புதுச்சேரி பல்கலைக்கழக துணை வேந்தரை நள்ளிரவில் சிறைபிடித்த மாணவர்கள்

புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்
படக்குறிப்பு, புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்திய மாணவர்கள் முற்றுகையிட்டதால், பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் தமது அலுவலகத்தில் இருந்து வெளியில் வர இயலாமல் முடக்கப்பட்டார்.

News image

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 6000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் படிப்படியாக உயர்த்தப்பட்டு வந்த நிலையில், கடந்த 2019ம் ஆண்டு மாணவர் சேர்க்கையில் கல்வி கட்டணம் மேலும் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டது.

பல்கலைக்கழகத்திற்கு வரும் உள்ளூர் மாணவர்களுக்கான இலவச பேருந்து சேவை கடந்த ஆண்டு முன்பு வரை செய்யப்பட்டு வந்த நிலையில், 2019-20ஆம் கல்வி ஆ‌ண்டு முதல் பல்கலைக்கழக பேருந்தில் பயணம் செய்ய ஆண்டிற்கு 8000 ரூபாய் கட்டணம் நிர்ணயித்து பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டது.

இந்த இரு கட்டணங்களையும் திரும்பபெற வலியுறுத்தியும், புதுச்சேரி மாநிலத்தை சார்ந்த மாணவர்களுக்கு அனைத்து துறைகளிலும் மாணவர் சேர்க்கையில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் மாணவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள்
படக்குறிப்பு, புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

இதுதொடர்பாக, புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர் பேரவை அமைப்பின் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த துணைவேந்தர் அழைப்புவிடுத்தார். அதனை தொடர்ந்து துணை வேந்தருடன் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால் மாணவர்கள் துணை வேந்தர் அலுவலகத்தை, வியாழன் - வெள்ளி கிழமைகளுக்கு இடைப்பட்ட இரவில் முற்றுகையிட்டு அவரை வெளியே செல்ல விடாமல் நான்கு மணிநேரத்துக்கும் மேலாக அறையிலே முடக்கப்பட்டார்.

துணைவேந்தரை வெளியே அழைத்து செல்ல நள்ளிரவில் 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் வரவழைக்கப்பட்டனர். பின்னர் பலத்த காவல் துறையினர் பாதுகாப்புடன் துணைவேந்தர் குர்மீத் சிங் வெளியே அழைத்து செல்லப்பட்டார்.

பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர்.

புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள்
படக்குறிப்பு, புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர் பேரவை தலைவர் பரிட்சே யாதவ் மாணவர்களின் கோரிக்கை குறித்து கூறுகையில், "எங்களது கோரிக்கைகளை பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தெரிவித்தோம். எங்களது கோரிக்கையை பரிசீலனை செய்வதாக துணைவேந்தர் தெரிவித்தார்."

"ஆனால், எழுத்துபூர்வமாக உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டதற்கு மறுத்து விட்டார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இதே போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக நிர்வாகத்தை எதிர்த்து மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டோம். அந்த சமயம் துணைவேந்தர் இதேபோன்று எங்களது கோரிக்கையை பரிசீலனை செய்வதாக தெரிவித்தார். ஆனால், இன்றுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. "

"அதை தொடர்ந்து இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அதே பதிலை துணைவேந்தர் எங்களிடம் தெரிவித்ததால் அதை நாங்கள் ஏற்க மறுத்துவிட்டோம். பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக எங்களது போராட்டம் வரும் நாட்களில் தொடரும். மேலும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு குறித்து போராடிவரும் புதுச்சேரி மாணவர்களை ஆதரிக்கிறோம்," என தெரிவித்தார்.

புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள்
படக்குறிப்பு, புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

புதுச்சேரி மாநிலத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் 25% இட ஒதுக்கீடு குறித்து புதுச்சேரியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் உதயசூரியன் கூறுகையில், "புதுச்சேரி பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் புதுவையைச் சேர்ந்த மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடானது கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் நாளடைவில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு பெரிதும் பயன் தரக்கூடிய மிக முக்கியமான துறைகளில் 25% இட ஒதுக்கீடு கொடுக்கப்படவில்லை."

"இதனால் புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் தாங்கள் விரும்பும் முக்கிய பாட திட்டங்களை தேர்வு செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள தமிழக பகுதியைச் சார்ந்த மாணவர்கள் இங்கே மத்திய பல்கலைக்கழகம் இருந்தும், உள்ளூர் மாணவர்கள் இங்கே படிக்க முடியாமல் வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது," என தெரிவித்தார்.

University protest
படக்குறிப்பு, புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

மாணவர்களின் கோரிக்கை குறித்து புதுச்சேரி பல்கலைகழக நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, உயர்த்தப்பட்ட கல்வி கட்டணத்தை குறைப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும், உள்ளூர் மாணவர்கள் பயணம் செய்யும் பல்கலைக்கழக பேருந்தின் கட்டணம் குறைக்கப்படும் என்றும், மேலும் புதுச்சேரி மாநில மாணவர்களுக்கான 25% இட ஒதுக்கீடு என்பது சாத்தியமில்லாத ஒன்று எனவும், இதுபோன்ற நடைமுறை இந்தியாவில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இல்லை என்பதால் 25% இட ஒதுக்கீட்டை புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அனுமதிக்க முடியாது என மறுத்துவிட்டதாகவும் பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: