You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: உயரும் பலி எண்ணிக்கை, ரத்து செய்யப்படும் விமானங்கள் - இந்தியாவின் நிலை என்ன? Latest Corona Updates
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 60-ஆக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலன் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், புதிதாக 10 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் கேரளாவை சேர்ந்த 8 பேருக்கும் ராஜஸ்தான் மற்றும் டெல்லியை சேர்ந்த தலா ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலன் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே இன்று (மார்ச் 11) இத்தாலியில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியா வந்த 83 பயணிகளும் மானேசரில் உள்ள ராணுவ குடியிருப்பு பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் குறிப்பிட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இந்த 83 பயணிகளில், 74 பேர் இந்தியர்கள், 6 பேர் இத்தாலி நாட்டவர், எஞ்சிய மூவரும் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் ஆவர்.
இதற்கிடையே கொரானோ வைரஸ் அச்சம் காரணமாக கோலாலம்பூர், சிங்கப்பூர், தோஹா, ஹாங்காங் மற்றும் குவைத்திலிருந்து சென்னை வந்து செல்லும் 10 விமானங்கள் இன்றோடு மூன்றாவது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
கொரானோ வைரஸ் அச்சம் காரணமாக இரானில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு உதவும் வகையில், 6 சுகாதாரத்துறை அதிகாரிகள் இரானுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அங்கு கொரானோ வைரஸ் சோதனை மையங்களை நிறுவ உதவுவர் என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
மார்ச் 7-ஆம் தேதியன்று, இரானில் இருந்து 108 பேரிடம் எடுக்கப்பட்ட கொரானோ தொற்று சோதனை மாதிரிகள் இந்தியா வந்தது. இதில் கொரானோ தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டவர்கள் நேற்று இந்தியா அழைத்து வரப்பட்டனர்
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தரம்சாலாவில் வியாழக்கிழமை தொடங்கவுள்ள நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இந்திய கிரிக்கெட் வீரரான புவனேஸ்வர் குமார் கூறுகையில், 'கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறித்து மருத்துவர்கள் குழுவொன்று எங்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறது. இன்று அவர்களுடன் எங்களுக்கு ஒரு சந்திப்பு உள்ளது. கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக கிரிக்கெட் பந்தில் எச்சில் தடவக்கூடாது என்று மருத்துவர்கள் கூறினால், நிச்சயம் அதை நாங்கள் பின்பற்றுவோம்' என்று கூறினார்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று இன்று தாக்கல் செய்யப்பட்டது
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: