You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
CAA Protest: வண்ணாரப்பேட்டை உட்பட பல இடங்களில் மீண்டும் தொடங்கியது போராட்டம், ட்விட்டரில் ட்ரெண்டாகும் ChennaiShaheenBagh
சென்னை வண்ணாரப்பேட்டையில் மீண்டும் தொடங்கி உள்ளது குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம்.
போராட்டத்தில் கலந்துகொண்ட இளம்பெண் ஹசீனா பேசும்போது குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுவதற்கு எல்லா பெண்களும் திரண்டு வரவேண்டும் என்றார். ''பெண்கள் சாலைகளில் இறங்கினால்தான் நியாயம் கிடைக்கும். இந்த போராட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமான போராட்டம் இல்லை. எல்லா இந்தியர்களின் நலனுக்கான போராட்டம்,''என்றார்.
பிபிசி தமிழிடம் பேசிய போராட்டக்காரர் மரியம் தனது குழந்தையுடன் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளதை பெருமையாக நினைப்பதாக கூறினார். ''என் ஆறு வயது மகளுடன் இங்கு வந்துள்ளேன். இது போன்ற போராட்டத்தை இந்த பருவத்தில் இருந்தே குழந்தைகள் தெரிந்துகொள்ளவேண்டும். இந்தியாவில் அடிப்படை உரிமைக்காக, நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதை நிரூபிக்கவேண்டும் என சட்டம் கொண்டுவருகிறார்கள், இது நியாயம் அல்ல. நேற்றைய போராட்டத்தில் பலரும் தாக்கப்பட்டார்கள். அவர்களுக்கும் நீதிகேட்டுதான் இங்கு வந்துள்ளோம்,''என்றார் அவர்.
திருப்பூர், திருவாரூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
நேற்று சென்னையில் போராட்டம் எப்படி தொடங்கியது?
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில், குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து வெள்ளிக்கிழமை பிற்பகலுக்குப் பிறகு இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டம் இரவு வரை தொடர்ந்த நிலையில், அவர்களை கலைந்துபோகும்படி காவல்துறையினர் வலியுறுத்தினர்.
இருந்தபோதும் அவர்கள் கலைந்துபோகாத நிலையில், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு காவல்துறையினர் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டனர். இதற்குப் பிறகு, அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் சிலர், கல்வீச்சில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதில் மூன்று காவலர்கள் காயமடைந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதையடுத்து காவல்துறை தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முற்பட்டது. இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. சுமார் 120க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரி, தொடர்ந்து அப்பகுதியில் போராட்டம் நடைபெற்றது.
இந்த செய்தி பரவியதும் சென்னையில் ஆலந்தூர், கிண்டி, அண்ணா சாலை, அண்ணா நகர், செங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
போலீஸாருடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இப்படியான சூழலில் நேற்று நடந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வண்ணம் மீண்டும் போராட்டம் வண்ணாரப்பேட்டை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.
ஸ்டாலின், திருமாவளவன், எச்.ராஜா- கருத்து
வண்ணாரப்பேட்டையில் நடந்த தடியடியை விமர்சித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்கள் மீது திட்டமிட்டு கடும் தாக்குதல் நடத்தி, பிப்ரவரி 14 இரவை கறுப்பு இரவாக்கிய எடப்பாடி அரசின் காவல்துறைக்குக் கண்டனத்தை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
''கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதுடன் அவர்கள் மீதான வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும். மக்கள் குரலே மகேசன் குரல் என்பதை உணர்ந்து, மக்களை உரிய முறையில் மதித்து, கண்ணியத்துடன் நடத்தக் கற்றுக் கொண்டு, ஜனநாயகப் போராட்டங்களை ஏற்று அங்கீகரிக்கும் பழக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்,'' என ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
"சென்னை வண்ணாரப்பேட்டையில் காவல்துறை அதிகாரி, முஸ்லிம் கலவரக்காரர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த காட்டுமிராண்டித்தனமான செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது" என பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜாதனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அமைதி வழியில் போராடிய இஸ்லாமியர்கள் மீது தாக்குதலுக்கு உத்தரவிட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கோரி உள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இஸ்லாமியர்களை குறிவைத்து பாசிச குடியுரிமை திருத்த சட்டத்தை (சிஏஏ) கொண்டுவந்தது பாஜக மோடி அரசு என்றால், அதன் அடிமையாக இருப்பதுடன் அடியாளாகவும் மாறி எஜமான் கட்டளைப்படி இஸ்லாமியர்களை பழிதீர்க்க தொடங்கியிருக்கிறது அதிமுக பழனிசாமி அரசு" என்று குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டரில் ட்ரெண்டாகும் #ChennaiShaheenBagh
இப்படியான சூழலில் ட்விட்டரில் ChennaiShaheenBagh என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
இந்த ஹாஷ்டேகின் கீழ் பலர் தமிழக போராட்டம் குறித்த செய்திகளை பகிர்ந்து வருகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: