ஜோதிராதித்ய சிந்தியா குடும்ப வரலாறு என்ன? ஜனசங்கம் - காங்கிரஸ் - பாஜக என நீளும் பயணம்

    • எழுதியவர், சல்மான் ரவி
    • பதவி, பிபிசி செய்தியாளர்

2001ம் ஆண்டு ஜோதிராதித்யா சிந்தியாவின் தந்தையான மாதவராவ் சிந்தியா உத்தர பிரதேசத்தில் நடந்த ஒரு விமான விபத்தில் உயிரிழந்தார்.

மாதவராவ் மத்திய பிரதேசத்தின் குணா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். 1971ஆண்டிலிருந்து அவர் எந்த ஒரு தேர்தலிலும் தோற்றதில்லை என்றும் சொல்லப்படுகிறது. குணா தொகுதியிலிருந்து அவர் ஒன்பது முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜன சங்கத்தின் சார்பாகவும் போட்டியிட்டுள்ளார்.

இவரின் தாய் கிரண் ராஜ்ய லஷ்மி தேவி, மகராஜா கஸ்கி லம்ஜுங் ஜுத்தா ஷம்ஷெர் ஜங் பஹதூர் ரானாவின் கொள்ளுப் பேத்தி. ஜோதிராதித்யாவின் மனைவி பிரியதர்ஷினி ராஜே சிந்தியா மராத்தா சமஸ்தானமான கெய்க்வாட்டை சேர்ந்தவர்.

அரசியலுக்குள்...

2001ம் ஆண்டு மாதவராவ் இறந்தபிறகு ஜோதிராதித்யா காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தனது தந்தையின் இறப்பால் காலியான குணா தொகுதியில் போட்டியிட்டார். பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2002ம் ஆண்டு அவர் முதல் முதலில் தேர்தலில் வெற்றி பெற்றார். அதன்பின் 2004, 2009 மற்றும் 2014ஆகிய ஆண்டுகளிலும் வெற்றி பெற்றார்.

இருப்பினும் தனக்கு செயலாளராக இருந்த கேபிஎஸ் யாதவிடம் பொதுத் தேர்தலில் தோற்றது அவரின் நம்பிக்கையை குலைத்தது.

குடும்பம், தனிச் சொத்து, அரசு

சிந்தியா குவாலியர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தாத்தா ஜிவாஜிராவ் சிந்தியா சமஸ்தானத்தின் அரசின் கடைசி அரசர்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் மத்திய அமைச்சராக இருந்தவர் ஜோதிராதித்ய சிந்தியா. 2008ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி அவர் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சராக ஆனார்.

2009 முதல் 2012 வரை மத்திய தொழில் வர்த்தகத்துறை இணை அமைச்சராக இருந்தார். பிறகு மின்சாரத் துறை இணையமைச்சராக (தனிப் பொறுப்பு) பதவி வகித்தார். அமைச்சராக பல தைரியமான முடிவுகளை எடுப்பவராகவும், மக்கள் எளிதில் தொடர்பு கொள்ளக்கூடியவராகவும் இருந்ததாக இவர் பார்க்கப்பட்டார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் இளம் அமைச்சர்களில் இவரும் ஒருவர்.

சர்ச்சை

2012ஆம் ஆண்டு இந்திய ஒன்றிய அரசின் மின்சாரத் துறையின் இணை அமைச்சராக இருந்த போதுதான் இந்தியா முழுவதும் மின் பற்றாக்குறை ஏற்பட்டது. பவர் கிரிட்டுகளில் ஏற்பட்ட பிரச்சனைகளால் ஏற்பட்ட தட்டுப்பாடு அது. இதனை கடந்து பெரிய அளவில் வேறு எந்த சர்சையிலும் சிக்கவில்லை என்றாலும், மின்சாரப் பற்றாக்குறை பிரச்சனை இந்திய அளவில் விஸ்வரூபம் எடுத்தது. கூட்டணி கட்சிகளே பெரிய அளவில அவருக்கு அப்போது அழுத்தம் தந்தன.

தீவிர கிரிக்கெட் ரசிகர்

ஜோதிராதித்ய சிந்தியா தீவிரமான கிரிக்கெட் ரசிகர். மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியம் சூதாட்டப் புகாரில் சிக்கிய போது, அதனை கடுமையாக இவர் விமர்சித்தார். இதன் பிறகே இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் சஞ்சய் பதவி விலகினார்.

தேர்தலில் தோல்வி

மத்திய பிரதேச அரசியலில் முக்கியப் புள்ளியாக கடந்த இரண்டு தசாப்தங்களாக வலம் வந்தாலும், 2019 மக்களவைத் தேர்தலில் தோல்வியையே ஜோதிராதித்ய சிந்தியா தழுவினார். மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் செய்த போது இப்போது இருவேறு துருவங்களாகி போன கமல்நாத்தும், ஜோதிராதித்தாவும் உடன் இருந்தனர்.

கமல்நாத்தை தற்போதைய தலைவர் என குறிப்பிட்ட ராகுல்காந்தி, ஜோதிராதித்யாவை 'எதிர்காலம்' என குறிப்பிட்டார்.

தேர்தலில் தோல்வியுற்று இருந்தாலும், ஜோதிராதித்யா மத்திய பிரதேசத்தின் முதல்வராக விரும்பினார். அதற்காக கடுமையாக முயற்சியும் செய்தார் என தேர்தல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஒரு கட்டத்தில் காங்கிரஸ் கட்சியும் இதற்கு ஒப்புக் கொண்டதாக கூறும் தேர்தல் விமர்சகர்கள், ஐம்பது சதவீத சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவாவது தமக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டுமென காங்கிரஸ் தலைமை கோரியதாகவும், ஆனால் அவரால் 23 எம்.எல்.ஏக்களின் ஆதரவை மட்டுமே பெற முடிந்தது என்றும், அதற்கு பின்புதான் கமல்நாத் பதவியேற்றதாகவும் கூறுகிறார்கள்.

காந்தி குடும்பத்துடனான உறவு

காந்தி குடும்பத்தினருக்கும் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. ராகுல் காந்தியுடன் நெருங்கிய நட்பை பேணினார் சிந்தியா. பல முக்கிய தருணங்களில் ராகுல் காந்தியும், கமலநாத்தும் ஒன்றாகவே வலம் வந்தனர். இருந்தபோதிலும், கமலநாத்துக்கும் ஜோதிராதித்ய சிந்தியாவுக்குமான முரண் தினம் வளர்ந்தே வந்தது.

ஒரு கட்டத்தில் ஜோதிராதித்ய சிந்தியாவை மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவராக்க காங்கிரஸ் முடிவு செய்தது. ஆனால், சம்பல் பகுதியில் மட்டும்தான் சிந்தியாவுக்கு ஆதரவு இருக்கிறது என்று மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர்கள் வாதிட்டனர்.

ராஜ்ய சபா உறுப்பினராக சிந்தியா முயற்சி செய்தார். ஆனால், பிரியாங்கா காந்தி அல்லது திக் விஜய் சிங்குக்கே வாய்ப்பு என ஆரூடங்கள் நிலவியதால், சிந்தியாவின் இந்த முயற்சியும் பலனற்று போனதாகவே தெரிகிறது.

கட்சிக்குள்ளேயே கலகக் குரல்

மத்திய பிரதேச காங்கிரஸ் ஆட்சியை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கடுமையாக விமர்சித்தார். அண்மையில் பிப்ரவரி 18 ஆம் தேதி, "2018 தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை மாநில காங்கிரஸ் நிறைவேற்றாவிட்டால், வீதியில் இறங்கி போராடுவேன்" என்று செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.

ஆனால், அவரை சமாதானப்படுத்த காங்கிரஸின் மூத்த மாநில தலைவர்கள் பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

இப்படியான சூழலில்தான் மார்ச் 10ம் தேதி பிரதமர் மோதி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார் சிந்தியா.

ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு ராஜ்ய சபா சீட்டும், மத்திய அமைச்சர் பதவியும் தர பா.ஜ.க வாக்குறுதி அளித்திருப்பதாக தெரிகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: