குரூப் 1 தேர்விலும் முறைகேடு நடந்ததாக மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

பட மூலாதாரம், FACEBOOK
குரூப் 2, குரூப் 4 தேர்வுகளில் மட்டுமல்லாமல் குரூப் ஒன்று தேர்விலும் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார். அதனை தமிழக அரசு மூடி மறைக்க முயல்வதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
2016ல் நடந்த குரூப் ஒன்று தேர்வில், தேர்வர் ஒருவரின் விடைத்தாள், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியானதையடுத்து இந்த விவகாரத்தை விசாரிக்க ஆரம்பித்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், பெரும் முறைகேடு நடந்திருப்பதைக் கண்டுபிடித்ததாக ஆனால், தமிழக அரசு அந்த விசாரணையை குலைத்ததாகவும் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த செங்குட்டுவன் என்ற காவல்துறை அதிகாரியின் அறிக்கையை மேற்கொள்காட்டியும் சில குற்றச்சாட்டுகளை மு.க. ஸ்டாலின் முன்வைத்திருக்கிறார். ''தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய குரூப் 1 தேர்வில் தேர்ச்சிபெற்ற மொத்த தேர்வர்களான 74 பேரில், 62 பேர் ஒரு குறிப்பிட்ட தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுள்ளனர்" என்றும் சாம் ராஜேஸ்வரன் என்பவர் தமிழ்நாடு தேர்வாணையத்தில் நடைபெறும் போட்டித் தேர்வுகளில் பல முறைகேடுகள் செய்திருப்பதாக தெரியவந்திருப்பதை காவல்துறை கண்டுபிடித்திருப்பதாகவும் செங்குட்டுவன் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதையும் சுட்டிக்காட்டியிருக்கும் தி.மு.க. தலைவர், இரண்டு பயிற்சி மையங்கள் மீது விசாரணை செல்வதை விரும்பாத தமிழக அரசு, அதுவரை விசாரணை செய்து வந்த போலீஸ் அதிகாரிகள் குழுவைக் கலைத்து விட்டதாகக் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
இதற்குப் பிறகு, புதிதாக விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரி, வெற்றிபெற்ற 74 பேரின் விடைத்தாள்களை ஆராய்ந்து பார்த்ததில் 3 விடைத்தாள்கள், ஒரே ஆளின் கையெழுத்தில் உள்ளது என்பதையும் வெற்றிபெற்ற 74 பேரில் 65 பேர் ஒரே சென்டரில் படித்துள்ளனர் என்பதையும் கண்டறிந்ததாகவும் அதற்குப் பிறகு அந்த அதிகாரியும் மாற்றப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ள மு.க. ஸ்டாலின், 2017ம் ஆண்டு சென்னை மத்தியக்குற்றப்பிரிவு விசாரித்து, சேகரித்த உண்மைகள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டுமெனக் கோரியுள்ளார்.
டிஎன்பிஎஸ்சி முறைகேடு: ஜெயக்குமாருக்கு நீதிமன்றக் காவல்
இதற்கிடையில், டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் முக்கியப் புள்ளியாகக் கருதப்பட்ட ஜெயக்குமாருக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, வியாழக்கிழமையன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்த ஜெயக்குமாரை காவல்துறையினர் டிஎன்பிஎஸ்சி வழக்கில் முறைப்படி கைதுசெய்தனர். அவரை ஒரு நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், இன்று ஜெயக்குமாரை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி நாகராஜன் முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 10 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டுமென்று காவல்துறையினர் அனுமதி கோரினர்.
ஆனால்,தான் எந்தத் தவறும் செய்யவில்லையென்றும் தன்னை போலீஸ் காவலில் அனுப்ப வேண்டாமென்றும் ஜெயக்குமார் நீதிபதியிடம் கோரினார். இதையடுத்து, வழக்கு பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பிற்பகலில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜெயக்குமாரை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதியளித்து உத்தரவிட்டார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













