"புதுச்சேரி அரசின் செயல்பாடுகளில் தலையிட ஆளுநருக்கு அதிகாரம் உண்டு" - சென்னை உயர் நீதிமன்றம்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அமைச்சரவையின் முடிவுகளில், அன்றாடப் பணிகளில் தலையிடத் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புதுச்சேரி அரசின் செயல்பாடுகளில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தலையிடுவதால் அரசு தன்னிச்சையாகச் செயல்படுவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதன் காரணமாக அரசின் நடவடிக்கைகளில் தலையிடும் சிறப்பு அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கு உள்ளது என்று மத்திய அரசு வழங்கிய உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும், முதல்வரின் நாடாளுமன்ற செயலருமான லட்சுமி நாராயணன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.

அவ்வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், புதுச்சேரி யூனியன் பிரதேச சட்ட விதிமுறைகளின்படி,புதுச்சேரி அமைச்சரவைக்குச் சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளது; அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளுக்கு ஏற்றபடிதான், அரசின் நிர்வாகியான துணைநிலை ஆளுநர் செயல்பட முடியும். அவருக்கென தனியாகச் சிறப்பு அதிகாரம் ஏதும் இல்லை; இருந்தபோதும் அவர் விரும்பினால் அமைச்சரவையிடம் ஆலோசிக்கலாம்; புதுச்சேரியைச் சேர்ந்த அதிகாரிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மற்றும் அமைச்சரவையின் அதிகாரத்திற்கு உட்பட்டே செயல்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அளிக்கப்பட்ட இந்தத் தீர்ப்பின் மூலம் ஆளுநரின் சிறப்பு அதிகாரம் ரத்துசெய்யப்பட்டது.

இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதிக்க மறுத்ததுடன், உத்தரவைப் பிறப்பித்த உயர்நீதிமன்றத்தை அணுகித் தீர்வு கண்டு கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.

இதையடுத்து, உயர் நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்பை எதிர்த்து துணைநிலை ஆளுநர் கிரண் பேடியும் மத்திய உள்துறை அமைச்சகமும் தனித்தனியாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இவ்வழக்கினை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏபி சாஹி மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இவ்வழக்கில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், புதுச்சேரி அரசின் அன்றாட செயல்பாடுகளில் தலையிட ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்றும், இது தொடர்பாக ஒரு நபர் அமர்வு வழங்கிய உத்தரவு செல்லாது என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.

கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் துணைநிலை ஆளுநரும், தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி அமைச்சரவையும் கருத்து வேறுபாடுகள் இன்றி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அமைச்சரவைக்கும் துணை நிலை ஆளுநருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படும் பட்சத்தில் மத்திய அரசு குறிப்பிட்ட கால அளவிற்குள் தீர்த்துவைக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளது.

முன்னர், புதுச்சேரியில் நியாய விலைக்கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வந்த இலவச அரிசிக்குப் பதிலாகப் பணமாகத் தர கிரண்பேடி உத்தரவிட்டார். அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல்வர் நாராயணசாமி தொடர்ந்த வழக்கில், ஆளுநர் நிர்வாகி என்பதால் அவரது உத்தரவே செல்லும் என துணைநிலை ஆளுநருக்குச் சாதகமாகச் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

மேலும் தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாகத் துணைநிலை ஆளுநர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து புதுச்சேரி சட்டமன்ற சார்பில் தொடரப்பட்ட வழக்கிலும் கிரண்பேடிக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியது.

இன்று அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஆளுநர் கிரண்பேடி, "சென்னை உயர் நீதிமன்றத்தின் மூலம் சட்டம் பேசியிருக்கிறது. நாம் அனைவரும் இந்தத் தீர்ப்பை முழுமையாக மதிக்க வேண்டும். நேர்மை மற்றும் திறமையின் அடிப்படையில் புதுச்சேரி மக்களின் நன்மைக்காக ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: