You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
CAA Protest: சென்னையின் ஷாஹீன்பாக் ஆகிறதா வண்ணாரப்பேட்டை?
சென்னை வண்ணாரப்பேட்டையில் வெள்ளியன்று (நேற்று) குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டத்தின் முடிவில் காவல்துறையினர் தடியடி நடத்தியத்தைக் கண்டித்து, நூற்றுக்கணக்கான இஸ்லாமிய பெண்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வண்ணாரப்பேட்டையில் வெள்ளியன்று காவல்துறை நடத்திய தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் பரவிவருகிறது.
குறிப்பாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தெற்கு டெல்லியில் ஷாஹீன்பாக் என்ற இடத்தில் பலநாட்களாக நடந்துவரும் பெண்களின் போராட்டத்தை போலவே வண்ணாரப்பேட்டையில் பெண்களின் போரட்டம் தொடங்கியுள்ளது.
இதனை ட்விட்டர்வாசிகள் சென்னையின் ஷாஹீன்பாக் என ட்ரெண்ட் செய்துள்ளனர்.
சென்னையில் வேறு சில இடங்களிலும் போராட்டங்கள் நடந்துவருகின்றன. மின்ட் பகுதியிலும் பெண்கள் பலர் போராட்டத்தில் கலந்துகொண்டனர். அவர்கள் சுமார் ஆறு மணிநேரத்திற்கு பிறகு கலைந்து சென்றனர்.
வணிக கடைகள் மிகுந்த மின்ட் பகுதியில் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயான நஜீரா சிந்தா மதார் (38) சுமார் ஆறு மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் கலந்துகொண்டார்.
பிபிசி தமிழிடம் பேசிய நஜீரா, ''தெருவில் போராட்டம் நடைபெற்றதால், அங்குள்ள கடைகளில் இருந்தவர்களும் எங்களுக்கு ஆதரவு அளித்தார்கள். நாங்கள் ஒவ்வொரு இந்தியர்களுக்காகவும் போராட்டத்தில் இறங்கியுள்ளோம். தடியடி நடத்தியது தவறு. குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு பின்வாங்காவிட்டால், நாங்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம்,'' என்றார்.
தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்துள்ளதாக காவல்துறையினர் எங்களிடம் தெரிவித்தனர். இந்த உத்தரவாதத்தை அடுத்து, நாங்கள் கலைந்துள்ளோம். ஆனால் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் மீண்டும் போராடுவதற்கு சாலைக்கு வருவோம்,''என்றார்.
போராட்டத்தில் பங்குகொள்ளும் பெண்கள் தங்களாவே எழுச்சியுடன் ஒன்றுசேர்ந்து சாலைகளை நிரப்புகிறார்கள் என்கிறார் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா.
''பெண்கள் ஒன்று திரண்டு நீதி கேட்கிறார்கள். பெண்கள் வண்ணாரப்பேட்டையில் தொடர் போராட்டத்தை பெண்கள் முன்னெடுத்த நிலையில் அவர்கள் மீதும் நடைபெற்றுள்ளது. சென்னை மாநகர காவல்துறையின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதாக உள்ளது. இந்த போராட்டத்தை நடத்த ஏற்கனவே அனுமதி கோரியபோது போராட்டம் நடத்தக்கூடாது என காவல்துறையினர் மறுப்பு தெரிவித்திருந்தனர். அரசியல் சார்பில்லாமல் எண்ணற்ற குடும்பங்களில் இருந்து வந்துள்ள தாய்மார்கள் முன்னின்று உறுதியுடன் போராட்டத்தை நடத்துகிறார்கள்,'' என்கிறார் அவர்.
மேலும், என்பிஆர், என்ஆர்சி மற்றும் சிஏஏ ஆகிய கறுப்புத் திட்டங்களை திரும்பப் பெறும் வரையில் தமிழகத்தில் தொடர் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளிக்க வேண்டும் என்றும் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.
முதல்வரை சந்தித்த காவல் ஆணையர்
முன்னதாக, தமிழக முதல்வர் பழனிசாமியுடன் சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்தித்து போராட்டத்தில் நடந்த தடியடி குறித்து விவிரித்தார்.
முதல்வருடனான சந்திப்பை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் விஸ்வநாதன், ''இந்த சூழலில் அனைவரும் அமைதி காப்பது அவசியம். சமூக வலைத்தளங்களில் தவறான பதிவுகளையும், மோதலை தூண்டும் கருத்துகளையும் பகிர வேண்டாம். தமிழகம் சட்டம்-ஒழுங்கை கடைப்பிடிக்கும் அமைதியான மாநிலம், அந்த பாரம்பரியத்தை அனைவரும் காக்க வேண்டும். சென்னையில் எந்த போராட்டங்களுக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை,''என்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: