கொரோனா வைரஸ்: 2ம் நிலையை நோக்கி நகரும் தமிழகம், கடை திறக்க கட்டுப்பாடு

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், EPA

தமிழகத்தில் கொரோனவின் தாக்கம் முதல் நிலையில் இருந்து இரண்டாம் நிலைக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

144 தடை உத்தரவை மேலும் தீவிரமாக நடைமுறைப்படுத்த தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோயம்பேடு உள்ளிட்ட சந்தைகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள், காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் முதல் நிலையில் (Stage-1) தான் உள்ளது.இது இரண்டாம் நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அதை கட்டுப்படுத்தி, முழுவதும் தடுப்பதற்காகவே பல்வேறு நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,'' என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ்

இரண்டம் நிலையை நோக்கி தமிழகம் நகர்வதால் பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவுக்கு கட்டுப்பாடு நடக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

''வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒரேவழி அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது மட்டுமே. 144தடை உத்தரவு மக்களையும், அவர்களது குடும்பத்தையும், இந்த நாட்டையும் பாதுகாப்பதற்காகத்தான்.இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்,'' என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ்

மேலும் தமிழகத்தில் தற்போது 10 அரசு மருத்துவமனைகள், 4 தனியார் மருத்துவமனைகள் என 14 இடங்கள் கண்டறியப்பட்டு கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று கூறியுள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் மன அழுத்தங்களை போக்கவே கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டால் அவர்களது மன அழுத்தங்களை மருத்துவர்கள் தீர்த்து வைப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: