கன்னையா குமார் மீதான தேச துரோக வழக்கு: டெல்லி அரசு ஒப்புதல்

பட மூலாதாரம், Getty Images
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கன்னையா குமார், உமர் காலித், அனிர்பன் பட்டாச்சார்யா உள்ளிட்ட ஒன்பது பேர் மீதான தேச துரோக வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து மேல் நடவடிக்கை எடுக்க டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவுக்கு டெல்லி மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லி மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் மனோஜ் திவாரி அரவிந்த் கேஜ்ரிவால் அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளார்.
டெல்லி இந்து - முஸ்லிம் தரப்புகளிடையே மதக் கலவரத்தை சந்தித்துள்ளது.
"தற்போதைய சூழலை கருத்தில் கொண்டே டெல்லி அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது," என்று மனோஜ் திவாரி கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
டெல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஒன்றின் அறிவுறுத்தலின்பேரில் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் அலுவலகத்துக்கு ஒப்புதல் கோரி கடந்த வாரம் கடிதம் அனுப்பியிருந்தது.
வழக்கின் பின்னணி என்ன?
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பிப்ரவரி 2016இல் நடந்த ஒரு மாணவர் கூட்டத்தில் இந்தியாவுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக கன்னையா குமார் உள்ளிட்டவர்கள் மீது டெல்லியில் உள்ள வசந்த் குஞ்ச் காவல் நிலையத்தில் தேச துரோகம் மற்றும் சதித் திட்டம் தீட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஜனவரி 2019இல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்திய நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் அஃப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து நடந்த நிகழ்வில் இந்தியாவுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன என்று அந்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருந்தது.
எனினும் டெல்லி அரசிடம் முறையான ஒப்புதல் பெற்ற பின்னரே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது.
தேச துரோக வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தொடர்புடைய மாநில அரசின் ஒப்புதல் தேவை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













