You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
Anti CAA-NRC: "வண்ணாரப்பேட்டை தடியடியில் முதியவர் இறந்ததாக பரவும் புகைப்படம் பொய்" - சென்னை காவல்துறை
சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் இஸ்லாமிய முதியவர் ஒருவர் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம் உண்மையில்லை என சென்னை காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தில் கூடியிருந்த போராட்டக்காரர்களைக் கலைக்க காவல்துறையினர் நடத்திய தடியடியில், ஒருவர் இறந்துவிட்டதாக ஃபேஸ்புக் தளத்தில் பொய்யான தகவல் பரவிவருவதாகவும், அந்த தகவலில் உண்மை இல்லை என சென்னை காவல்துறை ஃபேஸ்புக்கில் மறுப்பு தெரிவித்து பதிவிட்டுள்ளது.
ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட படம் மற்றும் செய்தியை வெளியிட்டு, ''இந்தப் பெரியவர் இறந்ததற்கும், சிஏஏ போராட்டத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை,'' என காவல்துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
தடியடி மற்றும் கைது
வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் தடியடி மற்றும் கைது சம்பவம் குறித்த செய்திகள் வெளியானதை தொடர்ந்து, வெள்ளிக்கிழமை இரவு தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள், காவல்துறையுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, நள்ளிரவு சுமார் 12 மணியளவில் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தைத்தொடர்ந்து, வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தில் ஒரு முதியவர் இறந்துவிட்டதாகவும், அவருக்காக து'ஆ செய்யுங்கள் என்ற கோரிக்கையுடன் பகிரப்படும் அந்த படம் பொய்யானது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கறுப்பு இரவு
வண்ணாரப்பேட்டையில் நடந்த தடியடியை விமர்சித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்கள் மீது திட்டமிட்டு கடும் தாக்குதல் நடத்தி, பிப்ரவரி 14 இரவை கறுப்பு இரவாக்கிய எடப்பாடி அரசின் காவல்துறைக்குக் கண்டனத்தை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
''கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதுடன் அவர்கள் மீதான வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும். மக்கள் குரலே மகேசன் குரல் என்பதை உணர்ந்து, மக்களை உரிய முறையில் மதித்து, கண்ணியத்துடன் நடத்தக் கற்றுக் கொண்டு, ஜனநாயகப் போராட்டங்களை ஏற்று அங்கீகரிக்கும் பழக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்,'' என ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :