குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம்: மு.க. ஸ்டாலின் கோரிக்கை நிராகரிப்பு

பட மூலாதாரம், FACEBOOK/MK STALIN
தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கோரியிருக்கிறார். வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தில் தடியடி நடத்த உத்தரவிட்டது யார் என்றும் கேள்வியெழுப்பியிருக்கிறார்.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடந்துவருகிறது. கூட்டம் தொடங்கும் முன்பாக சட்டப்பேரவைக்கு வந்த மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் தமீமுன் அன்சாரி, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்ற பேனரைப் பிடித்தபடி வந்தார்.
இதற்குப் பிறகு கேள்வி நேரத்தின்போது, காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது குறித்து தி.மு.க. கேள்வியெழுப்பியது. இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, ''பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தைக் கொண்டுவர தி.மு.க. என்ன முயற்சி செய்தது? மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்தபோதும் என்ன செய்திருக்கிறீர்கள் ?'' எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன், ''நாங்கள் பெரிய கட்சியாக இருந்தாலும் மத்திய அரசுடன் சுமுகமான உறவில் இல்லை. நீங்கள்தான் நல்ல உறவில் இருக்கிறீர்களே. இதை மத்திய அரசின் அறிவிப்பாகக் கொண்டு வரவேண்டியதுதானே?'' எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பிறகு, பேசிய தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வண்ணாரப்பேட்டையில் நடந்துவரும் போராட்டம் குறித்து கேள்வியெழுப்பினார். முதலமைச்சரோ, அமைச்சர்களோ அங்கு சென்று பேசியிருக்க வேண்டும்; பெண்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் போதுமான பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும். அங்கு தடியடி நடத்த உத்தரவிட்டது யார் என மு.க. ஸ்டாலின் கேட்டார்.

மேலும், இம்மாதிரி தொடர்ந்து போராட்டங்கள் நடப்பதால் தமிழகம் போராட்டக்களமாக மாறியுள்ளது என்றும் தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கும்போது, அதனை மத அடிப்படையில் நடத்தக்கூடாது என்றும் கூறினார்.
மேலும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்றும் போராட்டக்கரார்கள் மீதான வழக்குகளை ரத்துசெய்ய வேண்டுமென்றும் கூறினார்.
இது குறித்து பதிலளித்த சபாநாயகர் தனபால், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் விவாதிக்க முடியாது. இது தொடர்பாக தி.மு.க. கொடுத்த மனுவுக்கு மறுப்பு தெரிவித்து கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, ஏற்கனவே நிராகரித்த கோரிக்கையை மீண்டும் அவையில் கொண்டுவர முடியாது. தீர்மானத்தை நிராகரிப்பது குறித்து முடிவெடுக்க சபாநாயகருக்கு முழு அதிகாரம் உள்ளது. தீர்மானம் தொடர்பாக என்னை நிர்பந்திக்க கூடாது என்று கூறினார்.
இதற்குப் பிறகு இதற்குப் பதிலளித்த முதல்வர் கே. பழனிச்சாமி, வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள் அனுமதியில்லாமல் இரவில் திடீரென முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் வாகனங்களைச் சேதப்படுத்தியதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், காவல்துறையினர் மீது கல்வீசித் தாக்கியதாகவும் செருப்பு, தண்ணீர் பாட்டில்களை வீசியதாகவும் கைதுசெய்து, வாகனத்தில் ஏற்றப்பட்டவர்கள் ரகளையில் ஈடுபட்டதாகவும் கூறிய முதல்வர், இயற்கையான முறையில் ஒருவர் இறந்ததை போராட்டத்தில் இறந்ததாக செய்தி பரப்பியதாகவும் கூறினார்.

முதலமைச்சரின் விளக்கத்தை ஏற்காத தி.மு.கவினர் அவையைவிட்டு வெளிநடப்புச் செய்தனர். வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், "இந்தப் போராட்டம் தொடர்பாக மீன்வளத் துறை அமைச்சர் போராட்டக்காரர்களிடம் பேசியிருக்கிறார்.
முதல்வர் பேசியதாகவும் செய்திகள் வந்தன. ஆனால், அது பற்றியெல்லாம் விளக்கம் ஏதும் தரப்படவில்லை. நாங்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டுவரும்படி கோரியபோது, அது ஆய்விலிருக்கிறது என்றுதான் சொல்லிவந்தார். அது அவையில் விவாதிக்கப்படவில்லை. இது தொடர்பாக சட்டப்பேரவை விதி எண் 173ல் தெளிவாக இருக்கிறது" என்று தெரிவித்தார்.
தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்வியெழுப்பியபோதிலும் விளக்கமளிக்கப்படவில்லை என்றும் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
இதற்குப் பிறகு தி.மு.கவினர் மீண்டும் அவைக்குத் திரும்பிச் சென்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













