குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம்: புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் - ஏபிவிபி அமைப்பினர் இடையே மோதல்

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடத்திய போராட்டத்தின் போது, ஏபிவிபி மாணவ அமைப்பினர் குறுக்கிட்டதால் இரு தரப்பினருக்கும் இடையே பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியதைத் தொடர்ந்து, நாடு முழுவதம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்களும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பல்வேறு போரட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பல்கலைக்கழக வளாகத்தில் போராட ஒன்று கூடினர். காஷ்மீர் மாநிலத்தில் சட்டப்பிரிவு 370ஐ நீக்கி மத்திய அரசு சட்டம் இயற்றியதைத் தொடர்ந்து மக்களுக்கு கருத்து சுதந்திரம் மறுக்கப்படுவதாக கூறி தனது பதவியை ராஜினாமா செய்த கண்ணன் கோபிநாதன், ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவி ஆயிஷா ரென்னா, டெல்லி பல்கலைக்கழக மாணவி ரனியா ஜூலைக்கா ஆகியோரும் இந்த போராட்டத்தில் பங்குபெற்றனர்.
”விழிப்புணர்வு ஏற்படுத்துவதே போராட்டம்”
போராட்டத்தின் போது மாணவர்களிடையே பேசிய கண்ணன் கோபிநாதன், "பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவற்றால் பல இழப்புகளை சந்தித்து வருகிறோம். அரசுக்கு எதிராக கேள்வி கேட்பவர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். உங்களால் தேர்ந்தெடுக்கும் அரசை குழந்தை போல் பாவிக்க கூடாது. கேள்வி கேளுங்கள், அது தான் ஜனநாயகம்" என்றார்.

மேலும், "போராட்டம் என்பது போராடுவது அல்ல. அது விழிப்புணர்வு ஏற்படுத்துவது. எதற்காக போராடுகிறோம் என்று அறிந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். ஆளும் அரசு என்ன செய்கிறோம் என்று அறியாமல் செய்து கொண்டு வருகின்றது," என மாணவர்களிடையே உரையாற்றினார் கண்ணன் கோபிநாதன்.
அவர் தனது உரையை முடித்தவுடன் அங்கு வந்த ஏபிவிபி மாணவ அமைப்பினர் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடிய மாணவர்களை நோக்கி எதிர் கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் குறைந்த அளவிலேயே இருந்த காவல்துறையினர் அவர்களை கட்டுப்படுத்த முயன்றனர். அதே நேரத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான மாணவர்கள் மேளம் தட்டி ஏபிவிபி அமைப்பினருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து இரு தரப்பினரும் கோஷங்கள் மூலம் தங்களது உணர்வை வெளிப்படுத்தி விட்டு கலைந்து சென்றனர்.
”போராட்டத்தை ஊக்குவிப்பதற்காக வந்துள்ளோம்”
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் பங்கேற்ற ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவி ஆயிஷா ரென்னா கூறுகையில், "நாங்கள் இங்கே குடியுரிமை திருத்தச் சட்டம் எதிராக நடக்கும் போராட்டத்தை ஊக்குவிப்பதற்காக வந்துள்ளோம். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் டெல்லியை மட்டும் மையமாக கொண்டு இல்லாமல் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சென்றடைய வேண்டும்.

இன்று நடைபெற்ற போராட்டத்தின் இடையே ஏபிவிபி மாணவ அமைப்பினர் இடையூறு செய்தனர். மேலும், எங்களை பல்கலைக்கழகத்திற்கு உள்ளே அனுமதிக்கவிடாமல் செய்தனர். அவர்கள் இதுபோன்று செய்ததால் இன்று நடைபெற்ற எங்கள் போராட்டம் மேலும் வெற்றி அடைய காரணமாக அமைந்துள்ளது. இவர்கள் அனைவருக்கும் தந்தையாக அமித் ஷா விளங்குகிறார்.
அவர் மூலம்தான் டெல்லி அலிகர் பல்கலைக்கழகத்திலும், ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்திலும் வன்முறை நிகழ்த்தப்பட்டது. வரும் ஜனவரி 30ஆம் தேதி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேரணி நடத்த உள்ளோம் இந்த பேரணியில் பங்கேற்க நாடு முழுவதிலிருந்தும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரானவர்களை அழைத்துள்ளோம்," என தெரிவித்தார்.
ஏபிவிபி என்ன கூறுகிறது?
பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ஏபிவிபி மாணவர் அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் திலீபன் கூறுகையில், "புதுச்சேரி பல்கலைக்கழகம் அல்லாத வெளியிலிருந்து மூன்று நபர்கள் பல்கலைக்கழக அனுமதி இல்லாமல், புதுச்சேரி அரசாங்கத்தின் துணையோடும், இந்த பகுதியை சேர்ந்த காவல் துறையினர் துணையோடு வெளியாட்களை பல்கலைகழத்தின் உள்ளே கொண்டுவந்து இந்த போராட்டத்தை புதுச்சேரி அரசாங்கம் நிகழ்த்தியுள்ளது. இதனால் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள அமைதியான சூழலை கெடுத்து ஜாமியா, டெல்லி பல்கலைக்கழகம் போன்ற பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்த சதி திட்டமாகவே இதனை பார்க்கிறோம். இதை ஏபிவிபி வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இதற்கு எதிராக வரும் நாட்களில் கடுமையான போராட்டம் மேற்கொள்ளப்படும்," என தெரிவித்தார்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













