'காற்றில் இருந்து தயாரிக்கப்படும்' புரோட்டீன் உணவு

காற்றில் இருந்து புரோட்டீன் தயாரிக்கும் உத்தியை ஃபின்லாந்து நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது பத்தே ஆண்டுகளில் சோயாவுக்கு (புரதச்சத்து நிறைந்த உணவு) போட்டியாக இருக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
நீரில் இருந்து மின்சாரம் மூலம் பிரிக்கப்படும் ஹைட்ரஜனுடன், மண் பாக்டீரியாவை சேர்ப்பதன் மூலம் இந்தப் புரோட்டீன் உருவாக்கப்படுகிறது.
இதற்கான மின்சாரம் சூரியசக்தி அல்லது காற்றாலை மூலம் கிடைக்கும் என்றால், பசுமைக்குடில் வாயு (Greenhouse gas) உற்பத்தி எதுவும் இல்லாமல் உருவாக்கப்படும் உணவாக இது இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்தக் கனவு நனவாகும் போது, விவசாயம் தொடர்பான பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உலகிற்கு உதவக் கூடியதாக இது இருக்கும்.
கடந்த ஆண்டு ஹெல்சின்கியின் புறநகர் பகுதியில் உள்ள சூரியசக்தி உணவு தயாரிப்பு முன்னோடி நிலையத்திற்கு நான் சென்றிருந்தபோது, அதை விரிவாக்கம் செய்ய ஆராய்ச்சியாளர்கள் நிதி திரட்டிக் கொண்டிருந்தனர்.
தங்களுக்கு 5.5 மில்லியன் யூரோக்கள் முதலீடாகக் கிடைத்துள்ளது என்று இப்போது அவர்கள் கூறுகின்றனர். மின்சாரத்துக்கான செலவின் அளவைப் பொருத்து, தசாப்தத்தின் இறுதிக்குள் இதன் உற்பத்தி விலை சோயா உற்பத்தி விலைக்கு இணையாக மாறிவிடும் என்று அவர்கள் கூறுகின்றனர். 2025 ஆம் ஆண்டுக்குள்ளேயே கூட இது சாத்தியமாகலாம் என்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
ருசி இருக்காதா?
சோலெயின் எனப்படும் - புரதம் நிறைந்த மாவு தயாரிப்பதற்கான சில தானியங்களை நான் சாப்பிட்டுப் பார்த்தேன். அதில் எந்த ருசியும் இல்லை. அப்படி உருவாக்குவதற்குத்தான் விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
எல்லா வகையான உணவுகளுடனும் சேர்க்கக் கூடிய ருசியற்ற கூடுதல் சேர்க்கை உணவுப் பொருளாக இது இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர்.
நிலக்கடலை, ஐஸ்கிரீம், பிஸ்கட்கள், பாஸ்டா, நூடுல்ஸ், சாஸ் அல்லது ரொட்டியுடன் சேர்ப்பது போன்று இது பயன்படுத்தப்படலாம். செயற்கை முறையில் மாமிசம் அல்லது மீன் இறைச்சி உருவாக்குவதற்கான அடிப்படைப் பொருளாக, திசுக்கள் வளர்வதற்கான தளமாக இதைப் பயன்படுத்தலாம் என்றும் கண்டுபிடிப்பாளர்கள் கூறுகின்றனர்.
மழைக் காடுகளில் வளர்க்கப்படும் சோயாவுக்கு பதிலாக இதனை கால்நடைகளுக்கு உணவாக கொடுக்கலாம்.
திட்டமிட்டபடி முயற்சிகள் வெற்றிகரமாகத் தொடர்ந்தால், உலகளாவிய தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு, பல ஆண்டுகள் முன்னதாகவே புரோட்டீன் உற்பத்தியை அதிகரித்துவிட முடியும். ஆனால், இது நடக்காமல் போகவும் வாய்ப்பு உண்டு.
செயற்கை முறையிலான உணவு தயாரிப்பை நோக்கிய பல ஆய்வுத் திட்டங்களில் இதுவும் ஒன்று.
இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பசி வெயினிக்கா, பிரிட்டனில் கிரன்பீல்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர். இப்போது லப்பீன்ரன்டா பல்கலைக்கழகத்தில் பகுதிநேர பேராசிரியராக உள்ளார்.
விண்வெளி பயணத்துக்கான சிந்தனைகள்
1960களில் விண்வெளி துறையின் தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட சிந்தனையின் அடிப்படையில்தான் இந்தத் தொழில்நுட்பம் அமைந்துள்ளது என்று அவர் என்னிடம் கூறினார்.
தன்னுடைய செய்முறை உற்பத்தி நிலையம் திட்டமிட்டதைவிட சில மாதங்கள் தாமதமாகவே முயற்சியில் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று அவர் ஒப்புக்கொண்டார். ஆனால் 2022ஆம் ஆண்டுக்குள் தயாராகிவிடும் என்று கூறுகிறார். முதலீட்டுக்கான முழு திட்டம் 2023ல் வெளியாகும். எல்லாமே திட்டமிட்டபடி நடந்தால், முதலாவது தொழிற்சாலை 2025ல் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
``இதுவரை மிக நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது. உலைகளை (புரோட்டீன் நொதிக்கச் செய்வதற்கு) சேர்ப்பதன் மூலம் முதலாவது தொழிற்சாலையை தொடங்கும் போது, காற்றாலை மற்றும் சூரியசக்தி மின்சாரம் போன்ற தூய்மையான எரிசக்திக்கான முயற்சிகளில் அற்புதமான முன்னேற்றம் கிடைத்துவிட்டால், 2025 ஆம் ஆண்டுக்குள் சோயாவின் விலையுடன் எங்களால் போட்டியிட முடியும் என்று நினைக்கிறேன்'' என்றார் அவர்.
சொலெயின் உருவாக்குவதற்கு, மின்பகுப்பு (எலக்ட்ராலசைஸ்) மூலம் தண்ணீர் ``பிளக்கப்பட்டு'' ஹைட்ரஜன் பெறப்படுகிறது.
ஹைட்ரஜனும், காற்றில் உள்ள கரியமில வாயுவும், சில தாதுக்களும் பாக்டீரியாவில் செலுத்தப்படுவதன் மூலம் புரோட்டீன் உருவாக்கப்படுகிறது.
மின்சாரத்துக்கான விலைதான் இதில் முக்கியமான விஷயமாக இருக்கப் போகிறது என்று அவர் கூறினார். புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் திட்டங்கள் நிறைய வரும்போது, இதன் உற்பத்திச் செலவு குறைய வாய்ப்புள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அசாதாரணமான இந்தத் தொழில்நுட்பத்துக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜார்ஜ் மோன்பியோட் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
எதிர்காலத்துக்கான நம்பிக்கையா?
பூமியின் எதிர்காலம் பற்றி மோன்பியோட்டுக்கு பொதுவாக ஒரு சந்தேகம் இருந்து வந்தது. ஆனால், சூரியசக்தி உணவு தனக்கு நம்பிக்கையை கொடுத்திருப்பதாக அவர் கூறுகிறார்.
``உணவு உற்பத்திதான் உலகிற்கு சவாலாக இருந்து வருகிறது. உயிரினங்கள் அழிவதற்கும், பல்லுயிர்ப் பெருக்க சுழற்சி அழிவதற்கும், வனங்கள் அழிவதற்கும் விவசாயமும், மீன்பிடி தொழிலும்தான் நீண்ட காலமாக மிகப் பெரிய காரணிகளாக உள்ளன'' என்று அவர் கூறுகிறார்.
``ஆனால் `பண்ணையில் உருவாகாத உணவு' என்ற உற்பத்தியால் மக்கள் மற்றும் பூமியைக் காப்பாற்றுவதற்கு ஆச்சர்யமான வாய்ப்புகள் உருவாகியுள்ளதைப் போல தெரிகிறது என்பதால், ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது'' என்கிறார் அவர்.
``இடைக்காலமாக தாவர அடிப்படையிலான உணவு முறைக்கு மாறிக் கொள்வதன் மூலம், உயிரினங்கள் மற்றும் பூமிப் பரப்பைக் காப்பாற்றுவதற்கான அவகாசத்தை நாம் உருவாக்கலாம்'' என்றும் அவர் கூறுகிறார்.
``நம்பிக்கை இல்லாத சூழ்நிலையில், பண்ணை இல்லாமல் உருவாக்கப்படும் உணவு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. உலகை அழிக்காமல், மக்களுக்கு விரைவில் நம்மால் உணவு அளிக்க முடியும்'' என்று அவர் குறிப்பிட்டார்.
விவசாயம் - உணவுத் துறை மூலமாக ஏற்படும் பருவநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கு, புதுமை சிந்தனையுடன் கூடிய தீர்வுகளை அடையாளம் காண்பதற்காக, முன்னணி விஞ்ஞான ஆராய்ச்சி மற்றும் கல்வி நிலையங்களின் கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப் பட்டுள்ளது.நில பயன்பாட்டைப் பொருத்த வரையில் சோயா உற்பத்தியைக் காட்டிலும் நுண்கிருமிகளால் புரோட்டீன் உருவாக்குவது பல மடங்கு சிக்கனமானதாக இருக்கும் என்றும், பத்து மடங்கு வரை குறைவான தண்ணீர்தான் தேவைப்படும் என்றும் கடந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும் கலாச்சார அம்சம் ஒரு பிரச்சினையாக இருக்கும். ஆட்டின் எலும்புத் துண்டை, ஆட்டின் எலும்புத் துண்டு போன்ற வடிவத்தில் பார்த்து சாப்பிடுவதைத் தான் பலரும் விரும்புவார்கள்.
புதுமையான உணவுகள் தயாரிப்பதில் முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது என்று கிரான்பீல்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் லியோன் டெர்ட்டி பிபிசியிடம் கூறினார்.
``செயற்கை முறை உணவு உற்பத்தி ஆராய்ச்சியின் வேகமும், முதலீடும் அதிகரித்து வருகின்றன'' என்று அவர் தெரிவிக்கிறார். ஆனால், ``உண்மையிலேயே சாப்பிடுவதற்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் உணவாக இது இருக்குமா'' என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












