கொரோனா: தமிழகத்தில் 2-வது தொற்று கண்டுபிடிப்பு, டெல்லியில் இருந்து சென்னை வந்தவர்

கொரோனா பரவலை கருத்தில்கொண்டு சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் வார்டில் பணியாற்றும் செவிலியர் ஒருவர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொரோனா பரவலை கருத்தில்கொண்டு சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் வார்டில் பணியாற்றும் செவிலியர் ஒருவர். (கோப்புப் படம்)

டெல்லியில் இருந்து ரயில் மூலம் சென்னை வந்த 20 வயது மதிக்கத்தக்க வடமாநிலத்தவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

சில நாள்களுக்கு முன்பு அவர் தமிழகம் வந்தபோது அவருக்கு அறிகுறி இல்லை என்றும் ஆனால், தற்போது அறிகுறி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறிய அமைச்சர், தற்போது அந்த நபரின் உடல் நிலை சீராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மாதிரி பரிசோதனைகளின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் இன்று 25 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

222 பேருக்கு சோதனை செய்யப்பட்டு...

ரயில் மூலம் சென்னை வந்த நபர் கடந்த சில நாட்களில் யாருடனெல்லாம் தொடர்பில் இருந்திருக்கிறார் என்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டுவருவதாகவும் அந்த நோயாளியின் விவரங்களை அறிய முயல வேண்டாம் என்றும் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Banner image reading 'more about coronavirus'
Banner

தமிழ்நாட்டில் இதுவரை 1,89,750 பயணிகள் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2984 பேர் மருத்துவக் குழுவினரால் கண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க 1,120 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதுவரை 222 பேருக்கு கொரோனா உள்ளதா என்ற சோதனை செய்யப்பட்டிருக்கிறது. அதில் 166 பேருக்கு இல்லை என்று தெரியவந்துள்ளது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தாக்குதல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டுவிட்டது.

மேலும் 55 பேரின் சோதனை முடிவுகள் வெளியாகவில்லை. தற்போது 32 பேர் மருத்துவமனையில் வைத்துக் கண்காணிக்கப்படுகின்றனர்.

தமிழ்நாடு அரசு மேலும் 500 பேருக்கு சிகிச்சையளிக்கும் வகையில் நான்கு இடங்களில் தனிமையில் சிகிச்சையளிக்கும் பிரிவுகளை சுகாதாரத்துறை உருவாக்கியுள்ளது. தற்போதைய சூழலில் இதுபோதுமானது என்றாலும், தேவைப்பட்டால் கூடுதல் படுக்கை வசதியை உருவாக்க முடியுமென்றும் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.

Banner image reading 'more about coronavirus'

அரசும், வல்லுநர்களும் சொல்லும் முன்னெச்சரிக்கை ஆலோசனைகளை கடைபிடிக்கவேண்டும் என்றும், தேவையற்றப் பயணங்களைத் தவிர்க்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கர்நாடகத்தில் 14 பேருக்குத் தொற்று

தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகத்தில் இன்று மார்ச் 18-ம் தேதி மட்டும் 3 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் இதுவரை 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மீதமுள்ள 13 பேர் மாநிலத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் சிகிச்சை பெறுகின்றனர் என்று மாநில அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: