காமராஜர், எம்.ஜி.ஆர், கருணாநிதி அவமானங்களை சுமந்து நிறைவேற்றிய திட்டம் காப்பாற்றப்படுமா? - ஜெயரஞ்சன் நேர்காணல்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
சென்னையில் சில மாநகராட்சி பள்ளிக்கூடங்களில் அக்ஷய பாத்ரா நிறுவனம் காலை உணவை வழங்கிவருவது சர்ச்சையாகியிருக்கும் நிலையில், தமிழகத்தின் சத்துணவுத் திட்டம், உணவுப் பாதுகாப்புத் திட்டங்கள் எப்படி படிப்படியாக வளர்த்தெடுக்கப்பட்டன என்பது குறித்து பிபிசியிடம் விரிவாகப் பேசினார், பேராசிரியர் டாக்டர் ஜெ. ஜெயரஞ்சன். பேட்டியிலிருந்து.
கே. உணவுப் பாதுகாப்பைப் பொறுத்தவரை தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக விளங்கிவருகிறது. இது எப்படி நடந்தது?
ப. தமிழ்நாடு தனக்குத் தேவையான உணவை தானே முழுமையாக விளைவிப்பது என்பது தற்போது சில சமயங்களில் நடக்கிறது என்றாலும், முன்பு நிலைமை அப்படி இல்லை. அதற்குக் காரணம், தமிழ்நாட்டு ஒரு மழைமறைவுப் பிரதேசம் என்பதால் போதுமான நீராதாரம் கிடையாது. இருக்கும் நீரை வைத்து எல்லோருக்கும் தேவையான உணவை உற்பத்தி செய்துவிட முடியாது என்ற சூழல்தான் இருந்தது.
இதில் இரண்டு பிரச்சனைகள் இருந்தன. ஒன்று, நிலம், நீர் ஆகியவை போதுமான அளவு இருந்து, அதிலிருந்து விளைச்சல் கிடைக்குமா என்பது. மற்றொன்று, உணவு தானியங்கள் போதுமான அளவு உற்பத்தி செய்யப்பட்டாலும் அவை முறையாக எல்லோருக்கும் விநியோகம் செய்யப்படுகிறதா என்பது மற்றொரு பிரச்சனை. இது நிலவுடமை சார்ந்த பிரச்சனையாக இருந்தது. இப்போதும் கிராமப்புறங்களில் பெரும்பாலானவர்களுக்கு நிலம் கிடையாது. இதனால், உணவு தானியங்களில் சிறிய பற்றாக்குறை வந்தாலே பெரிய பாதிப்பு ஏற்படும் சூழல் இருந்தது.
திராவிட இயக்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, கீழ்மட்ட அரசியல் என்ற ஒன்று நடந்தது. கீழ்மட்டத்தில் மக்களின் பிரச்சனை, உரிமை ஆகியவை மேலெழுந்துவந்தபோது, அந்தப் பிரச்சனைகளின் ஒரு பகுதியாக உணவு என்பது தான். தி.மு.க. துவங்கியதிலிருந்தே திரும்பத் திரும்ப உணவைப் பற்றியே பேசியது. 1967ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் உணவுக்கு மிக முக்கியமான ஒரு பங்கு இருந்தது. அதற்குக் காரணம், அந்த காலகட்டத்தில் மக்களிடம் விநியோகம் செய்யுமளவுக்கு அரிசியே இல்லை. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முயற்சித்தால், அங்கே கோதுமைதான் கிடைத்தது. அதனால், கோதுமையைச் சாப்பிடப் பழக வேண்டியிருந்தது. இந்தக் கட்டத்தில்தான், உணவு என்பது வெறும் உணவாக இல்லாமல் அரசியலாக மாறியது.

பட மூலாதாரம், DEA / A. TESSORE
இதற்கு முன்பாகவே, காமராஜர் போன்ற மக்களுக்கு நெருக்கமாக இருந்த காங்கிரஸ் தலைவர்கள் இந்தச் சிக்கலை உணர்ந்திருந்தார்கள். பள்ளிக்கூடங்களை நிறையத் திறந்தாலும் குழந்தைகள் நிறையப் பேர் வரவில்லை என்பதை அறிந்தார்கள். ஏன் குழந்தைகள் வரவில்லை என்று பார்த்தார். உணவு இல்லை. உணவை உற்பத்தி செய்து, எல்லோருக்கும் அந்த உணவைக் கிடைக்கச் செய்து, எல்லோரையும் பள்ளிக்கூடம் வரவைப்பது இப்போதைக்கு நடக்காது என்பதை உணர்ந்தார்.
உடனடி ஏற்பாடாக, பள்ளிக்கூடத்தில் குழந்தைகளுக்கு உணவு கொடுக்கலாம் என்று நினைத்தார். அங்கேதான் இது துவங்கியது. அதற்கு முன்பாக ஒரு முயற்சி நடந்தது. இரண்டாம் உலகப் போர் நடந்தபோது பெரும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போதுதான் 'ரேஷன்' என்பது துவங்கப்பட்டது. உணவை யாரும் பதுக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் தேவையான உணவு தானியங்கள் ஒதுக்கப்பட்டது. இந்த ரேஷன் முறை நகர்ப்புறங்களில் மட்டுமே செயல்பட்டது. குறிப்பாக சென்னை, கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் மட்டும்தான் இது செயல்பட்டது.
இதற்குப் பிறகு, 1967ல் தேர்தலை எதிர்கொண்ட தி.மு.க. உணவை ஒரு முக்கிய பிரச்சனையாக முன்வைத்தது. ஆனால், வாக்குறுதி அளித்தபடி முதலமைச்சர் அண்ணாவால் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. காரணம், கொள்முதல் செய்வதற்குக்கூட நெல் கிடைக்கவில்லை. இரண்டாவதாக, நிதியும் இல்லை. இதனால், சென்னையில் மட்டும் துவக்கப்பட்ட இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படவில்லை.
உணவு தானியங்கள் இல்லாததால், மத்திய அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து கூடுதல் உணவு தானியங்களைக் கேட்டது. ஆனால், இந்தக் கோரிக்கை பல முறை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்துதான், தமிழக அரசு இந்த விஷயத்தில் சுயசார்புடன் செயல்படவும் அதற்கான அமைப்புகளை உருவாக்கவும் முடிவெடுத்தது. அப்படி உருவாக்கப்பட்டதுதான் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம். பசுமைப் புரட்சியின் ஒரு பகுதியாகத் துவக்கப்பட்ட இந்திய உணவுக் கழகத்தை முன்மாதிரியாக வைத்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் துவக்கப்பட்டது. இந்திய உணவுக் கழகத்தைப் போலவே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகமும் செயல்பட ஆரம்பித்து. அவர்கள் எப்படி தானியங்களை கொள்முதல் செய்து சேகரித்தார்களோ, அதேபோல, இவர்களும் செய்தார்கள். சேமிப்புக் கிடங்குகள், ஆலைகள் உருவாக்கப்பட்டன.
ஆனால், இந்திய உணவுக் கழகம் செய்யாத ஒரு வேலையையும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் செய்தது. அதாவது கொள்முதல் செய்த உணவு தானியங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தது. அதற்காக பொது விநியோகக் கடைகள் துவங்கப்பட்டன. அதுவரை சில நகரங்களில் மட்டும் வழங்கப்பட்டுவந்த ரேஷன் அட்டைகள் தமிழ்நாடு முழுக்க வழங்கப்பட்டன. 1974-75ல் இது நடந்தது.

பட மூலாதாரம், Claude Renault
இதற்குப் பிறகு, தமிழ்நாட்டில் அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. தி.மு.க. ஆரம்பித்ததை, அ.தி.மு.க. இன்னும் வலுவாக செயல்படுத்த ஆரம்பித்தது. எம்.ஜி.ஆரின் ஆட்சி முடிவுக்கு வரும்போது கிட்டத்தட்ட 20,000 கடைகள் தமிழ்நாட்டில் வந்துவிட்டன. இதில் கவனிக்க வேண்டிய ஒருவிஷயம், தனியார் வசம் இருந்த பொதுவிநியோகம் முழுக்க முழுக்க அரசு மயமாக்கப்பட்டது. புதிதாக யாருக்கும் லைசென்சும் வழங்கப்படவில்லை. பெரும்பாலான கடைகள் கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்பட்டன. கூட்டுறவு சங்கங்கள் இல்லாத இடங்களில் நுகர்பொருள் வாணிபக் கழகமே நடத்தியது.
அந்தத் தருணத்தில், தமிழக அரசிடம் போதுமான நிதி இல்லாத காரணத்தால், அரிசியைக் கொள்முதல் செய்து, மக்களிடம் சேர்க்க என்ன செலவாகிறது, அந்த விலையிலேயே விற்கப்பட்டது. அதனால்தான், அதற்கு நியாய விலைக் கடை எனப் பெயர் வந்தது. அந்தத் தருணத்தில் உணவு தானியங்களுக்கு மானியம் ஏதும் வழங்கப்படவில்லை. இருந்தபோதும், அதை வாங்கக்கூட மக்களிடம் சக்தி இல்லை.
உணவுப் பாதுகாப்பைப் பொருத்தவரை மூன்று விஷயங்கள் இருக்கின்றன. முதலில் உணவு கிடைக்க வேண்டும். இரண்டாவது, வாங்கக்கூடிய விலையில் இருக்க வேண்டும். மூன்றாவது, உடலில் சேரும்விதத்தில் இருக்க வேண்டும். இதில், முதலாவது விஷயத்தை தமிழக அரசு செய்துவிட்டது. ஆனால், அதை வாங்கும் சக்தி மக்களுக்கு இல்லை. ஒரு கார்டுக்கு குறிப்பிட்ட அளவுக்கு வாங்கிக்கொள்ளலாம் என்று சொன்னால்கூட, அதை வாங்கும் வலிமை மக்களுக்கு இல்லை.
காலை உணவு கொடுப்பதில் அரசுக்கு என்ன பிரச்சனை? - Jeyaranjan Interview
இதையடுத்து, அந்த அரிசிக்கு அரசு மானியம் வழங்க ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக இந்த மானியத்தின் அளவு அதிகரித்தபடியே இருந்தது. ஒரு கட்டத்தில், அரிசி 2 ரூபாய்க்கு வழங்கப்பட்டது. அதற்குப் பிறகு, ஒரு ரூபாய் ஆக்கப்பட்டது. முடிவில், குறிப்பிட்ட அளவு அரிசி இலவசமாக வழங்கப்பட்டது.
விலையைக் குறைப்பதற்கு முன்பாக ரேஷன் அரிசியை கிராமப்புறங்களிலேயே 70 சதவீதம் பேர்தான் வாங்கினர். ஆனால், விலையைக் குறைக்க ஆரம்பித்ததும் 70 சதவீதத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து, அரிசி இலவசமாக வழங்கப்படும்போது அதைப் பெறுபவர்களின் சதவீதம் 92ஆக உயர்ந்தது. நகர்ப்புறங்களில் வசதிபடைத்தவர்கள் அதிகம் என்பதால், இந்த சதவீதம் இங்கு சற்றுக் குறைவாக இருக்கும்.
இந்த அளவுக்கு உணவு தானியங்களை மக்களிடம் கொண்டுசேர்க்கும் மாநிலம் வேறு எதுவும் கிடையாது. அதேபோல, அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டம் என்பதும் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் தொடர்ந்து நடந்துவருகிறது.

பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR
கே. வாங்கும் வசதி படைத்தவர்களுக்கும் மானிய விலையில் உணவு தானியங்களை வழங்குவது தேவையா?
ப. முந்தைய கேள்விக்கு பதில் சொல்லும்போது இலவச அரிசியை கிராமப்புறங்களில் 92 சதவீதமும் நகர்ப்புறங்களில் 70 சதவீதம் பேரும் வாங்குவதாகச் சொன்னேன். ஏன் இந்த 30 சதவீதம் பேர் இலவச அரிசியை வாங்குவதில்லை? நகர்ப்புறத்தில் உள்ள அந்த 30 சதவீதம் பேர், அந்த அரிசி வேண்டாம் என நினைக்கிறார்கள். பொது விநியோகம் செய்வதில் இரண்டு முறைகள் இருக்கின்றன. ஒன்று, அரசே யாருக்கு வழங்க வேண்டும் எனத் தீர்மானித்து உணவுப் பொருட்களை வழங்குவது. இரண்டாவது, யாருக்கு வேண்டுமோ, அவர்களே வந்து வாங்கிக்கொள்ளலாம் என்று சொல்வது. இந்த இரண்டாவது முறையைத்தான் மாநில அரசு பின்பற்றுகிறது.
தேவையற்றவர்களும் பொது விநியோகத் திட்டத்தின் பயனைப் பெறுகிறார்கள் என்பதுதான் குற்றம்சாட்டுபவர்கள் சுட்டிக்காட்டுவது. இதை leakage என்பார்கள். இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களோடும் ஒப்பிட்டால், இந்த leakage மிகக் குறைவாக இருப்பது தமிழ்நாட்டில்தான். அதாவது, வெறும் நான்கு சதவீதம்தான். இங்கே leakage அதிகம் என்று சொல்வதற்கு எந்த சான்றும் கிடையாது.
உணவு தானியம் யாருக்கு வேண்டும், யாருக்கு வேண்டாம் எனத் துல்லியமாகக் கண்டறிந்து அதனை வழங்கும் திறன் அரசுக்குக் கிடையாது. இதன் காரணமாக, எங்கெல்லாம் இலக்கு சார்ந்த பொது விநியோகத் திட்டம் இருக்கிறதோ, அங்கெல்லாம் உணவு தானியம் போய்ச் சேர வேண்டியவர்களுக்கு சேராமல் இருப்பது அதிகமாக இருக்கும்.
பொது விநியோகத்தில் இரண்டு விதமான தவறுகள் நடக்கும். ஒன்று, யாருக்குப் போய் சேர வேண்டியதில்லையோ, அவர்களுக்கு உணவு தானியம் கிடைப்பது. இரண்டாவதாக, யாருக்குப் போய்ச் சேர வேண்டுமோ, அவர்களுக்கு உணவு தானியம் சென்று சேராமல் இருப்பது. இதில் எது பெரிய தீங்கை விளைவிக்குமென நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும்.
யாரும் இரவில் பசியோடு உறங்கச் செல்லக்கூடாது என்று நினைக்கும் அரசு, நூற்றுக்கு இரண்டு பேர் தேவையில்லாமல் உணவு தானியங்களைப் பெறுவதைப் பற்றிக் கவலைப்படாது. இந்த இரண்டு பேரைக் கண்டுபிடிக்கிறேன் என்று புறப்பட்டால், யாருக்குத் தேவையிருக்கிறதோ, அதில் பத்து பேர் விடுபட்டுப் போய்விடுவார்கள். எங்கெல்லாம் இலக்கு சார்ந்த பொது விநியோகம் இருக்கிறதோ, அங்கெல்லாம் தகுதியானவர்கள் விடுபடுவது மிக அதிகமாக இருக்கும். இலக்கு சார்ந்த பொது விநியோகத்தில் உள்ள சிக்கல்களுக்கு இதுவரை தீர்வு இல்லை.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, கிராமப்புறங்களில் 75 சதவீத மக்களுக்கும் நகர்ப்புறங்களில் 55 சதவீத மக்களுக்கு உணவு தானியங்களை வழங்க வேண்டும். ஆனால், இந்த 75 சதவீதம், 55 சதவீதம் பேருக்கு வழங்க வேண்டும் என்பதை எந்த அடிப்படையில் வந்தடைந்தார்கள்?

பட மூலாதாரம், Godong
கே. மாநிலத்தின் பொது விநியோகம் என்பது, இப்போது பெரிதும் மத்திய அரசைச் சார்ந்ததாக மாறிவருகிறது. இம்மாதிரி சூழலில் எதிர்காலத்தில் மத்திய அரசு தன் மானியத்தைக் குறைக்கும்போது, மாநிலங்களின் உணவுப் பாதுகாப்பு பாதிக்கப்படுமா?
ப. அதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, கிராமப்புறங்களில் 75 சதவீத மக்களுக்கும் நகர்ப்புறங்களில் 55 சதவீத மக்களுக்கும் உணவு தானியம் வழங்குவதற்காக அரிசியை கிலோ மூன்று ரூபாய்க்கும், கோதுமையை இரண்டு ரூபாய்க்கும் வழங்குகிறார்கள். தமிழ்நாடு அரசு அந்த தானியங்களைப் பெற்றுக்கொண்டு, தேவைப்படுவோர் எல்லோருக்கும் 20 கிலோ விநியோகம் செய்கிறது. இதில் அரிசியை மாநில அரசு இலவசமாகத் தருகிறது. ஆனால், அதற்கான தொகையை மத்திய அரசுக்குத் தந்துவிடுகிறது.
இதற்கான மானிய ஒதுக்கீடு முன்பு இரண்டாயிரம் கோடியாக இருந்தது. இப்போது ஆறாயிரம் கோடியை எட்டியிருக்கிறது. இதோடு மத்திய அரசின் மானியமும் இருக்கிறது. மத்திய அரசானது எல்லா மாநிலங்களுக்கும் சேர்த்து வருடத்திற்கு ஒன்றரை லட்சம் கோடியை செலவுசெய்கிறது. மத்திய அரசின் மானிய உதவி இல்லாமல், இந்த அளவுக்கு பொது விநியோகத்தைச் செயல்படுத்துவது மிகக் கடினம். ஏனென்றால், ஒரு கிலோ அரிசியின் அடக்கவிலை 24 ரூபாயைத் தொடும். இப்போது மத்திய அரசு அதை மூன்று ரூபாய்க்குத் தருகிறது. அது இல்லாவிட்டால், இப்போது செலவழிப்பதைப் போல ஏழு மடங்கு அரிசிக்கு மட்டும் செலவழிக்க வேண்டியிருக்கும். ஆனால், இது வெறும் மாநில அரசின் பொறுப்பு மட்டுமல்ல; மத்திய அரசுக்கும் பொறுப்பு இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
கே. தமிழகத்தின் சத்துணவுத் திட்டம், குழந்தைகளின் நலனை மாநிலத்தில் மேம்படுத்திய திட்டங்களில் ஒன்று. இது எப்படி உருவானது?
ப. 1919ல் இந்தியச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் இரட்டை ஆட்சி முறை அமல்படுத்தப்பட்டது. இந்தியர்கள் பிற்காலத்தில் விடுதலை பெறும்பட்சத்தில், ஆட்சி நடத்த அனுபவம் பெறும் நோக்கில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது. முக்கியமான துறைகள் ஆங்கிலேயர் வசமும் சில துறைகள், மாகாணங்களுக்கும் தரப்பட்டன. அப்போது நடந்த தேர்தலை காங்கிரஸ் புறக்கணித்துவிட, நீதிக் கட்சி ஆட்சியைப் பிடித்தது. சென்னை மாநகராட்சியிலும் நீதிக் கட்சி ஆட்சியைப் பிடித்தது.
இந்த காலகட்டத்தில் சேரிப் பகுதிகளில் ஆரம்பப் பள்ளிகள் துவங்கப்பட்டன. ஆனாலும் குழந்தைகள் வரவில்லை. உணவு இல்லாததுதான் காரணம் என்பது புரிந்தது. சிறப்பு அனுமதி பெற்று அந்தப் பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்பட்டது. ஆனால், அடுத்த வருடங்களில் அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. இதனால் இந்தத் திட்டம் நின்று போனது.

பட மூலாதாரம், Stuart Freedman
இதற்குப் பிறகு, காமராஜர் ஆட்சியிலும் இந்தத் திட்டம் துவங்கப்பட்டது. அவர் தில்லியிடம் இதற்கான நிதியுதவியைக் கோரினார். அவர்கள் உதவிசெய்ய மறுத்துவிட்டனர். நன்கொடைகளை வைத்து இந்தத் திட்டத்தை நடத்த ஆரம்பித்தார். ஆனால், நீண்ட காலம் இதைச் செய்ய முடியவில்லை. இதற்குப் பிறகு இந்தத் திட்டம் யுஎஸ் எய்டின் கேர் அமைப்பு இந்தத் திட்டத்தை நடத்த ஆரம்பித்தது. அவர்கள் அமெரிக்காவிலிருந்து சோள மாவு, பால் பவுடர் போன்றவற்றை இறக்குமதி செய்து தந்தனர்.
எம்.ஜி.ஆர். 1977ல் முதல்வராகப் பொறுப்பேற்றார். 1982ல் மதிய உணவை வழங்கப்போவதாக அறிவித்தார். இதில் அவருக்கு பல புறக்கணிப்புகள். ஆனால், அவருக்கு இருந்த மக்கள் செல்வாக்கினால் இதைத் தாண்டிச் சென்றார். அப்போது இருந்த அதிகார வர்க்கமும் இதற்கு உதவியது. இந்தச் சத்துணவு என்பது அரசினுடைய செயல்பாட்டின் ஒரு அங்கமாக மாறியது.
கே. சத்துணவுத் திட்டத்தை செயல்படுத்துவதில் எம்.ஜி.ஆருக்கு என்ன பிரச்சனைகள் வந்தன? அவர் அதை எப்படித் தாண்டிச் சென்றார்?
ப. அப்போது இருந்த நிதிச் சூழலுக்கு, எல்லாவற்றுக்கும் மத்திய திட்டக் கமிஷனின் ஒப்புதலைப் பெற வேண்டும். ஆனால், அப்போது இருந்த திட்டக் கமிஷன் எம்.ஜி.ஆரின் திட்டத்தை ஏற்கவில்லை. பள்ளிக் குழந்தைகளுக்கு கல்விதான் முக்கியம்; உணவுக்கு பணம் தர முடியாது என்று சொல்லிவிடுகிறார்கள். எம்.ஜி.ஆர். கோபித்துக்கொண்டு திரும்பிவிடுகிறார். அடுத்ததாக, இந்தத் திட்டத்திற்கான அரிசி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கடிதங்கள் அனுப்பப்பட்டன. அவையும் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து அவர், உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தார். இதற்குப் பிறகு, பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்துப் பேச நேரம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து மதிய உணவுக்கென சிறப்புத் திட்டத்தின் கீழ் அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதுபோல ஒவ்வொரு கட்டமாக தாண்டித்தான் இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. அதற்குப் பிறகு, இந்தத் திட்டம் மாநில அரசின் முன்னுரிமைத் திட்டமாக மாறிவிட்டது. தொடர்ந்து வந்த அரசுகள் இதற்கான நிதியுதவியை அதிகரித்தே வந்துள்ளன.
இதற்குப் பிறகு தி.மு.க. ஆட்சியில் முட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதிருந்து மதிய உணவுத் திட்டம் என்பது, சத்துணவுத் திட்டமாக மாறியது.
கே. இந்த மதிய உணவுத் திட்டம் எம்மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தியது?
ப. அரிசியை நியாய விலையில் கொடுத்தால்கூட வாங்குவதற்குப் பணம் இல்லை என்பதை ஏற்கனவே பார்த்தோம். அரிசிக்கு மானியம் கொடுப்பதற்கு முன்பாகவே, மதிய உணவு வழங்கும் திட்டம் துவங்கிவிட்டது. பெரியவர்கள் உணவில்லாமல் இருந்தால்கூட பரவாயில்லை; குழந்தைகளுக்கு உணவு கிடைக்க வேண்டுமென்ற நோக்கில் இது செய்யப்பட்டது. பிறகு சில ஆண்டு இடைவெளியில் அரிசிக்கும் மானியம் வழங்கப்பட ஆரம்பித்தது.
இதன் முக்கியமான விளைவாக, ஏழ்மை குறைய ஆரம்பித்தது. அடுத்ததாக, பள்ளிக்கூடங்களில் சேர்க்கை அதிகரித்தது. கிட்டத்தட்ட 100 சதவீதத்தைத் தொட்டது. இடைநிற்றல் குறைந்தது. இந்த இடைநிற்றல், ஆரம்பப் பள்ளி மட்டத்தில் முன்பு 30-40 சதவீதம் வரை இருந்தது. இது இப்போது மிகச் சொற்பமாக மாறிவிட்டது.
கே. இந்தத் திட்டம் குடும்பங்களில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியது?
ப. இந்தத் திட்டமானது குழந்தைகளுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்ற கவலையிலிருந்து பெற்றோரை விடுவித்தது. இதனால், பெற்றோர் இருவருமே வேலைக்குச் செல்ல முடிந்தது. இதனால், அவர்கள் வருவாய் அதிகரித்தது. குடும்பத்தின் பொருளாதாரத்தையே இது மேம்படுத்தியது.
கே. சமீபத்தில் ஒரு தனியார் அமைப்பு பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு தர முன்வந்திருக்கிறது. இதுபோல பல தனியார் அமைப்புகளை இந்தத் திட்டத்தில் ஈடுபடுத்துவதன் மூலம் அரசு இதிலிருந்து விலகிக் கொள்ள முடியுமா?
ப. இந்தத் திட்டத்தை அரசு எப்படிப் பார்க்கிறது என்பதிலிருந்துதான் இதற்கான விடை கிடைக்கும். திராவிடக் கட்சிகளின் அரசுகள், ஒடுக்கப்பட்டோர், ஏழைகள் ஆகியோரின் வாழ்வை மேம்படுத்த கோர்வையாக பல திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறார்கள். இட ஒதுக்கீட்டில் துவங்கி, உணவு தருவதுவரை பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இப்படி உணவு அளிப்பதை தனியாரிடம் கொடுத்தால், அதை பெரிய விஷயமாக அரசு கருதவில்லை என்பதைத்தான் குறிக்கும்.
கே. எவ்வளவு நாளைக்குத்தான் அரசு உணவுக்கான மானியத்தை தொடர்ந்துகொண்டிருக்க முடியும்?
ப. எவ்வளவு நாள் தேவையிருக்கிறதோ, அவ்வளவு நாள் தொடர வேண்டும். இப்போது நகர்ப்புறங்களில் 70 சதவீதம் பேர் இந்த மானியத்தைப் பெறுகிறார்கள் என்றால், அந்த சதவீதம் 20ஆகக் குறையும்போது திட்டம் தானாகவே செயலிழந்துவிடும். அதுவரை நாம் செயல்படுத்தியாக வேண்டும். தற்போது நாம் ஒரு நிரந்தரமற்ற தன்மையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம். பணிச் சூழல் நிரந்தரமாகிவிட்டது. அம்மாதிரியான ஒரு சூழலில், நமக்கு இருக்கும் ஒரே பாதுகாப்பு, உணவைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்பதுதான்.
ஆட்டோமொபைல் துறை வீழ்ந்தபோது, பேட்டியளித்தவர்கள் அனைவரும் குழந்தைகளின் கல்வி குறித்து கவலையுடன் பேசினார்கள். ஆனால், யாரும் உணவு குறித்து கவலைப்படவில்லை. அதைக் கவனிக்க வேண்டும். இந்தத் திட்டங்களின் முக்கியமான வெற்றி இது. இம்மாதிரி திட்டங்களுக்குச் செலவழிக்க முடியாது என்று சொன்னால், 30-40 வருடங்களுக்கு முன்பாக என்ன பார்த்தோமோ, அதைத் திரும்பப் பார்க்க வேண்டியிருக்கும்.

பட மூலாதாரம், The India Today Group
கே. சமூக நலத் திட்டம் என்று வரும்போது, பயனாளிகளுக்கு நேரடியாக பணத்தைத் தந்துவிடலாம் என பலர் வாதிடுகிறார்கள். இது சரியாக இருக்குமா?
ப. விலைவாசியோடு அதனைப் பொருத்தி, மானியம் கொடுத்தால் ஏற்கலாம். அரசு ஊழியர்களுக்கான பஞ்சப் படி அப்படித்தான் தரப்படுகிறது. விலைவாசி 10 சதவீதம் உயர்ந்தால், பஞ்சப் படியும் உயரும். அதன் மூலம் விலைவாசி உயர்விலிருந்து அரசு ஊழியர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். அதேபோல விலைவாசியுடன் ஒப்பிட்டு, மானியத்தை பணமாகத் தந்தால் ஏற்கலாம். ஆனால், அப்படி ஒரு உறுதியை யாரும் தருவதில்லை.
கே. இம்மாதிரியான உணவுப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு வேறு நோக்கங்கள், உதாரணமாக சமூக நீதி போன்ற நோக்கங்கள் இருந்தனவா?
ப. உணவு வழங்குவது என்பது மிகப் பெரிய அரசியல் விடுதலை. உணவை அரசே வழங்கினால், அது எவ்வளவு பெரிய சுதந்திரத்தை அளிக்கும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் உணவு வழியாகத்தான் அதிகாரக் கட்டமைப்பே இயங்கியது. அது தகர்ந்துபோனதற்குக் காரணமே, உணவு எல்லோருக்கும் வழங்கப்பட்டதுதான். ஆகவே, உணவுப் பாதுகாப்பு வெறும் வறுமையை மட்டும் ஒழிப்பதல்ல; அது உணவு வழியாக செயல்பட்ட அதிகாரத்தை நொறுக்கியது.
முன்பு பெரும்பாலானவர்கள் நிலமற்றவர்களாக இருந்தார்கள். மற்றவர்கள் அவர்களைச் சார்ந்து இருக்க வேண்டியிருந்தது. அவர்களிடம்தான் வேலை செய்ய வேண்டும். வேலை இல்லாத நேரத்தில், உணவுக்கு நிலவுடமையாளர்களிடம்தான் நிற்க வேண்டும். அதன் மூலம்தான் அடிமைத்தனத்தை அவர்கள் செயல்படுத்தினார்கள். அப்படித்தான் ஆண்டான் - அடிமை உறவு கட்டமைக்கப்பட்டது. உணவை அரசு நேரடியாக வழங்கிவிட்டால், யாரும் சாப்பாட்டிற்காக போய் நிற்க மாட்டார்கள். பழைய அதிகார கட்டமைப்பு தகர்ந்துபோனது. அந்த மாற்றம் உணவுப் பாதுகாப்புத் திட்டங்களால்தான் நடந்தது.


கே. இந்தியாவின் பிற பகுதிகள் உணவுப் பாதுகாப்புத் திட்டங்கள் எப்படி செயல்படுகின்றன?
ப. பல பகுதிகளில் இன்னும் துவங்கப்படவேயில்லை. இங்குதான் எல்லோருக்குமான பொது விநியோகத் திட்டம் இருக்கிறது. பெரும்பாலான மாநிலங்களில் அது இலக்கு சார்ந்த பொது விநியோகத் திட்டமாகத்தான் செயல்படுத்தப்படுகிறது. அவர்கள் இன்னும் அதனை பொருளாதாரம் சார்ந்த விஷயமாகத்தான் பார்க்கிறார்கள். சமூகம் சார்ந்து பார்க்கவில்லை. ஆந்திராவில் என்.டி. ராமாராவ் இதனைச் சற்று முயற்சித்தார். ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் அது செயல்படுத்தப்படவில்லை. சந்திரபாபு நாயுடு வந்த பிறகு, இதையெல்லாம் நிறுத்தினார். அதனால், அங்கு மீண்டும் பழைய சூழல் திரும்பிவருகிறது.
தமிழ்நாட்டிலும் அப்படி நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதற்கான முதல் படியாகத்தான் அக்ஷயபாத்ரா போன்ற அமைப்புகளிடம் உணவு வழங்கும் பொறுப்பை ஒப்படைப்பதை பார்க்கிறேன்.

கே. மாநில அரசால், காலை உணவு வழங்க முடியாதபோது அதை தனியார் செய்வதில் என்ன தவறு?
ப. அரசு ஏன் வழங்கவில்லையெனக் கேளுங்கள். எவ்வளவோ மாநில அரசு செலவழிக்கிறது. இந்த செலவையும் செய்ய முடியும். மாநில அரசால் செய்ய முடியும். மாநில அரசின் முக்கியமான பணி, மக்களைக் கரையேற்றுவது. தனி நபர்களைப் போல லாப - நஷ்டக் கணக்கை அரசு செய்ய முடியாது. அரசு தான் இவ்வளவு பணத்தை சேர்த்து வைத்திருப்பதாக பெருமையடைய முடியுமா? அது அரசா அல்லது வேறு ஏதாவதா? அரசு இருப்பது மக்களுக்காக. லாபம் ஈட்டுவதற்காக அல்ல. இவர்கள் அரசை லாபம் ஈட்டுவதற்கான ஒரு அமைப்பாகப் பார்க்கிறார்கள். மக்கள் நலனுக்காக என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்ய வேண்டும். இம்மாதிரியான மக்கள் நலத் திட்டங்களைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம், அரசியல் புரிதல் வேண்டும்.
அந்த அரசியல் புரிதல் இருந்ததால்தான், காமராஜர் இந்தத் திட்டத்தை பிச்சை எடுத்து நடத்தினார். எம்.ஜி.ஆர். மத்திய அரசின் அவமானங்களுக்கு நடுவில் நடத்தினார். அந்த உறுதி இருந்ததால்தான், கருணாநிதி பல அவமானங்கள், நெருக்கடிகளுக்கு மத்தியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை ஆரம்பித்தார். எம்.ஜி.ஆர். ஒரு சூப்பர் ஸ்டார். அவரை ஒரு செயலர், திருப்பி அனுப்பினார். காமராஜர் ஒரு கிங் மேக்கர். அவர் மத்திய அரசிடம் அரிசி கேட்டார். தமிழக அரசு அம்மாதிரியான ஒரு வரலாற்றுக்குச் சொந்தமானது. அதை நினைவில் வைத்திருக்க வேண்டும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













