கொரோனா வைரஸ்: தமிழகத்தில் சோதனைகள் மறுக்கப்படுகிறதா? - டாக்டர் குழந்தைசாமி பேட்டி

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

கொரோனா பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத் துறை மேற்கொண்டுவரும் முயற்சிகள் போதுமானதா என்பது குறித்து சமூக வலைதளங்களில் பல விதமான கருத்துகள் தெரிவிக்கப்பட்டுவருகின்றன.

சோதனை செய்துகொள்ள விரும்புபவர்களுக்கு, சோதனை நடத்தப்படுவதில்லை, போதுமான சோதனை உபகரணங்கள் இல்லை, தமிழ்நாடு அரசு சட்டத்தின் மூலம் தகவல்களை மறைக்க முயன்று வருகிறது என பலரும் கூறிவரும் நிலையில் இது தொடர்பான சந்தேகங்களுக்கு பிபிசி தமிழிடம் விரிவாக விளக்கமளித்தார் தமிழக பொது சுகாதாரத் துறையின் இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி. அதிலிருந்து:

கே. தமிழ்நாட்டில் ஒருவருக்கு கொரோனா இருக்கிறதா என்ற சோதனை எந்த அடிப்படையில் நடத்தப்படுகிறது. இதற்கான கொள்கை என்ன?

ப. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மத்திய அரசு, உலக சுகாதார நிறுவன விதிமுறைகளின்படி கொரோனா சோதனைத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

வெளிநாட்டிற்கு பயணம் செய்தவர்களில் இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல் இருந்தால் அவர்களை மருத்துவமனையில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கிறோம்.

அவர்களுக்கு கட்டாயம் கொரோனா இருக்கிறதா என்ற பரிசோதனை செய்கிறோம். இரண்டாவதாக, வெளிநாட்டுக்குச் சென்றுவந்தவர்களோடு தொடர்பு இருந்து இது போன்ற அறிகுறிகள் இருந்தாலோ, கொரோனா நோய் தாக்கியவர்களோடு தொடர்பு இருந்து இது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டாலும் அவர்களுக்கும் இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. இதுதவிர, மூச்சுத் திணறல், பிற காய்ச்சலுக்காக வருபவர்களிடம் சிலரைத் தேர்வுசெய்து அவர்களுக்கு கொரோனா உள்ளதா என பரிசோதிக்கப்படுகிறது. பிப்ரவரியில் இதுபோல 22 பேருக்கு சோதனை நடத்தப்பட்டது.

Banner image reading 'more about coronavirus'
Banner image reading 'more about coronavirus'

அதேபோல, கெரோனா பரிசோதனை யாருக்கெல்லாம் செய்யப்படுகிறதோ அவர்களுக்கு பிற வைரஸ் காய்ச்சலுக்கான சோதனைகளும் செய்யப்படுகின்றன. கொரோனா இல்லையென்றால் ஏன் இப்படி ஏற்பட்டது என்பதை அறிவதற்காக இதனைச் செய்திருக்கிறோம்.

கே. தமிழ்நாட்டில் எத்தனை இடங்களில் இதற்கான சோதனை வசதிகள் இருக்கின்றன?

ப. தமிழ்நாட்டில் நான்கு இடங்களில் இதற்கான வசதிகள் இருக்கின்றன. சென்னையில் கிங் இன்ஸ்ட்டிடியூட், திருவாரூரில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தேனி மருத்தவக் கல்லூரி மருத்துவமனை, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய நான்கு இடங்களில் கொரோனா தொற்றை சோதிப்பதற்கான வசதிகள் இருக்கின்றன.

இந்த வைரஸ் முதலில் சீனாவில் கண்டறியப்பட்டது. கொரோனா என்பது மிருகங்களில் உள்ள வைரஸ். இது மிருகங்களிடமிருந்து மனிதர்களுக்குத் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டவுடன், மனிதர்களிடம் இந்த நோயைக் கண்டறிவதற்கான பிரைமர், ஆண்டிஜன் ஆகியவை சீனாவிலேயே உருவாக்கப்பட்டுவிட்டன. இவற்றை வைத்துத்தான் கொரோனா வைரசை மேப் செய்ய முடியும். இதுதான் மிக முக்கியமான பணி.

இந்தப் பணிகள் எல்லாம் ஜனவரியிலேயே முடிந்துவிட்டன. பிறகு உலக சுகாதார நிறுவனம் மூலமாக எல்லா நாடுகளுக்கும் அனுப்பப்பட்டன. இந்தியாவில் புனேவில் உள்ள நேஷனல் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் வைராலஜிதான் பிரதானமான சோதனைக்கூடம். இந்த நிறுவனத்திற்கு பிரைமர், மேப்பிங் சீக்வென்ஸ் ஆகியவை அனுப்பப்பட்டன.

துவக்கத்தில் இந்த சோதனை புனேவில் மட்டும் நடத்தப்பட்டது. பிறகு இந்தியா முழுவதும் பத்து சோதனைக் கூடங்களுக்கு இதற்கான அனுமதி அளிக்கப்பட்டது. பிறகு தமிழ்நாட்டிற்கு மேலும் 3 ஆய்வகங்களுக்கு அனுமதி பெறப்பட்டது. தேவைக்கேற்ப இந்த ஆய்வகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.

கொரோனா வைரஸ் சோதனைகள்

பட மூலாதாரம், EPA

இந்த சோதனைக்கான பிரைமரை தேவைப்பட்டால் இங்கேயே உருவாக்க முடியும்.

கே. ஒருவர் தனக்கு நோய்க்கான அறிகுறி இருக்கிறதென நினைத்தால் என்ன செய்ய வேண்டும்?

ப. இதற்கான கட்டுப்பாட்டு அறையின் எண்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அல்லது 104க்கு அழைக்க வேண்டும். அப்படி அழைத்தால் கொரோனா குறித்த விளக்கம் அளிக்கப்படும். நோய்க் குறிகளை அவர்கள் தெரிவித்தால், அவர்களுக்கு கொரோனா தாக்குதல் இருப்பதாக நாங்கள் கருதும் பட்சத்தில் அவர்கள் ஆம்புலன்சில் அழைத்துவரப்படுவார்கள். அவர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்படும்.

சிலர், கொரோனா நோயாளிகளுக்கு அருகில் இருந்திருப்பார்கள். அவர்கள் தங்களுக்கு அறிகுறி இருப்பதாக நினைத்தால், அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளச் சொல்வோம். பிறகு, எங்களுடைய மைக்ரோ பயாலஜி அணி அவர்களுடைய வீட்டிற்கே சென்று மாதிரியை சேகரிப்பார்கள். உதாரணமாக, சென்னைக்கு வந்த சீனக் கப்பலில் இருவருக்கு காய்ச்சல் இருந்தபோது எங்கள் அணியைச் சேர்ந்தவர்கள் சென்று, மாதிரியை சேகரித்தனர்.

கே. வெளிநாடுக்குச் சென்று தமிழ்நாடு திரும்பும் சிலர் தாங்களாக சோதனைக்கு முன்வந்தாலும் அவர்களுக்கு சோதனைகளைச் செய்ய மறுப்பதாக சொல்லப்படுகிறதே..

ப. இது தவறு. வெளிநாடு சென்று திரும்பியவர்களுக்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் இல்லையென்றால், சோதனை செய்தாலும் நோய் இல்லையென்றுதான் காட்டும். ஆனால், 14 நாட்களுக்குள் அவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் நோய் பரவலாம்.

பொதுவாக வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களுக்கு லேசான காய்ச்சல் இருந்தாலே, வீட்டிலேயே 14 நாட்கள் இருக்கும்படி அறிவுறுத்துகிறோம். இவர்கள் இம்மாதிரி ஒரு சோதனையைச் செய்துவிட்டு, நோய் இல்லை என்ற சோதனை முடிவைப் பெற்றுவிட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவதைத் தவிர்க்க நினைக்கின்றனர். இது மிகத் தவறு. யாருக்கு தேவையோ, அவர்களுக்குக் கட்டாயம் இந்த சோதனைகள் செய்யப்படுகின்றன.

வெளிநாடு செல்லாதவர்களுக்கு வந்திருக்கிறதா என்பதை அறிய, முன்பே கூறியபடி காய்ச்சல் உள்ள சிலர் தேர்வுசெய்யப்பட்டு சோதனைக்குள்ளாக்கப்படுகிறார்கள்.

சாதாரண சளி, காய்ச்சல் ஆகியவை ஏற்பட 200 வகையான வைரஸ்கள் காரணமாக இருக்கின்றன. ஒருவர் வெளிநாடு செல்லவில்லை, வெளிநாடு சென்று திரும்பிவர் வீட்டிற்கும் செல்லவில்லை, நோயால் தாக்கப்பட்டவர் இருந்த பகுதிக்கும் செல்லவில்லை என்றால் அவர்களுக்கு பொதுவாக சோதனை தேவையில்லை. இந்தியாவில் ஒருவருக்கு ஒரு ஆண்டுக்கு குறைந்தது இரண்டு முறை சளி, இருமலால் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. அதை கொரோனாவோடு இணைத்துப் பார்த்து, மருத்துவமனைக்கு வந்து சோதனை செய்யச் சொல்வது சரியானதாக இருக்காது.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

ஒருவரைச் சோதனைக்குள்ளாக்க epidemic link இருக்கிறதா என்று பார்ப்போம். அதாவது, சீனாவின் வூஹானிலிருந்தோ, இந்த நோய் தாக்கிய உலகின் பிற பகுதிகளில் இருந்தோ வந்திருக்க வேண்டும். அல்லது நோயாளியோடு நேரடித் தொடர்பில் இருந்திருக்க வேண்டும். இம்மாதிரி ஆட்களுக்கு காய்ச்சல், இருமல் இருந்தால் அவர்களுக்கு சோதனை நடத்தப்படலாம். இல்லாவிட்டால் தேவையில்லை.

கே. ஒருவர் தனக்கு இந்த வைரஸ் தாக்குதல் இருக்கிறதா என்று சோதனை செய்து உறுதிப்படுத்திக்கொள்ள விரும்பலாம் அல்லவா, அதில் அரசுக்கு என்ன பிரச்சனை? சோதனைக்கான உபகரணங்கள், மருந்துகளுக்கு பற்றாக்குறை இருப்பதால் அரசு அதற்கு மறுக்கிறதா?

ப. இந்த சோதனை உபகரணத்தை புனேவில் உள்ள நேஷனல் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் வைராலஜிதான் செய்து வழங்குகிறது. இதற்கான பிரைமர்கள், கிட் ஆகியவற்றை தமிழ்நாட்டிலேயே வேண்டுமானால் தயாரிக்கலாம். அதற்கான தரக்கட்டுப்பாட்டை மட்டும் நேஷனல் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் வைராலஜி கண்காணிக்கும். ஆனால், தேவையில்லாமல் இந்த சோதனைகளைச் செய்ய வேண்டியதில்லை.

கே. ஒருவர் நேரடியாக கிங் இன்ஸ்ட்டிடியூட்டிற்கோ, கொரோனா சோதனை வசதி உள்ள மருத்துவமனைக்கோ சென்று, பணம் கொடுத்து சோதனை செய்துகொள்ள முடியுமா?

ப. அது சாத்தியமில்லை. தேவையுமில்லை. அதற்கு அனுமதிக்க மாட்டார்கள். மருத்துவர்தான் இதனை முடிவுசெய்வார். ஒருவரின் பயணத் திட்டம், தொடர்புகள், தொற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் ஆகிய பல விஷயங்களை ஆராய்ந்து இதனை முடிவுசெய்வோம்.

கே. தற்செயலாகச் சிலரைப் பரிசோதிப்போம் என்று கூறுகிறீர்கள். அது எப்படி நடக்கிறது?

ப. எச்1என்1, மெர்ஸ்கோவி, சார்ஸ்கோவி என பல வைரஸ்களால் இருமல், ஜலதோஷம் ஏற்படுகிறது. இதுபோன்ற நோய்களுக்கு பரிசோதனை நடக்கும்போது, சிலரைத் தேர்வுசெய்து கொரோனா இருக்கிறதா எனச் சோதிப்போம். மேலே சொன்ன நோய்களுக்கான சோதனைக்கு வரும் நபர்களுக்கு, சின்ன அளவிலாவது கொரோனா வரும் வாய்ப்பிருந்தால், அவர்கள் கொரோனா ஆய்வுக்கு உட்படுத்தப்படுவார்கள். இதுதான் "Community Check" என அழைக்கப்படுகிறது. உண்மையில், கொரோனா சோதனையை ஊக்குவிக்கிறோம். ஆனால், அதற்கான தேவைகள் தெளிவாக இருக்க வேண்டும்.

கே. சோதனை செய்வதற்கான உபகரணம், விலை அதிகமா? அதனால்தான் அதிகம் பேருக்கு இந்த சோதனையை செய்வதில்லையா?

ப. அப்படியல்ல. இம்மாதிரி சோதனைகளை PCR எந்திரம் உள்ள இடங்களில் செய்யலாம். இதற்கான சோதனை கிட் கடுமையான தரக்கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்படுகிறது. இதனை நேஷனல் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் வைராலஜி செய்து அனுப்புகிறது. நிறைய பேருக்கு இந்த சோதனைகளை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால், அந்த கிட்டை நாமே தயாரிக்க முடியும்.

கே. இந்த சோதனை எப்படி நடத்தப்படுகிறது?

ப. வாயிலிருந்து தோலின் சிறு பகுதியையோ, ரத்தத்தையோ எடுத்து சோதிப்போம். இதனை பாலிமர் செயின் ரியாக்ஷனுக்கு உட்படுத்தி, வைரல் ஆன்டிஜென் இருக்கிறதா என்று பார்ப்போம். இதில் பணம் முக்கியமான அம்சமல்ல. கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு மட்டுமே 60 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. ஆகவே, பற்றாக்குறை என்ற கேள்வியே இல்லை. தேவையில்லாத சோதனைகள் குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும். இந்தியாவில் இதுவரை உள்ளிருந்து யாருக்கும் இந்நோய் வரவில்லை. நோய் ஏற்பட்டவர்கள் எல்லாம் வெளிநாட்டுப் பயணத்தின் மூலம் நோயால் தாக்கப்பட்டவர்கள். இது தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்.

கே. முகமூடி கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. முகமூடி எந்த அளவுக்கு இந்த நோயைத்தடுக்கும்?

ப. முகமூடியைத் தேவையில்லாமல் அணிய வேண்டியதில்லை. கை கழுவுவதுதான் மிக முக்கியம். முகமூடியைப் பொறுத்தவரை, மருத்துவர்கள், செவிலியர்கள் மட்டும் அணிந்தால் போதும். வெளியில் இருப்பவர்களைப் பொறுத்தவரை சிறுநீரக நோயாளிகள், புற்றுநோய் சிகிச்சை எடுப்பவர்கள், கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு, இரத்த அழுத்தத்திற்காக சிகிச்சை எடுப்பவர்கள் அணிந்தால் போதும்.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

அப்படியே இந்த முகமூடியை அணிந்துகொண்டாலும் கை கழுவுவதுதான் மிக முக்கியம். 80-90 சதவீத நோய்த் தொற்று கைகள் மூலம்தான் வருகிறது. ஆகவே, வெளியில் சென்று வீட்டிற்குள் வந்தவுடன், அலுவலகத்திற்கு வந்தவுடன் கைகளை முழுமையாகக் கழுவ வேண்டும்.

கே. சமீபத்தில் சமூகவலைதளம் ஒன்றில் வெளியான செய்தி இது. சில விஐபிகளுக்கு கொரோனா வந்திருப்பதாகவும் அரசு அலட்சியத்துடன் இருப்பதால், வீட்டில் வைத்து அவர்களை குணப்படுத்தி வருவதாகவும் ஒரு மருத்துவர் கூறியதாக அந்தச் செய்தி சொல்கிறது. உண்மையில் என்ன நடந்தது?

ப. இது முழுக்கவும் தவறான தகவல். இம்மாதிரி தொற்றும் வியாதிகளைப் பொறுத்தவரை மக்கள் தகவல்களை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதுதான் சட்டம், விதி. ஒருவர் தனக்குக் கொரோனா வந்துவிட்டது என்பதைப் புரிந்துகொண்டு வீட்டிலேயே இருந்தால், அரசுக்குத் தகவல் அளிக்காமல் அந்த நோயாளிக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் மீது இந்தச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.

அதேபோல, யாராவது கொரோனாவுக்கு தான் மருந்து தருவதாக யாராவது சொன்னாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனோ நோய் தாக்காத ஒருவர் தனக்கு கொரோனா தாக்குதல் இருப்பதாக கூறினாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆகவே, தகவலை மறைத்தால்தான் பொது சுகாதார சட்டப்படியும் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படியும் நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் தெரிவித்தால், அதனை வரவேற்போம்.

இந்த நோய் பரவலைத் தடுக்க எல்லா நடவடிக்கையையும் மேற்கொண்டிருக்கிறோம். ஒருவருக்கு நோய் தாக்கியது என்று தெரிந்தால் அந்தப் பகுதி முழுவதும் சுற்றிவளைக்கப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது. இது தவிர, இன்ஃபுளூயன்ஸா கண்காணிப்பையும் துவங்கியிருக்கிறோம். இன்ஃபுளூயன்ஸா போன்ற நோய்த் தாக்கம் உள்ளவர்களில் சிலரைத் தேர்வுசெய்து சோதனை செய்கிறோம். கொரோனா தாக்குதலுக்கு யார் ஆளாகியிருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து, அவர்களைக் குணப்படுத்துவதுதான் அரசின் நோக்கம். அதற்காகத்தான் இத்தனையும் செய்கிறோம்.

கே. சமீபத்தில் இந்த நோய் தொடர்பாக பொது சுகாதாரத்துறை கொரோனாவை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை வெளியிட்டது. அதன் இறுதிப் பகுதியில் பொது சுகாதாரத் துறை இயக்குனர் அனுமதி இல்லாமல், யாரும் இந்த நோய் குறித்து பேசக்கூடாது என்று கூறப்பட்டிருந்தது. இது சரியா?

ப. இதனை சரியான வகையில் புரிந்துகொள்ள வேண்டும். அரசு இந்த நோய் தொடர்பாக பல தகவல்களை வெளியிடுகிறது. அதனை வைத்து சிலர் இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள். அல்லது ஒரு மருத்துவர் இதனை வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் என்றால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இருக்காது. அதற்கு யாரிடமும் அனுமதி வாங்கவேண்டியதில்லை.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

ஆனால், அங்கீகரிக்கப்படாத, பொது மக்களிடம் பீதியை ஏற்படுத்தக்கூடிய தவறான தகவல்களை பரப்புவது குற்றம். இப்போது ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வலம் வருகிறது. அதில் ஜனத்தொகையைக் குறைக்க இப்படிச் செய்கிறார்கள் என்று சொல்கிறார் ஒருவர். இது குறித்து சைபர் க்ரைம் காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறோம். காவல்துறை அந்த நபரைத் தேடிவருகிறது.

ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட, ஆதாரபூர்வமான தகவல்களை பரப்புவதில் எந்தத் தவறும் இல்லை. அதனை அரசு தடுக்கவில்லை. பீதியை ஏற்படுத்தும் தகவல்களைத் தடுப்பதற்கான விதி அது.

கொரோனா தொடர்பான தகவல்களை வெளிப்படையாகவே வைத்திருக்கிறது. இது கிருமிகளுக்கும் மனிதர்களுக்கும் எதிரான யுத்தம். இதனை அனைவரும் ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும்.

கொரோனா வைரஸ்

கே. இந்த நோய் நிறையப் பேருக்கு பரவும்பட்சத்தில், கூடுதலாக செயற்கை சுவாசக் கருவி - வென்டிலேட்டர்கள் - தேவைப்படும். அவை போதுமான அளவில் இருக்கின்றனவா?

ப. நிறையவே இருக்கின்றன. 100 பேரை கொரோனா தாக்கினால், அதில் 2 பேருக்குத்தான் வென்டிலேட்டர் தேவை. ஒரு வாரம் வென்டிலேட்டர், ஆக்ஸிஜன் கொடுத்தும், நோய் எதிர்ப்பு மருந்துகளைக் கொடுத்தும் சமாளித்தால், நோயாளி தானாகவே தேற ஆரம்பித்துவிடுவார். அதற்குத் தேவையான வென்டிலேட்டர்கள் இருக்கின்றன. உண்மையில், தமிழ்நாட்டில்தான் அவை அதிக எண்ணிக்கையில் உள்ளன.

கே. கொரோனா சோதனை நடத்தவும், சிகிச்சையளிக்கவும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி கொடுக்கும் திட்டம் உண்டா?

ப. மத்திய அரசு ஏற்கனவே இது தொடர்பாக அறிவித்திருக்கிறது. எச்1என்1 நோயைக் குணப்படுத்த சில தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தேவைக்கு ஏற்ப அரசு முடிவெடுக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :