You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"கொரோனா வைரஸ் தொற்று இல்லாத மாநிலமாக மாறியது தமிழகம்" - விஜயபாஸ்கர்
கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
"நமது மாநிலத்திற்கு ஒரு நற்செய்தி, ராஜிவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்த நபர் குணமடைந்துவிட்டார். அவர் விரைவாக குணமடைந்ததற்கு காரணம் கவனமான சிகிச்சையும், அவசர காலத்தில் சிறப்பாக செயல்படும் நிபுணத்துவமே காரணம். தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லை," என அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 50-ஐ எட்டியுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் சஞ்சீவா குமார் இத்தகவலை உறுதி செய்துள்ளார். இவர்களில் 34 பேர் இந்தியர்கள், 16 பேர் இத்தாலியை சேர்ந்தவர்கள் ஆவர். இந்தியாவில் இதுவரை யாரும் கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை.
இதனிடையே, கேரளாவில் கொரோனா தொற்று காரணமாக மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை திரையரங்குகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலையாள திரைப்படத்துறையை சேர்ந்த பல்வேறு அமைப்புகள் கலந்துகொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா…
சீனாவில் தொடங்கி, அந்த நாட்டை ஆட்டிப் படைத்து நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளுக்குப் பரவிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவுக்கு மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்து வருகிறது.
தற்போது கேரளாவில் புதிதாக9 பேருக்கும், கர்நாடகத்தில் புதிதாக 4 பேருக்கும் இந்த நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றியவர்கள் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் தென்கிழக்கு ஆசியாவில் உலக சுகாதார நிறுவனத் தரவுகளின்படி ஏற்கெனவே 50 கொரோனா நோயாளிகளைப் பெற்றிருந்த தாய்லாந்தைவிட மோசமான நிலைக்கு இந்தியா சென்றுள்ளது.
இந்தப் பிராந்தியத்தில் அதிக கொரோனா நோயாளிகள் உள்ள நாடாகவும் இந்தியா ஆகியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், செவ்வாய்க்கிழமை தாய்லாந்தில் புதிதாக நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டால் நிலைமை மாறலாம்.
தமிழகத்தில் நிலை என்ன?
தமிழகத்தை பொறுத்தவரை புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளியுடன், நெருங்கி இருந்த 8 பேரின் இரத்த மாதிரிகள் சோதனைக்காக அனுப்பப்பட்டதாகவும், அந்த 8 பேருக்கும் கொரோனா இல்லை என சோதனை முடிவுகள் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் தற்போது வரை ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார், அவர் குணமடைந்து வருகிறார். அவர் உடல்நிலை சீராக உள்ளது என விஜயபாஸ்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று அறிகுறியால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிறுவன் (15) ஒருவன் இன்று விடுவிக்கப்பட்டான். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து தமிழகம் வந்திருந்த இந்த சிறுவன் கடந்த 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தான். வைரஸ் தாக்குதல் இல்லை என உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டான்.
இதனிடையே, கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்கும் வண்ணம், சென்னை மாநகரப் பேருந்துகள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்படுகின்றன என தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கேரளாவில்...
கேரளாவில் மேலும் புதிதாக 6 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளதாக மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
7-ம் வகுப்புகள் வரையிலாான மாணவர்களுக்கு பள்ளி வகுப்புகளும், தேர்வுகளும் மார்ச் 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார் அவர். 8, 9, 10 ஆகிய வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி தேர்வு நடக்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
விடுமுறைகால வகுப்புகள், தனிப்பயிற்சி வகுப்புகள், அங்கன்வாடி மையங்கள், மதராசாக்கள் ஆகியவையும் மார்ச் 31 வரை மூடப்பட்டிருக்கும்.
`சபரிமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும்`
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வருவதை பக்தர்கள் தவிர்க்கவேண்டும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டின் தலைவரான என். வாசு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அனைத்து கோயில்களும் அதிக அளவில் மக்கள் கூடும் வகையில் எந்த கூட்டமோ, விழாக்களோ நடத்தவேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடகத்தில்...
கர்நாடகத்தில் ஏற்கெனவே ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியது உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இப்போது மேலும் 4 பேருக்கு புதிதாக நோய் உறுதி செய்யப்பட்டிருப்பதாக அம்மாநில சுகாதார அமைச்சர் பி.ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.
இவர்களின் குடும்ப உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதோடு, இந்த நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த அரசுக்கு உதவவேண்டும் என்றும் வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கர்நாடக மருத்துவனையிலிருந்து தப்பி ஓடிய கொரோனா அறிகுறி கொண்ட நபரை, சமாதானம் செய்து மீண்டும் மருத்துவமனையில் அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் சேர்த்துள்ளனர். முன்னதாக துபாயிலிருந்து திரும்பி வந்த நபர், கொரோனா அறிகுறிகள் இருந்ததால் கடந்த ஞாயிற்றுக்கிழமை மங்களூரு அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். ஆனால் அங்கிருந்த மருத்துவர்களிடம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கப்போவதாக வாக்குவாதம் செய்துவிட்டு, தகவல் தெரிவிக்காமல் தப்பித்து சென்றார்.
இந்நிலையில், இரான் யாத்திரை சென்றிருந்த 58 இந்தியப் பயணிகள் விமானப்படை விமானம் மூலம் மீட்கப்பட்டு இன்று செவ்வாய்க்கிழமை இந்தியத் தலைநகர் டெல்லி கொண்டுவரப்பட்டுள்ளனர்.
மணிப்பூர்...
கொரோனா வைரஸ் பரவும் ஆபத்தை கருத்தில் கொண்டு மியான்மர் நாட்டுனான சர்வதேச எல்லை மூடப்படுவதாக இந்தியாவின் மணிப்பூர் மாநில முதல்வர் என்.பைரன் சிங் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: