தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் மதுபானங்களின் விலை உயர்வு

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி - டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை உயர்வு

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை இன்று, வெள்ளிக்கிழமை, முதல் உயர்கிறது என்று தினத்தந்தி செய்தி தெரிவிக்கிறது.

தமிழகம் முழுவதும் 5,300 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இந்த கடைகளை தமிழ்நாடு வாணிப கழகம் (டாஸ்மாக்) நடத்தி வருகிறது. அரசின் வருவாயில் மதுபான விற்பனை முக்கிய பங்கு வகிக்கிறது. திருவிழா, பண்டிகை காலங்களில் டாஸ்மாக் மது விற்பனை சினிமா படங்களின் வசூலையும் விஞ்சி சாதனை படைப்பது உண்டு.

குவார்ட்டர் தற்போது விற்கும் விலையுடன் கூடுதலாக ரூ.10-ம், ஆஃப் ரூ.20-ம், ஃபுல் ரூ.40-ம் கூடியுள்ளது.

பீர் பாட்டிலும் தற்போது விற்கும் விலையுடன் கூடுதலாக ரூ.10 கொடுத்து மது பிரியர்கள் வாங்க வேண்டும். மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டதன் மூலம் அரசுக்கு ஆண்டிற்கு வருவாயாக கூடுதலாக ரூ.2,200 கோடி கிடைக்கும்.

கடந்த ஆண்டு டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு 31,500 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த பொங்கல் பண்டிகை தினங்களில் மட்டும் மதுபான விற்பனை மூலம் தமிழக அரசுக்கு ரூ.606 கோடி வருவாய் கிடைத்தது. இது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகமாகும். புத்தாண்டில் தமிழகம் முழுவதும் மது விற்பனை மூலம் ரூ.315 கோடி வருவாய் ஈட்டப்பட்டது என்கிறது அந்த செய்தி.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - 'விஜயின் அரசியல் ஆசையால் வருமானவரி சோதனை'

நடிகர் விஜய்க்கு அரசியல் ஆசைகள் இருப்பதால் அவரை அச்சுறுத்தும் நோக்கிலேயே வருமான வரித்துறை சோதனைகள் நடத்தப்பட்டிருக்கலாம் என்று நாம் தமிழர் கட்சின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார் என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி.

நடிகர் ரஜினிகாந்தின் பெயரை குறிப்பிடாமல் அவரை விமர்சித்த சீமான், "ஜி.எஸ்.டி இல்லாமல் 126 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார் ஒரு நடிகர். அவரது இடங்களில் ஏன் வருமான வரித்துறை சோதனை செய்யவில்லை," என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனிடையே நடிகர் விஜய் மற்றும் திரைப்பட ஃபைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரது இடங்களில் இரண்டு நாட்களாக வருமான வரித்துறை நடத்திய சோதனையில் விஜய்க்கு சொந்தமான இடங்களில் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் இன்னொரு செய்தி தெரிவிக்கிறது.

அந்தச் செய்தியின்படி கணக்கில் வராத 77 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. அது அன்புச்செழியனுக்கு சொந்தமான பணம் என்று கூறப்படுகிறது.

எனினும் இருவரது முதலீடுகள் மற்றும் சொத்துகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்து தமிழ் திசை - 'அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனால் குனிய முடியவில்லை'

வயது முதிர்வின் காரணமாக தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனால் குனிய முடியவில்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகள் புத்துணர்வு முகாமை துவக்கி வைக்க சென்ற அமைச்சர் சீனிவாசன் பழங்குடியின சிறுவனை தனது காலில் இருந்த செருப்பைக் கழற்றி விடுமாறு அறிவுறுத்தியது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "அவருக்கு வயது 70-க்கு மேலாகிவிட்டது. செடி, கொடிகள் அவருடைய காலில் சிக்கிக்கொண்டன. வயது முதிர்வின் காரணமாக அவரால் குனிய முடியவில்லை. அதனால், சிறுவனை அழைத்து அதனை அகற்றச் சொல்லியிருக்கிறார். அதில் உள்நோக்கம் எதுதும் கிடையாது. முதுமையில் எல்லோருக்கும் வரும் சிரமங்கள்தான் அவருக்கும் வந்திருக்கிறது. அதனைப் பெரிதுபடுத்த வேண்டாம்" எனத் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: