You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கேரளா திருச்சூர் : வீட்டு குழாயில் மதுபானம் சப்ளை- என்ன காரணம் தெரியுமா?
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி இந்தி சேவைக்காக
கலகலப்பு திரைப்படத்தில் சந்தானம் உள்ளாட்சித் தேர்தலில் வெல்வதற்காகக் குழாய் மூலமாக சாராயம் வழங்குவது போல ஒரு காட்சி வரும். இப்போது அந்தக் காட்சி கேரளாவில் நிஜமாகி உள்ளது.
தேர்தல் வெற்றிக்காகவெல்லாம் மதுபானம் வழங்கப்படவில்லை, அரசு அதிகாரிகளின் அஜாக்கிரதையால் வீட்டுக் குழாய்களில் மதுபானம் வந்திருக்கிறது.
என்ன நடந்தது?
கடத்தப்பட்ட அல்லது பதுக்கப்பட்ட மதுபான பாட்டில்களை கலால்துறை கைபற்றி வைத்திருக்கும் அல்லவா? அது போல திருச்சூர் மாவட்டம் சாலக்குடி அருகே உள்ள மதுபான விடுதியில் கைப்பற்றப்பட்ட மதுபானங்களை அப்புறப்படுத்த முடிவு செய்திருக்கிறார்கள்.
ஏறத்தாழ 6000 லிட்டர் பியர், பிராந்தி மற்றும் ரம் ஆகியவற்றை அப்புறப்படுத்த முடிவு செய்த அவர்கள் அதே பகுதியில் உள்ள ஓர் இடத்தில் குழி தோண்டி மொத்த மதுபானங்களையும் கொட்டி இருக்கிறார்கள்.
இது அங்கு பதிக்கப்பட்டிருந்த குடிநீர் பைப்லைனில் கலந்திருக்கிறது. அங்குள்ள வீடுகளில் உள்ளவர்கள் குடிநீருக்காக வீட்டுக் குழாயைத் திறக்கும் காக்டையிலாக மதுபானம் வந்திருக்கிறது.
அங்குள்ள சாலமன் குடியிருப்பில் வசிக்கும் ஜோஷி, "திங்கட்கிழமை காலை வீட்டு அடுப்படியில் உள்ள தண்ணீர் குழாயைத் திறக்கும் போது, பழுப்பு நிறத்தில் தண்ணீர் வந்தது. நுகர்ந்து பார்த்தால் மதுபான வாசனை அடித்தது," என்று பிபிசியிடம் தெரிவித்தார்.
இதன் காரணமாக அன்று மாணவர்கள் பள்ளிக்கோ, பெற்றோர்கள் வேலைக்கோ செல்ல முடியவில்லை என்று கூறுகிறார் அவர்.
இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசிகள் காவல்துறையிடமும், நகராட்சி நிர்வாகத்திடமும் புகார் அளித்திருக்கிறார்கள்.
கலால்துறை
தமது தவறை உணர்ந்த கலால்துறையினர் அந்த பகுதி குடியிருப்புவாசிகளுக்குத் தற்காலிகமாகக் குடிநீர் வழங்கி இருக்கிறார்கள்.
இதற்கு மத்தியில் அந்த பகுதிக்கு குடிநீர் வழங்கும் கிணறும் இதன் காரணமாக மாசடைந்திருக்கிறது.
இது தொடர்பாக விளக்கம் பெற கலால் துறையைத் தொடர்பு கொண்டோம். ஆனால், அவர்கள் பதிலளிக்கவில்லை.
பெயர் குறிப்பிடாத ஓர் அதிகாரி, "வழக்கமாக இவ்வாறாகக் கைப்பற்றப்படும் மதுபான பாட்டில்களை எரித்துவிடுவோம். மாசு ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான் இவ்வாறு குழி வெட்டி புதைத்திருக்கிறார்கள்," என்றார்.
இது குறித்து முறைப்படி புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒரு காவல்துறை அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: