யெஸ் வங்கி விவகாரம்: தவறு எங்கே நடந்தது? அதன் உண்மையான சொத்து மதிப்பு என்ன?

இந்தியாவின் தனியார் வங்கிகளில் ஒன்றான எஸ் வங்கி, பெரும் நிதிச் சிக்கலை எதிர்கொண்டிருப்பதால், ரிசர்வ் வங்கி பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இதனால், அந்த வங்கியில் பணத்தை டெபாசிட் செய்தவர்கள், பங்குகளில் முதலீடு செய்தவர்கள், கடன் பத்திரங்களை வாங்கியவர்கள் பதற்றத்தில் இருக்கிறார்கள்.

யெஸ் வங்கியில் தவறு எங்கே நடந்தது என்பது குறித்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார் சென்னை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் தலைவர் ஜோதி சிவஞானம். அதிலிருந்து:

யெஸ் வங்கியின் பிரச்சனை என்பது கடந்த நான்கைந்து ஆண்டுகளாக தொடர்ந்து இருந்துவந்த ஒரு பிரச்சனை. கடந்த ஓரிரண்டு ஆண்டுகளாக இந்தப் பிரச்சனை தீவிரமடைந்தது. யெஸ் வங்கி செயல்பாட்டில் சிக்கல் இருக்கிறது என்பது, எப்படி இந்திய ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு வந்தது என்பதை முதலில் பார்க்கலாம்.

பொதுவாக எல்லா வங்கிகளும் தங்களுடைய பேலன்ஸ் ஷீட்களை ரிசர்வ் வங்கிக்கு அனுப்புவார்கள். யெஸ் வங்கி அனுப்பிய பேலன்ஸ் ஷீட்டில் 'டைவர்ஜன்ஸ்' இருப்பதை ரிசர்வ் வங்கி கொண்டுபிடித்தது. அதாவது யெஸ் வங்கி கொடுத்த கணக்கில் தவறுகள் இருந்தன. அல்லது பொய்யான தகவல்கள் இருந்தன என்பதுதான் இதற்கு அர்த்தம்.

இதற்கு அடுத்ததாக நிர்வாகத்தில் பிரச்சனை இருப்பதையும் ரிசர்வ் வங்கி கண்டறிந்தது. இதற்குப் பிறகு வங்கியின் முதலீட்டாளர்கள் கவலை தெரிவிக்க ஆரம்பித்தார்கள். இருந்தபோதும், உடனடியாக கடும் நடவடிக்கைகள் எதையும் ரிசர்வ் வங்கி எடுக்கவில்லை. ஒரு வருடத்திற்கு முன்பாகத்தான், அந்த வங்கியின் சி.இ.ஓவாக இருந்த ராணா கபூரை ரிசர்வ் வங்கி மாற்றியது. ஆனால், அதற்கான காரணத்தை வெளிப்படையாகச் சொல்லவில்லை.

இந்திய ரிசர்வ் வங்கிக்கு மூன்று பொறுப்புகள் இருக்கின்றன. ஒன்று, விலைவாசியை கட்டுக்குள் வைத்துக்கொள்வது. இரண்டாவதாக, ரூபாயின் மதிப்பு அதிக ஏற்ற - இறக்கம் இல்லாமல் பார்த்துக்கொள்வது. மூன்றாவதாக, வங்கிகளை கண்காணிப்பது. ஏற்கனவே முதல் இரண்டு விவகாரங்களில் தோல்வியடைந்த ரிசர்வ் வங்கி, வங்கிகளைக் கண்காணிக்கும் விஷயத்திலும் தோல்வியடைந்திருப்பதைத்தான் யெஸ் வங்கியில் தற்போது நடக்கும் சம்பவங்கள் காட்டுகின்றன.

யெஸ் வங்கி அளித்த கணக்குகள் சரியாக இல்லை என்று தெரிந்த உடனேயே, அந்த வங்கியின் அடிப்படையான சொத்து விவரங்களை (Asset Quality Review) ரிசர்வ் வங்கி பரிசோதித்திருக்க வேண்டும். அதாவது, யெஸ் வங்கி எவ்வளவு கடன் கொடுத்திருக்கிறது, டெபாசிட்கள் எவ்வளவு வாங்கப்பட்டிருக்கின்றன, சொத்துகள் எவ்வளவு இருக்கின்றன, வராக் கடன் (NPA) எவ்வளவு இருக்கிறது என்பதையெல்லாம் ரிசர்வ் வங்கி ஆய்வுசெய்திருக்க வேண்டும்.

ரிசர்வ் வங்கி உண்மையில் இதையெல்லாம் செய்திருக்கும் என்றே நினைக்கிறேன். இல்லாவிட்டால், அந்த வங்கியின் சி.இ.ஓ. மாற்றப்பட்டிருக்க மாட்டார். ஆனால், வங்கியில் இருந்த பிரச்சனை தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை. அந்த வங்கியின் கணக்குகளில் எவ்வளவு பெரிய தவறு நடந்திருக்கும் என்பது நமக்கு வெளிப்படையாகத் தெரியவில்லை.

தங்கள் சொத்து மதிப்பு சுமாராக 3.47 லட்சம் கோடி ரூபாய் என தனது பேலன்ஸ் ஷீட்டில் தெரிவித்திருக்கிறது எஸ் வங்கி. வாராக் கடன் 7 ஆயிரம் கோடி ரூபாய். டெபாசிட்கள் இரண்டே கால் லட்சம் கோடி ரூபாய். கடன்கள் 2.4 லட்சம் கோடி ரூபாய்க்குக் கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக, யெஸ் வங்கி அளித்த கடன்களின் அளவு கடந்த இரண்டு ஆண்டுகளில் மிக வேகமாக அதிகரித்திருக்கிறது.

ஆனால், உண்மையில் மேலே உள்ள விவரங்கள் எல்லாம் சரியா என்ற கேள்வி இருக்கிறது. வாராக்கடன் 7 ஆயிரம் கோடி ரூபாய்தான் என்றால், இவ்வளவு பெரிய நடவடிக்கை தேவையில்லையே? ஆக, வாராக்கடன் என்பது உண்மையில் பல மடங்கு அதிகமாக இருக்க வேண்டும். அதேபோல, சொத்து மதிப்பும் உண்மையா என்ற கேள்வியும் எழுகிறது. இந்த விவரங்களையெல்லாம் ரிசர்வ் வங்கி வெளிப்படையாகச் சொல்லவில்லை.

ஆனால், இப்போது இந்த விவகாரத்தில் எந்தத் தவறும் செய்யாதவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். சேமிப்புக் கணக்கு வைத்திருந்தவர்களை பணம் எடுக்கக்கூடாது என்று சொல்கிறார்கள்.

மற்றொரு பக்கம், யெஸ் வங்கியின் பங்குகளில் முதலீடு செய்தவர்கள் கடுமையான இழப்பைச் சந்தித்திருக்கிறார்கள். அதன் பரஸ்பர நிதியில் முதலீடு செய்தவர்கள் இழப்பைச் சந்தித்திருக்கிறார்கள். தவிர, யெஸ் வங்கி கடன் பத்திரங்களையும் வெளியிட்டது. அந்தக் கடன் பத்திரங்களை வாங்கியவர்களுக்கு பணம் தரப்பட மாட்டாது என ரிசர்வ் வங்கி சொல்லியிருக்கிறது. அவர்கள் நீதிமன்றத்திற்கு சொல்லப்போவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

யெஸ் வங்கியின் பங்கின் மதிப்பு 1400 ரூபாயாக இருந்தது. இந்த விவகாரம் வெடித்ததும் அதன் மதிப்பு 5 ரூபாயாகக் குறைந்தது. எஸ்.பி.ஐ., ரிசர்வ் வங்கி ஆகியவை தலையிடவும் தற்போது சற்று மேலே ஏறியிருக்கிறது. ஆனால், இந்த வங்கியில் நடந்த முறைகேடுகளின் அளவு குறித்து ரிசர்வ் வங்கி இதுவரை வெளிப்படையாகச் சொல்லாதது கவலையளிக்கிறது.

இந்த வங்கியில் இந்திய ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) முதலீடு செய்யப் போவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதனால், அந்த வங்கியின் பங்குகள் சமீபத்தில் வீழ்ச்சியைச் சந்தித்தன. எஸ்பிஐ வங்கியில் வெளிநாட்டினர், வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கின்றன. அவர்களிடமெல்லாம் இது குறித்துக் கேட்கப்பட்டதா எனத் தெரியவில்லை. சிக்கலில் இருக்கும் ஒரு வங்கியில் முதலீடு செய்வதற்கு முன்பாக பங்குதாரர்களைக் கேட்க வேண்டாமா?

நிதிச் சந்தையில் ஒவ்வொரு முறை தவறு நடக்கும்போதும் அது சாதாரண மக்களைத்தான் பாதிக்கிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போதும் அதுதான் நடந்தது. பல பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் அளவு, வெளியில் சொன்னதைவிட அதிகமாக இருப்பதைக் கண்டறிந்த ரிசர்வ் வங்கி, அவற்றுக்கு சில கட்டுப்பாடுகளை (Prompt Corrective Action) விதித்தது. அதுபோல எஸ் வங்கிக்கு ஏன் செய்யவில்லை? அப்படிச் செய்திருந்தால் இவ்வளவு பெரிய சேதத்தை தடுத்திருக்கலாம்.

யெஸ் வங்கியில் நடந்தது என்ன?

ஏற்கனவே பல வங்கிகளில் வராக்கடன்களை வைத்திருந்தவர்கள், திவால் ஆனவர்கள் இந்த வங்கியில் பெருமளவில் கடன் வாங்கியிருக்கிறார்கள். பொதுத் துறை வங்கிகளில் கடன் கொடுக்கும்போது அரசியல் ரீதியான அழுத்தங்கள் இருந்திருக்கலாம். அப்படி கடன் பெற்றவர்கள், பிறகு கட்டாமல் இருப்பார்கள். அது வேறு. ஆனால், யெஸ் வங்கியில் கடன் வாங்கியிருப்பவர்கள், ஏற்கனவே இம்மாதிரியான பின்னணி உடையவர்கள். இவர்களுக்கு வேறு எங்குமே கடன் கிடைக்காது. அவர்களுக்கு யெஸ் வங்கி கடன் வழங்கியிருக்கிறது. இதில், வங்கியின் பிரமோட்டர்களுக்கு லஞ்சமும் கிடைத்திருக்கிறது.

ஒரு கட்டத்தில் யெஸ் வங்கியில் பணம் இல்லாமல் போனவுடன், தன்னுடைய பங்குகளை அடகுவைத்து, கடன் வாங்கி இந்த நிறுவனங்களுக்கு கடன் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இப்படி தவறுகள் நடக்காமல் கண்காணிக்க பல அமைப்புகள் இருக்கின்றன. ரிசர்வ் வங்கி இருக்கிறது. செபி இருக்கிறது. ரேட்டிங் அமைப்புகள் இருக்கின்றன. இயக்குனர்களின் வாரியம் இருக்கிறது. கணக்குத் தணிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இத்தனை கண்காணிப்புகளையும் மீறி இதெல்லாம் நடந்திருக்கிறது.

யெஸ் வங்கி விவகாரத்தில் வராக் கடன் மட்டும் பிரச்சனையில்லை. இந்த வங்கி அளித்த தவறான விவரங்களை நம்பி, பலர் அதன் பங்குகளை வாங்கியிருக்கிறார்கள்.

யெஸ் வங்கி கடன் பத்திரங்களை வெளியிட்ட போது, அதற்கு ரேட்டிங் ஏஜென்சிகள் நல்ல ரேட்டிங்கை வழங்கியிருக்கின்றன. அதை நம்பி பலர் அந்தப் பத்திரங்களை வாங்கியிருக்கிறார்கள். இவர்கள் எல்லோருமே பணத்தை இழந்திருக்கிறார்கள். எல்லோருமே, வங்கி அளித்த புள்ளிவிவரங்களை வைத்தும் ரேட்டிங் ஏஜென்சிகளின் மதிப்பீடுகளை வைத்தும் முதலீடு செய்தவர்கள். இந்த புள்ளிவிவரங்கள், கணக்குகள் சரியா என்பதை ரிசர்வ் வங்கி, செபி ஆகியவை கண்காணித்திருக்க வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக குளோபல் டிரஸ்ட் வங்கியில் பிரச்சனை ஏற்பட்டபோது, அது ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்சுடன் இணைக்கப்பட்டது. யெஸ் வங்கி விவகாரத்தில், அந்த வங்கி வேறு வங்கிகளுடன் இணைக்கப்படப்போவதில்லை. அதன் நிலைமையைச் சரியாக்க இந்திய ஸ்டேட் வங்கி அதில் முதலீடு செய்யப்போகிறது. எஸ்பிஐ 49 சதவீத பங்குகளை வாங்குவதாகச் சொல்லியிருக்கிறது. அடுத்த மூன்றாண்டுகளுக்கு 29 சதவீத பங்குகளைக் கண்டிப்பாக வைத்திருக்கப்போவதாகவும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், யெஸ் வங்கியின் பங்குகளுக்கு எந்த மதிப்பும் இல்லை. இருந்தபோதும் அந்த வங்கி மீது ஒரு நம்பிக்கை வருவதற்காக இதைச் செய்கிறது எஸ்பிஐ.

இப்போது யெஸ் வங்கி தொடர்ந்து இயங்கும் நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. டெபாசிட் செய்தவர்களுக்கு பணம் திரும்பக் கிடைத்துவிடும். ஆனால், பங்குகளை வாங்கியவர்கள், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தவர்கள், கடன் பத்திரங்களை வாங்கியவர்கள் ஆகியோருக்கு ஏற்பட்ட இழப்புகளை எப்படி சரிசெய்ய முடியும்? இதனால், வங்கி அமைப்பின் மீதே மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிடாதா?

இந்தியாவில் வங்கிகளில், நிதிச் சந்தையில் பிரச்சனை ஏற்படுவது முதல் முறையல்ல. பஞ்சாப் நேஷனல் வங்கி, பிஎம்சி, IFLS, எஸ் வங்கி என இதுபோல பல முறை நடந்துவிட்டது. ஆனால், ஒரு தடவைகூட கண்காணிப்பைத் தீவிரப்படுத்தாமல், ஒவ்வொரு முறையும் நடந்த பிறகுதான் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்குமென்றால் எப்படி?

நிச்சயமாக இதற்கு தொடர் விளைவுகள் இருக்கும். இனி தனியார் வங்கிகளில் பணம் போடலாமா என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு வரும்.

சமீபத்தில் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்ததற்கு கொரோனா வைரஸ் மட்டும் காரணமல்ல. இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம், எஸ் வங்கி பிரச்சனையும் பொருளாதார மந்தமும்தான். இப்போது யெஸ் வங்கியில் தவறு நடந்தவுடன், எங்கெல்லாம் தவறு நடந்திருக்கிறது எனக் கண்டுபிடிக்கப்போவதாகச் சொல்லியிருக்கிறார் நிதி அமைச்சர். ஆனால், இதை ஆரம்பத்திலிருந்தே செய்திருக்க வேண்டும். அதுதான் ரிசர்வ் வங்கியின் வேலை. அந்த அமைப்பு ஏன் தன் பணியில் தவறியது என்பதை அவர் கேட்டிருக்க வேண்டும்.

இந்த வங்கியின் சி.இ.ஓவை மாற்றும்போதே, ரிசர்வ் வங்கிக்கு தவறு நடக்கிறது என்பது தெரிந்துவிட்டது. ஆனால், அதற்குப் பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை. காரணம், வங்கியில் சம்பந்தப்பட்டவர்கள் சக்திவாய்ந்தவர்களாக இருந்திருக்கக்கூடும்.

இனிமேல் இம்மாதிரி நடக்காமல் இருக்க, என்ன செய்ய வேண்டுமெனக் கேட்டபோது அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தைச் சேர்ந்த வெங்கடாச்சலம் நகைச்சுவையாக ஒன்றைக் குறிப்பிட்டார். அதாவது, ரிசர்வ் வங்கியை Prompt Corrective Actionக்குக் கீழ் கொண்டுவர வேண்டுமென்றார். கட்டுப்படுத்த வேண்டிய, கண்காணிக்க வேண்டிய அமைப்பே சரியாகச் செயல்படாவிட்டால் என்ன செய்வது?

இதற்கிடையில், அரசு ஒரு சட்டத்திருத்தத்தைக் கொண்டுவர முயற்சி செய்கிறது. அதன்படி, இப்படி இழப்பு ஏற்பட்டால், வங்கியில் டெபாசிட் செய்தவர்களும் இழப்பில் பங்கேற்க வேண்டியிருக்கும். முடிவில் சாதாரண பொதுமக்கள்தான் இழப்பை எதிர்கொள்ளப் போகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: