நிர்பயா பாலியல் வல்லுறவு, கொலை குற்றவாளிகளின் கடைசி ஆசை என்ன? - விசாரிக்கும் சிறை அதிகாரிகள்

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி: நிர்பயா கொலை குற்றவாளிகளின் கடைசி ஆசை
பிப்ரவரி 1-ம் தேதி தூக்கில் போடப்பட இருக்கும் நிர்பயா கொலை குற்றவாளிகள் நான்கு பேரிடமும், அவர்களுடைய கடைசி ஆசை என்ன என்று திகார் சிறை அதிகாரிகள் கேட்டு உள்ளனர். ஆனால் அவர்கள் இதுவரை பதில் அளிக்கவில்லை என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
பொதுவாக தூக்கு தண்டனையை எதிர்நோக்கி காத்திருக்கும் குற்றவாளிகளிடம், அவர்களுடைய கடைசி ஆசை என்ன என்று கேட்கப்படுவது வழக்கம். அதன்படி முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் குமார் சிங் ஆகிய நான்கு பேரிடமும், அவர்களுடைய கடைசி ஆசை என்ன என்பதை தெரிவிக்குமாறு திகார் சிறை அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
"தூக்கிலிடப்படுவதற்கு முன்பு அவர்களுடைய கடைசி ஆசை என்ன என்பதை எழுத்துபூர்வமாக பட்டியலிடுமாறு கேட்டு இருக்கிறோம். மேலும் உறவினர்களில் யாரையாவது சந்திக்க விரும்புகிறீர்களா, உங்களது உடைமைகளை யாரிடம் ஒப்படைக்க விரும்புகிறீர்கள், என்பது பற்றியும் கேட்டு இருக்கிறோம். ஆனால் அவர்களில் யாரும் இதுவரை பதில் அளிக்கவில்லை. அவர்களுடைய பதிலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்" என சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், "கடைசி ஆசை என்ன என்பதை அவர்கள் தெரிவிக்கும் பட்சத்தில், அதை நிறைவேற்ற முடிந்தால் அதுபற்றி சிறை அதிகாரிகள் முடிவு செய்வார்கள்" என்றும் அவர் கூறினார்.

தினமணி: 7 போ் விடுதலை - ஸ்டாலின் அறிக்கை
பேரறிவாளன் உள்ளிட்ட 7 போ் விடுதலை தொடா்பாக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வா் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா் என்கிறது தினமணி செய்தி.

பட மூலாதாரம், MK Stalin / Facebook
பேரறிவாளன் விடுதலை தொடா்பாக அரசியல் சட்டப் பிரிவு 161-ன் கீழ் தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமாா், ராபா்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரின் விடுதலையில் புதிய திருப்பமாக உச்சநீதிமன்றமே தலையிட்டிருப்பதால், ஆக்கப்பூா்வமான விளைவை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை மனதில் தோன்றி மகிழ்ச்சி தருகிறது.
தமிழக சட்டப்பேரவையில் 7 போ் விடுதலை குறித்து நிறைவேற்றிய தீா்மானத்தை மத்திய பாஜக அரசு மதிக்கவில்லை. தற்போது ஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பின் அடிப்படையில் தமிழக அமைச்சரவை இந்த 7 பேரையும் விடுதலை செய்ய நிறைவேற்றிய தீா்மானத்தின் மீது 15 மாதங்களுக்கு மேல் தமிழக ஆளுநா் நடவடிக்கை எடுக்காமல் நிலுவையில் வைத்திருப்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது.
இந்தச் சூழ்நிலையில், உச்சநீதிமன்றம் தற்போது பிறப்பித்துள்ள உத்தரவை தக்கபடி பயன்படுத்திக் கொண்டு, அமைச்சரவை நிறைவேற்றிய தீா்மானம், அதனை ஆளுநா் எத்தனை மாதங்களாகக் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறாா், ஆளுநா் அலுவலகத்துக்கு இந்தத் தீா்மானத்துக்கு ஒப்புதல் வழங்கக் கோரி அமைச்சரவை எடுத்த தொடா் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த முழு விவரங்களையும் உச்சநீதிமன்றத்துக்குத் தாமதமின்றி தெரிவித்திட வேண்டும் என்று அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - பொள்ளாச்சி வழக்கு
பொள்ளாச்சியில் பெண்கள் மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் தாக்கப்பட்ட வழக்கை முடித்து வைக்கவேண்டும் என்று சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது என தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
எனினும் இளம் பெண்களை மிரட்டி, படம் பிடித்து வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட நபர்கள் மீதான வழக்கு தொடரும்.
புகார் அளித்த பெண்ணின் சகோதரரைத் தாக்கியதாக கைதான நால்வர் கோவை மத்திய சிறையிலும், பாலியல் தாக்குதல் நடத்தியதாக கைதான ஐவர் சேலம் மத்திய சிறையிலும் உள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













