சென்னை அண்ணாசாலையில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் மூவர் தென்காசியில் சரண்

சென்னை அண்ணாசாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் தொடர்பாக மூன்று பேர் தென்காசி நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தனர்.
காவல் துறையினர் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளனர்.
அண்ணா சாலையில் உள்ள காமராஜர் அரங்கம் அருகே செவ்வாய் மாலை இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் நாட்டு வெடிகுண்டு வீசினர். அந்த வெடிகுண்டு வெடித்து பலத்த சத்தம் ஏற்படுத்தியதால், அண்ணா சாலையில் பயணித்தவர்கள் பதற்றம் அடைந்தனர்.
குண்டு வெடிப்பின் தாக்கத்தால், அங்கிருந்த கார் மற்றும் கடைகளின் கண்ணாடிகள் உடைந்தன. குண்டு வீசப்பட்ட இடம் தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு அருகே இருந்ததால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நாட்டு வெடி குண்டுகளை வீசியது யார், எதற்காக வீசினர் என காவல்துறையினர் கடந்த இரண்டு நாட்களாக விசாரணை மேற்கொண்டுவந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பில், தங்கள் வழக்கறிஞருடன் வந்த மூன்று பேர் தென்காசி நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர் என தென்காசி டிஎஸ்பி கோகுல் கிருஷ்ணன் பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தினார்.
''சதீஷ்(20), ஹரீஷ்(20) மற்றும் தமிழ்ச்செல்வன்(25) ஆகியோர் இன்று தென்காசி நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இவர்கள் ஏன் குண்டு வீசினார்கள் என்பது உள்ளிட்ட விவரங்களை தற்போது தெரிவிக்க முடியாது. மூவரும் தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர்கள். நீதிபதியிடம் அவர்கள் பற்றிய விவரங்களைக் கூறிய பின்னர், அவர்களை தண்டையார்பேட்டை காவல்துறையிடம் ஒப்படைப்போம்,'' என டிஎஸ்பி கோகுல் கிருஷ்ணன் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- டெல்லி கலவரம்: பிரிந்த குடும்பத்துடன் மீண்டும் இணைந்த 2 வயது பெண் குழந்தை
- "கடத்தல், சித்திரவதை, மிரட்டல்" - துபாய் ஆட்சியாளர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்
- டி20 உலகக்கோப்பை: இந்தியா - ஆஸ்திரேலியா இறுதிப் போட்டியில் மோதல்
- மலேசியாவில் ஒரே வாரத்தில் இரட்டிப்பான கொரோனா பாதிப்பு, போராடுகிறது சிங்கப்பூர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












