமான அளவுக்கு இல்லை என்று, இந்தச் சேவையில் ஈடுபட்டிருக்கும் பல மருத்துவர்களும், மருத்துவ ஊழியர்களும் தங்களுடைய சமூக ஊடக நண்பர்கள் மற்றும் தங்களைப் பின்தொடர்பவர்கள் மத்தியில் காட்டுக்கூச்சல் போல கூறி வருகிறார்கள் என்பதில் ஆச்சர்யம் எதுவும் கிடையாது.

கொரோனா வைரஸ்

உதாரணமாக, லக்னோ ஆர்.எம்.எல். மருத்துவமனையைச் சேர்ந்த ஷஷி சிங் முகநூலில் வெளியிட்டுள்ள காணொளி பதிவை எடுத்துக் கொள்ளுங்கள். தங்கள் மருத்துவமனையில் அடிப்படை வசதிகளில் உள்ள குறைபாடுகளை அந்தப் பெண் கட்டாயமாக வெளிப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்குத் தேவையான சாதனங்கள் மற்றும் மருத்துவ வசதிகளை செய்து தர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மருத்துவமனைகளில் நல்ல மருத்துவ வசதிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரி பிரதமருக்கு திறந்த மடல் எழுதி தன் கவலையை வெளிப்படுத்திய டாக்டர் தேவபிரதா மொஹாபத்ராவை எடுத்துக் கொள்ளுங்கள்.

ஞாயிற்றுக்கிழமை கோடிக் கணக்கிலான இந்தியர்கள், நாள் முழுக்க மக்கள் ஊரடங்கு கடைபிடித்து மருத்துவத் துறையினருக்கு மரியாதை செலுத்தும் வகையில் மேற்கொண்ட கை தட்டுதல் நிகழ்ச்சி குறித்து சில மருத்துவர்கள் வேகமாகவும், ஏளனமாகவும் எதிர்வினை ஆற்றினர்.

Banner image reading 'more about coronavirus'
Banner image reading 'more about coronavirus'

மக்களாக முன்வந்து கடைபிடித்த ஊரடங்கைத் தொடர்ந்து, அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு சாதனங்கள் வழங்க வேண்டும் என்றும், கொரோனா வைரஸ் தாக்குதலைத் தடுப்பதற்கு உதவும் வகையில் இன்னும் சிறந்த வசதிகளை உருவாக்கித் தர வேண்டும் என்றும் மருத்துவத் துறையினர் ஏராளமானோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்களுடைய பணிச் சூழல் பற்றியும், கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ள அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள மருத்துவ சாதனங்களின் வசதி பற்றியும் அறிந்து கொள்வதற்கு, இந்தியா முழுவதும் உள்ள பல மருத்துவர்களை பிபிசி தொடர்பு கொண்டது.

கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தல் வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் மருத்துவமனைகள், அந்த வைரஸ் பாதிப்பை அறிவதற்கான பரிசோதனை மையங்களாகவும் உள்ளன. அங்கு டாக்டர்கள் கடந்த சில வாரங்களாக 24 மணி நேரமும் பணியில் இருப்பதாக தெரிவித்தனர்.

மும்பையில் சியான் மருத்துவமனையில் வசிப்பிட மருத்துவராக இருக்கும் மருத்துவர் யாஷ் சபர்வால், தொற்றும் தன்மையுள்ள நோய்களுக்கான கஸ்தூர்பா காந்தி மருத்துவமனையில் கொரோனா வார்டுகளில் அன்றைய பணிகளை முடித்துவிட்டு வந்திருந்தார். ``நாங்கள் 8 மணி நேர ஷிப்டில் வேலை பார்க்கிறோம். அடுத்த எட்டு மணி நேரம் தனிமையில் இருக்கிறோம்'' என்று அவர் கூறினார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

``நாங்கள் ஷிப்டுகளில் வேலை பார்க்கிறோம். அங்கே இரண்டு வார்டுகள் உள்ளன. நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு ஒரு வார்டு. பரிசோதனை நிலையில் இருப்பவர்களுக்கு இன்னொரு வார்டு உள்ளது. பரிசோதனையில் நோய்த் தொற்று உறுதியானால், அந்த நோயாளி, சிகிச்சை வார்டுக்கு தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக மாற்றப்படுகிறார்'' என்று அவர் கூறினார்.

தெலங்கானாவில் கோவிட்-19 பாதித்த நோயாளிகள் ஹைதராபாத்தில் காந்தி மருத்துவ சிகிச்சை மருத்துவமனை மற்றும் காய்ச்சல் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளனர். ``தொடர்ந்து நோயாளிகள் வந்து கொண்டிருக்கிறார்கள். தனிமைப்படுத்தல் வார்டுகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது நாங்கள் தனிப்பட்ட பாதுகாப்பு உடைகளை அணிந்து கொள்கிறோம்'' என்று இளம் மருத்துவர் காந்தி தெரிவித்தார்.

காந்தி மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் தங்களுக்கு சோர்வாக இருப்பதாகத் தெரிவித்தனர். ``என்னுடன் வேலை பார்க்கும் பலரும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்'' என்று அவர்களில் ஒருவர் கூறினார். வீட்டுக்குச் சென்றால், குடும்பத்தினருக்கு இது பரவும் ஆபத்து உள்ளது என்பதால், அதற்குப் பயந்து பலரும் தங்கள் வீடுகளுக்குச் செல்லாமலே இருக்கிறார்கள். கூடுதல் நேரம் பணியாற்றிய, கூடுதல் பணிச்சுமைக்கு ஆளான ஒருவர், ``இந்த நோய்த் தொற்று முடிவுக்கு வரும்போது, நாங்கள் இருப்போமா என்று தெரியவில்லை. பொது சுகாதாரத்தை நாங்கள் எப்படி பார்க்கிறோம் என்பதில் எங்களில் பலரிடம் மாற்றங்கள் ஏற்படும்'' என்று கூறினார்.

டெல்லியில் ஆர்.எம்.எல். மருத்துவமனையில் கொரோனா வார்டுகளில் பணியாற்றும் சில டாக்டர்கள், சாதன வசதிகள் குறைவாக உள்ளதாகவும், மருத்துவர்களுக்கு குறைவான ஓய்வுதான் கிடைக்கிறது என்றும் கூறினர். கடந்த 20-25 நாட்களாக ஓய்வின்றி தாங்கள் பணியாற்றி வருவதாக அவர்கள் தெரிவித்தனர். மன அழுத்தம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகக் குறிப்பிட்டனர்.

கொரோனா வைரஸ்

பரிசோதனை நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், அங்கு வசதிகளை மேம்படுத்துவதற்கும் அரசு பணிகளை மேற்கொண்டுள்ளது. நோயாளிகளுக்கு இலவசமாகப் பரிசோதனை செய்யுமாறு தனியார் மருத்துவமனைகளை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

மருத்துவர்கள் தேவையில்லாமல் ``அழுகுரலை வெளிப்படுத்துகிறார்கள்'' என்று சில பார்வையாளர்கள் கருதுகின்றனர். மருத்துவர்கள் நிறைய புகார்கள் கூறுவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக டெல்லியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மருத்துவர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். ``அவர்கள் கடந்த மூன்று மாதங்களில் 19,000 பேருக்கு தான் பரிசோதனை செய்திருக்கிறார்கள்."

"130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் 500க்கும் குறைவான கொரோனா நோயாளிகளைத் தான் அவர்கள் கவனிக்க வேண்டியிருக்கிறது. ஆயிரக்கணக்கான நோயாளிகளைக் கையாள வேண்டிய நிலை வந்தால் என்னவாகும்?'' என்று அவர் கேள்வி எழுப்பினார். மருத்துவர்கள் பொறுமையாக இருந்து, அதிக புகார்கள் சொல்லாமல் பணியில் ஈடுபட வேண்டும் என்று அவர் யோசனை கூறினார்.

ஆனால், பெரும்பாலானவர்கள், புகார்கள் கூறும் மருத்துவர்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர். மார்ச் 19ஆம் தேதி வரையில் மருத்துவ சாதனங்களை தொடர்ந்து ஏற்றுமதி செய்து வந்ததில் இந்திய அரசின் புத்திசாலித்தனம் இருக்கிறதா என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

இது அரசால் பதில் அளிக்க முடியாத ஒரு சங்கடத்தை ஏற்படுத்தும் கேள்வியாகக் கருதப்படுகிறது. சீனா மக்கள் மீதான நல்லெண்ண அடிப்படையில், சீனாவில் வுஹானுக்கு மருத்துவ சாதனங்களை இந்தியா அனுப்பி வைத்தது.

அரசு வெளிப்படையாக இதை ஒப்புக்கொள்ள மறுக்கலாம். ஆனால், வரக் கூடிய நாட்கள் மற்றும் வாரங்களில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் எண்ணிக்கை தீவிரமாக உயரும் என்று பிரதமருக்கே கூட அச்சம் இருப்பதாக எனக்குத் தெரிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

எனவே, மக்கள் ஊரடங்கைத் தொடர்ந்து மத்திய அரசு அமைச்சகங்களும், மாநில அரசுகளும் தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதில் ஆச்சர்யம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை.

இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 560க்கும் மேற்பட்ட நகரங்கள் முடக்கநிலையில் இருக்கின்றன. மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள், பயணிகள் ரயில்கள், உள்நாட்டு விமான சேவைகள் இந்த மாத இறுதி வரையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நோய்த் தொற்றை சமாளிப்பதில் தங்கள் முயற்சிகளை அதிகரிக்க வேண்டும் என்று தன்னுடைய அமைச்சர்களையும், மாநில அரசுகளையும் மோதி உருக்கத்துடன் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸ்

ஒருவழியாக அரசு நிர்வாகம் செயல்படத் தொடங்கிவிட்டது என்பதுதான் இந்த செயல்பாடுகள் மூலம் தெரிய வரும் தகவலாக உள்ளது. இந்த நடவடிக்கைகள் ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு முன்னரே தொடங்கப்பட்டிருக்க வேண்டும் என்பது தான் முக்கிய விமர்சனமாக உள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலை சமாளிப்பதற்கான உறுதியான திட்டங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, மத்தியப் பிரதேசத்தில் மாநில அரசைக் கவிழ்ப்பதில் தான் மோதி அரசு மும்முரமாக இருந்தது என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.

வியாழக்கிழமை மோதி அறிவித்தபடி, அமைக்கப்பட்ட பொருளாதார பணிக் குழு, தேவையில் இருப்பவர்களுக்கு உதவி செய்யவும், ஏற்கெனவே தள்ளாட்டத்தில் இருக்கும் பொருளாதாரம் மேலும் சரிந்துவிடாமல் காக்கவும் விரைவில் நிறைய நிதி செயல்பாடுகளை அறிவிக்கவுள்ளது.

ஆனால், மிக மோசமான பற்றாக்குறையில் இருக்கும் சுகாதார சேவை துறையை பலப்படுத்த அரசு தீவிரமாக என்ன நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது என்பதை அறிவதற்கு தான் சுகாதார நிபுணர்களும், டாக்டர்களும் காத்திருக்கிறார்கள். வெகு சீக்கிரத்தில் நோய்த் தொற்று எண்ணிக்கை அதிகரிக்குமா என்பது பற்றி ஆளுக்கு ஆள் கதைகள் சொல்லிக் கொண்டிருப்பதாக அவர்கள் நம்புகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பு ஏராளமானவர்களுக்கு ஏற்பட்டால், நிலைமையைக் கையாள்வதற்கான மருத்துவ வசதிகள் இப்போது தங்களிடம் இல்லை என்று அவர்கள் எச்சரிக்கிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: