Coronavirus: இந்தியாவில் 137 பேருக்கு தொற்று, மூவர் பலி- "நாம் 2-ம் கட்டத்தில் இருக்கிறோம்" ஐசிஎம்ஆர் கருத்து

பட மூலாதாரம், Getty Images
உலகை அச்சுறுத்திவரும் கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இன்று (மார்ச் 17) காலை மூன்றாக உயர்ந்த நிலையில், நோய் தொற்றியவர்கள் எண்ணிக்கை 126ல் இருந்து 137 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, டெல்லி சாவ்லாவில் உள்ள இந்தோ திபெத்தியன் எல்லை பாதுகாப்புப் படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களில் இருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அஃப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது என இந்திய சுகாதார துறையின் இணை செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
தனியார் பரிசோதனை மையங்கள் கோவிட் 19 தொற்று குறித்த பரிசோதனைகளை இலவசமாக மேற்கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியா மூன்றாவது கட்டத்துக்கு செல்லுமா?
இதனிடையே, கொரோனா தொற்று பரவுவதில் நான்கு கட்டங்கள் உள்ளன என்றும், இந்தியா தற்போது 2-வது கட்டத்தில் உள்ளது என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்.) தலைமை இயக்குநர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார் என்கிறது ஏ.என்.ஐ. செய்தி முகமை.
"மூன்றாம் கட்டம் வந்தால்தான் சமூகத்தில் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு நோய் பரவும் நிலை உருவாகும். அந்த நிலை வராது என்று நம்புகிறோம். அது எவ்வளவு உறுதியாக நாம் சர்வதேச எல்லைகளை மூடுகிறோம் என்பதைப் பொறுத்தே இருக்கிறது. எனவேதான், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனால், சமூகப் பரவல் நிலை வராது என்று உறுதியாக சொல்ல முடியாது" என்று பல்ராம் பார்கவா மேலும் தெரிவித்துள்ளார்.
ஐ.சி.எம்.ஆர். வசம் தற்போது கொரோனா சோதனைகளை மேற்கொள்ள 72 ஆய்வகங்கள் உள்ளன. தவிர சி.எஸ்.ஐ.ஆர்., டி.ஆர்.டி.ஓ. அரசு மருத்துவக் கல்லூரிகள், சுகாதார அமைச்சகம் ஆகியவற்றுக்கு சொந்தமான 49 ஆய்வகங்களும் கொரோனா சோதனைகளை இந்த வார இறுதிவாக்கில் மேற்கொள்ளத் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மோசமான நிலையில் மகாராஷ்டிரம்
நாட்டிலேயே மகாராஷ்டிரம் இந்த நோயால் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலமாக உருவெடுத்துள்ளது. அங்கு 41 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 64 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மும்பையில் உள்ள கஸ்தூர்பா மருத்துவமனையில் இந்த 64 வயது நபர் இறந்துவிட்டதாக ஏஎன்ஐ செய்தி முகமை இன்று காலை அறிவித்தது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
ஏற்கனவே கடந்த வாரத்தில் கர்நாடகா மற்றும் டெல்லியில் தலா ஒருவர் உயிரிழந்த நிலையில், இன்று மூன்றாவது நபர் இறந்தது உறுதியாகியுள்ளது.

பட மூலாதாரம், GoI
இது தவிர, கேரளாவில் 24 பேருக்கும், டெல்லியில் 8 பேருக்கும், உத்தரப்பிரதேசத்தில் 14 பேருக்கும் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் 6000 பேருக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். 137 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் அரசின் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க மாலை 6 மணிக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் சந்திக்கவுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
இதனிடையே கடந்த மார்ச் 14-ஆம் தேதியன்று, திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவ மையத்தில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி முரளிதரன் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார் என்று ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
ஸ்பெயினில் இருந்து திரும்பிய மருத்துவர் ஒருவர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது மார்ச் 15-ஆம் தேதியன்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கைகள் இந்தியாவில் தொடந்த வண்ணமுள்ளது.
இந்தியாவின் முக்கிய சின்னமாக திகழும் தாஜ்மஹால் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மூடப்பட்டுள்ளது.



பட மூலாதாரம், Getty Images
இந்த காதல் சின்னத்தை தினமும் ஆயிரக்கணக்கானோர் பார்வையிடுகிறார்கள். அதனை மூடுவது மிக முக்கியம் என கலாசார துறை அமைச்சர் பிரகலாத் பட்டேல் தெரிவித்துள்ளார்.
சராசரியாக தினமும் 70000 பேர் தாஜ்மஹாலை பார்வையிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தொல்லியல் துறைக்கு கீழுள்ள அனைத்து நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவை மார்ச் 31 வரை மூடப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சர் பிரஹலாத் படேல் ஏஎன்ஐ செய்தி முகைமையிடம் கூறியுள்ளார்,
கொரோனா தடுப்பு: திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு
இதனிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, மார்ச்29ம் தேதி நடைபெற இருந்த திமுகவின் புதிய பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளரை தேர்ந்தெடுக்கும் பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கடந்த மார்ச் 7ம் தேதி காலமானார். இவரது மறைவை அடுத்து பொருளாளராக இருந்த துரைமுருகன், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். அதனால், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கு புதிய நபரை தேர்ந்தெடுக்க மார்ச் 29ம் தேதி பொதுக்குழு கூட்டத்தை திமுக கூட்ட முடிவு செய்திருந்தது.
தற்போது, கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு மக்கள் அதிகம் கூடும் கூட்டங்களுக்கு தடை விதித்துள்ளது. இதனை அடுத்து, திமுக ஏற்பாடு செய்திருந்த பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதேபோல, தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நடைபெறவிருந்த அனைத்து கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












