15 பேர் கூட்டு பாலியல் வல்லுறவு? 7 வயது சிறுமி பலி - பின்னணி என்ன?

    • எழுதியவர், நடராஜன் சுந்தர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே 7 வயது சிறுமி கூட்டுப் பாலியால் வல்லுறவு செய்யப்பட்டதால் இறந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சிறுமி கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டது எப்படி தெரியவந்தது?

சிறுமியின் தாய், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அவரை பிரிந்து தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். பிறகு, 9 மற்றும் 7 வயதுள்ள தன் குழந்தைகளை தம் தாய் வீட்டில் விட்டுவிட்டு புதுச்சேரியில் தங்கி வேலை செய்து வந்தார். அப்போது உடன் வேலை செய்தவரை இரண்டாவது திருமணமும் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு தம் இரு குழந்தைகளையும் புதுச்சேரிக்கு தன்னுடனே அழைத்துவந்து அங்குள்ள அரசுப் பள்ளியில் சேர்த்தார்.

பள்ளியில் ஒருநாள் சிறுமிகள் இருவரும் மிகவும் சோர்வுடனும் இருப்பதைப் பார்த்து ஆசிரியர் ஒருவர் விசாரித்தபோது, புதுவை வருவதற்கு முன்பு, திண்டிவனத்தில் பாட்டி வீட்டில் இருந்தபோது இருவரும் வல்லுறவு செய்யப்பட்ட தகவல் வெளியானது.

உடனடியாக புதுச்சேரி குழந்தைகள் நலக்குழுவிற்கு (Child Help Line) தகவல் தெரிவிக்கப்பட்டு, சிறுமிகள் இருவரையும் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமிகள் இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள்,அவர்கள் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதை உறுதி செய்தனர். மேலும் சிறுமிகளின் தாயிடம் விசாரித்தபோது, அவர்கள் பாட்டி வீட்டில் தங்கியிருந்தபோது இரு சிறுமிகளும் உறவினர்களால் பல மாதங்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட தகவல், அவர்களை அழைக்கச் சென்றபோது தெரியவந்தது என்று அவரும் உறுதி செய்தார்.

சம்பவம் திண்டிவனம் நடந்ததால், விழுப்புரம் மாவட்டம் குழந்தைகள் நல குழுவிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, சிறுமிகள் பாதிக்கப்பட்டது குறித்து பிரம்மதேசம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சிறுமிகளை வல்லுறவு செய்த குற்றச்சாட்டில் உறவினர்கள் உட்பட 15 பேரை கடந்த ஆண்டு ஜுலை மாதம் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தது போலீஸ். ஆனால், அவர்கள் அனைவரும் அக்டோபர் மாதம் ஜாமீனில் வெளியேவந்தனர்.

சிறுமி எவ்வாறு உயிரிழந்தார்?

வழக்கு விசாரணை நடந்துகொண்டிருந்தபோது, சிறுமிகளின் பாதுகாப்பு கருதி சிறுமிகளோடு சென்னையில் குடியேறினார் அவர்களது தாய். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு அவர்களது இளைய மகள் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்துள்ளார். பிறகு குழந்தையை, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். சிறுமி உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி முன்னதாகவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

சிறுமியின் தாய் சொல்வது என்ன?

இந்த பாலியல் வல்லுறவு மற்றும் மரணம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சிறுமியின் தாய் "குழந்தைகளை பிரிந்து புதுச்சேரியில் வேலை செய்து கொண்டிருந்த நான், அவர்களை புதுச்சேரியிலேயே படிக்கவைக்கலாம் என முடிவு செய்து, குழந்தைகளை அழைப்பதற்காக திண்டிவனம் சென்றேன். இரு குழந்தைகளும் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டது அப்போதுதான் தெரியவந்தது. உறவினர்கள் மற்றும் எனது தம்பியின் நண்பர்கள் உட்பட 15 பேர் இதைச் செய்துள்ளனர்," என்கிறார்.

அப்போதே ஏன் அவர்கள் மீது புகார் செய்யவில்லை என்று கேட்டபோது, "குழந்தைகள் எதிர்காலம் கருதியும், விஷயம் வெளியே தெரிந்தால் குழந்தைகளுக்கு வேறு ஏதாவது ஆகிவிடுமோ என பயந்தும் புகார் செய்யவில்லை. மேலும் குற்றத்தில் ஈடுபட்ட அனைவரும் உறவினர்கள். அவர்களது குடும்பத்தார் அனைவரும் என்னிடம் செய்தது தவறு. ஆனால் அனைவரின் எதிர்காலமே கேள்விக்குறி ஆகிவிடும் என்று வேதனைப்பட்டனர். இதனாலும் நான் முதலில் புகார் தெரிவிக்கவில்லை," என்றார்.

"அனைத்தையும் பொறுத்துக்கொண்டு வாழ்ந்தது குழந்தைகளுக்காக. இப்போது அவளே இறந்துவிட்டாள். ஆகவே, என் குழந்தைகளிடம் குற்றம் செய்து, கைதாகி ஜாமீனில் வெளியே உள்ள அனைவரையும் நிரந்தரமாக சிறையில் அடைக்க முயற்சி செய்வேன். எனது இறந்த குழந்தைக்கு நான் செய்யும் நல்ல காரியம் இதுவாகவே இருக்கும். இது போன்ற சம்பவங்கள் எந்த குழந்தைக்கும் நேரிடக் கூடாது என்பதற்காகவும், என் குழந்தைகளை வல்லுறவு செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுத்தருவேன்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

குழந்தை இறப்புக்கான காரணம் கேட்டபோது பிணக்கூறாய்வு அறிக்கை வரும்போதுதான் தெரியும் என்று மருத்துவர்கள் கூறியதாகத் தெரிவித்தார் அவர்.

திண்டிவனம் வழக்குரைஞரும், மனித உரிமை ஆர்வலருமான லூசியா இந்த சம்பவம் குறித்து கூறுகையில், "இவ்வழக்கில் மருத்துவர்கள் முதல் நீதிமன்றம் வரை அனைவருமே மெத்தனப் போக்கைதான் கடைபிடித்து வந்துள்ளனர். அதனால்தான் குழந்தைகளிடம் பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட குற்றவாளிகள் வெளியே இருக்கின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே ஒரே கிராமம் மற்றும் ஒரே சமுதாயத்தைச் சேர்த்தவர்கள் என்பதால், இவ்வழக்கை அது பலவீனம் அடையச் செய்கிறது. இதன் காரணமாக இவ்வழக்கின் உறுதியான சாட்சிகளை வெளியே கொண்டுவர முடியவில்லை.

மேலும் போக்ஸோ சட்டப்படி குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் 60 நாட்கள். ஆனால் இவ்வழக்கில் 100 நாள்களுக்குப் பிறகே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த தாமதமும் வழக்கை பலவீனப்படுத்துகிறது" என்று தெரிவித்தார்.

இந்த வழக்கு குறித்து விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கூறுகையில், "இந்த புகாரை கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதிவு செய்து, அந்த சிறுமிகள் சொல்ல சொல்ல உடனடியாக 15 பேரை கைது செய்து, மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினோம். 125 நாட்களுக்கு பிறகுதான் அவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியேவந்தனர். வழக்கில் தொடர்புடையவர்கள் அனைவருமே அந்த சிறுமியின் உறவினர்கள். நீதிமன்றத்தில் இந்த 15 பேர் குற்றவாளிகள் இல்லை என்று சிறுமிகளின் தாய் சொன்னதால்தான் அவர்கள் ஜாமீனில் வெளியேவர முடிந்தது. இருந்தபோதிலும் மருத்துவப் பரிசோதனை அடிப்படையில் கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் நாள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தோம். ஆனால் சிறுமி இறப்புக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. பிணக்கூறாய்வு அறிக்கை வந்தபிறகு அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.

"போக்ஸோ சட்டத்தின் கீழ் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவேண்டும். ஆனால், இந்த வழக்கில் 15 குற்றவாளிகள் ஈடுபட்டுள்ளனர். ஆகவே, 15 குற்றவாளிகளையும் கைது செய்து, அவர்கள் அனைவரையும் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி, பிறகுதான் முழுமையான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முடியும். அத்துடன், ஒவ்வொரு நபருக்கும் தனித்தனியே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதாலும், இந்த பாலியல் வல்லுறவு சம்பவம் ஒரு வருடமாக 2018ல் தொடர்ந்து நடந்துவந்துள்ளதால், நீதிமன்றத்தில் ஒரு மாதம் கூடுதலாக அனுமதி கேட்டுத்தான் இந்த குற்றப்பத்திரிக்கையை இறுதியாக தாக்கல் செய்தோம். காவல்துறை தரப்பில் இருந்து இந்த வழக்கிற்கான அனைத்து விஷங்களும் சரியாக செய்து கொண்டிருக்கிறோம்," என்று மேலும் அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: