You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மந்தமாகும் பொருளாதாரம்: வேகம் பிடிக்கும் வங்கி மோசடிகள்
- எழுதியவர், ஆஷுதோஷ் சின்ஹா
- பதவி, மூத்த பத்திரிகையாளர்
சில காலத்திற்கு முன்பு வரை, இந்தியாவின் பொருளாதாரம் எவ்வளவு சிறப்பாக இயங்குகிறது என்பதன் அடிப்படையில், அரசாங்கத்திற்கு 10இல் எட்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.
சிலர் 10க்கு 10 என மதிப்பெண்ணளை தாராளமாக கொடுத்துக் கொண்டிருந்தார்கள். உலகெங்கிலும் உள்ள பொருளாதார வல்லுநர்கள் அரசாங்கத்தின் கொள்கைகளைப் புகழ்வதில் சோர்வடையவில்லை. ஆனால், இப்போது பலரின் நம்பிக்கை சற்று ஆட்டம் கண்டுள்ளது. கடந்த ஆறு காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி விகிதம் படிப்படியாக வீழ்ந்துவிட்டது.
வங்கிகளில் நடக்கும் மோசடிகள் தொடர்பான இந்திய ரிசர்வ் வங்கியின் தகவல்கள் பொது மக்களின் நம்பிக்கைக்கு மேலும் ஓர் அடியாக இருக்கிறது.
2014-க்குப் பிறகு, அரசு நடத்தும் வங்கிகளில் மோசடிகள் நான்கு மடங்காக அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறுகிறது. 2017-18 உடன் ஒப்பிடும்போது, 2018-19ல் மோசடிகள் 70 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
2013-14 ஆம் ஆண்டுடன் முடிவடைந்த நிதியாண்டில், 10,171 கோடி ரூபாயாக இருந்த பொதுத்துறை வங்கிகளில் நடைபெற்ற மோசடிகள், அடுத்த ஆண்டில் 19,455 கோடியாக அதிகரித்தது.
2015-16ல் சற்று குறைந்து 18,699 கோடி ரூபாயாக இருந்த இது, மீண்டும் 2016-17ல் வேகமாக அதிகரித்து 23,944 கோடி ரூபாயை எட்டியது.
அதன் பிறகு, மோசடிகளில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்பட்டது. 2017-18 ஆம் ஆண்டில் 41,168 கோடியாகவும், 2018-19ல் 71,543 கோடியாகவும் உயர்ந்தது.
ஆனால், 2019 ஏப்ரலில் தொடங்கிய வணிக ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மோசடி 95,760 கோடி ரூபாய் என்று நிதி அமைச்சர் சமீபத்தில் மாநிலங்களவையில் தெரிவித்தார். அப்படியென்றால் மோசடி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது ஆச்சரியமளிக்கிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்த ஆறு மாதங்களில், வாராக்கடன் 64,509 கோடி ரூபாயாக இருந்தது.
தற்போது, பொதுத்துறை வங்கிகளில் மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா என்பது உண்மையில் தெளிவாகத் தெரியவில்லை. மோசடி நடைபெறுவது புள்ளிவிவரங்களில் தெரியவரும்போது, அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா? இல்லையா?
பெரிய வங்கி, பெரிய மோசடி
2018-19இல் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் 22,000 க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகளில் 25,417 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றதாக தெரியவந்தது.
பஞ்சாப் நேஷனல் வங்கி (10,822 கோடி ரூபாய்), பாங்க் ஆப் பரோடா (8,273 கோடி ரூபாய்) ஆகியவை மோசடியில் அடுத்த இரண்டு இடங்களை பிடித்தன. நாட்டின் இந்த மூன்று மிகப்பெரிய அரசு வங்கிகளின் நிலைமை அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
மோசடிகளில் 55 சதவிகிதம் பொதுத்துறை வங்கிகளில் நடைபெற்றுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறுகிறது.
எல்லா சம்பவங்களிலும், மோசடி செய்யப்பட்ட பணத்தில் 90 சதவீதம் பொதுத்துறை வங்கிகளிடமிருந்தே சென்றுள்ளது.
கடந்த ஆண்டுகளில் முன்பை விட அதிக கண்டிப்பு கட்டப்பட்டதாக சிலர் கூறுகின்றனர். இதனால்தான் இதுபோன்ற வழக்குகள் அதிகம் வெளிவருவதாகவும் கூறப்படுகிறது.
பொருளாதார குற்றங்களின் தலைநகராகும் ஜெய்ப்பூர்
வங்கிகளில் நடக்கும் பெரிய மோசடிகள் குறித்து செய்தித்தாள்கள் அதிக கவனம் செலுத்துகின்றன. ஆனால், சிறிய மோசடிகள் பொதுத்துறை வங்கிகளின் முதுகெலும்பை உடைத்தன. இப்போது இத்தகைய மோசடிகள் பெரிய நகரங்களில் மட்டும் நடக்கவில்லை. எல்லா இடங்களுக்கும் பரவலாகிவிட்ட்து.
2017 ஆம் ஆண்டில் தேசிய பொருளாதார குற்றவியல் அமைப்பு (National Economic Crime Bureau) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, பொருளாதார குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
2014 ஆம் ஆண்டில், பத்து லட்சம் மக்களுக்கு 110 என்ற அளவில் பதிவு செய்யப்பட்டுள்ள பொருளாதார குற்றங்கள், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 111.3 ஆக அதிகரித்துள்ளது. ஏடிஎம்கள் தொடர்பான குற்றங்கள் முதல், கள்ள நோட்டு என பலவிதமான குற்றங்கள் இதில் அடங்கும்.
பொருளாதார குற்றங்கள் பதிவு செய்யப்படும் நாட்டின் முக்கிய நகரங்களில் இப்போது முதலிடத்தை பிடித்துள்ளது ஜெய்ப்பூர்.
அதையடுத்த இடங்களை பிடிக்கும் நகரங்கள் லக்னோ, பெங்களூரு, டெல்லி மற்றும் ஹைதராபாத், அடுத்த இடங்களை பிடிக்கும் நகரங்கள் கான்பூர், மும்பை, புனே, நாக்பூர் மற்றும் காசியாபாத்.
ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின்படி, 50 கோடி ரூபாய்க்கும் அதிகமான அனைத்து வாராக்கடன் வழக்குகளையும் மோசடி என்ற கோணத்தில் விசாரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது .
இதுபோன்ற வழக்குகளைக் கண்டறிய 2015 ஆம் ஆண்டில் மத்திய மோசடி பதிவேடு (Central fraud registry) ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது
தலைவலியாக மாறிய முத்ரா கடன்
இப்போது பொதுத்துறை வங்கிகளுக்கு ஒரு புதிய பிரச்சனை எழுந்துள்ளது.
முத்ரா கடன்கள் தொடர்பாக வங்கிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது ரிசர்வ் வங்கி. பல வங்கிகள் முத்ரா திட்டத்தின் கீழ் கொடுத்த கடன்கள் திரும்ப கிடைக்கவில்லை என்ற தகவல்களுக்குப் பிறகு, இதுபோன்ற கடன்களைக் கொடுக்கும்போது வங்கிகள் அதிக கவனமாக இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி முத்ரா கடன் திட்டத்தின் கீழ், சிறு வணிகங்களுக்கு குறைந்த வட்டியில் கடன்களை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
இதனால், சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு 50 ஆயிரம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.
இத்தகைய கடன்கள் இப்போது வங்கிகளுக்கு தலைவலியாகிவிட்டன, ஏனெனில், இந்த திட்டத்தின் கீழ், மூன்று லட்சத்து பத்து கோடி ரூபாய் மதிப்புள்ள கடன்கள் திருப்பித் தரப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் அரசு தெரிவித்தது.
வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் கடன்களை திருப்பிச் செலுத்தும் திறனை நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்று, கடந்த மாதம் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் கூறினார்.
தள்ளாடும் பொருளாதார படகை நிலைநிறுத்தவும், சரியான இடத்திற்கு கொண்டு செல்லவும் முத்ரா கடன் திட்டத்தை முறைப்படுத்துவது சரியான முயற்சியாக இருக்கலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: