தமிழக அரசியல்: 'முறைகேடுகளுக்கு ஒத்துழைக்க மறுத்ததால் அரசு செயலர் மாற்றம்' - மு.க. ஸ்டாலின்

ஸ்டாலின்

பட மூலாதாரம், facebook

டெண்டர் முறைகேடுகளுக்கு ஒத்துழைக்க மறுத்ததால், தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலர் மாற்றப்பட்டதாக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இது தொடர்பாக லஞ்ச ஊழல் தடுப்புத் துறை விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்றும் அவர் கோரியிருக்கிறார்.

News image

தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் முதன்மைச் செயலராக இருந்த டாக்டர் சந்தோஷ் பாபு, திங்கட்கிழமை இரவு தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் - நிர்வாக இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

அதேபோல தமிழ்நாடு பைபர் நெட் கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குநராக இருந்த எம்.எஸ். சண்முகம் அருங்காட்சியங்களின் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், தமிழ்நாடு ஃபைபர் நெட் கார்ப்பரேஷன் மூலமாக உள்ளாட்சி அமைப்புகளை அதிவேக அலைக்கற்றை மூலம் இணைக்கும் சுமார் 2,400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு டெண்டர் விடுவதில் முறைகேடு நடந்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானதாகவும், ஐ.டி. துறையின் முதன்மைச் செயலரான சந்தோஷ் பாபு விருப்ப ஓய்வில் செல்ல விண்ணப்பித்ததாக செய்தி வெளியானதாகவும் மு.க. ஸ்டாலின் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இந்த ஊடகச் செய்திகள், அரசியல் கட்சிகளின் அறிக்கைக்குப் பிறகும் மாநில அரசிடமிருந்து பதிலோ, மறுப்போ வரவில்லையென சுட்டிக்காட்டியிருக்கும் மு.க. ஸ்டாலின், இளைய ஐஏஎஸ் அதிகாரியான டி. ரவிச்சந்திரனை தமிழ்நாடு ஃபைபர் நெட் கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குநராக நியமித்திருப்பது குறித்தும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

"2400 கோடி ரூபாய் மதிப்புள்ள மிக முக்கியமான பாரத் நெட் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு இந்த அரசில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் யாருமே கிடைக்கவில்லையா? மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை - அதிமுக அரசின் ஊழலுக்கு ஒத்துவராமல் ஒதுங்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை எல்லாம் "டம்மி"பதவிகளுக்கு மாற்றி, அரசு நிர்வாகத்தை அடியோடு சீர்குலைத்துத் தரைமட்டமாக்க தலைமைச் செயலாளர் எப்படி அனுமதிக்கிறார்?" என்றும் மு.க. ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்த நிலையில், இத்திட்டத்தின் டெண்டர், அது தொடர்பான கோப்புகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் தொடர்பான கோப்புகள் அனைத்தையும் உடனடியாக கைப்பற்றி, லஞ்ச ஊழல் தடுப்புத்துறை தீவிர விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று தனது அறிக்கையில் கோரியுள்ளார் தி.மு.க. தலைவர்.

ஐ.டி. துறையின் முதன்மைச் செயலராக இருந்த டாக்டர் சந்தோஷ் பாபு, விருப்ப ஓய்வில் செல்ல விண்ணப்பித்ததாக சில நாட்களுக்கு முன்பாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. ஆனால், இதனை சம்பந்தப்பட்ட அதிகாரியோ, மாநில அரசோ உறுதிப்படுத்தவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: