'பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை குறித்து என்ன முடிவு செய்தீர்கள்?' - உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலை குறித்து தமிழக அரசு என்ன முடிவு செய்தது என்று இரண்டு வாரங்களில் பதிலளிக்க இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ் கொலையில், பயன்படுத்தப்பட்ட பெல்ட் குண்டுகள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை குறித்த வழக்கு, இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
நீதிபதி எல்.நாகேஸ்வர் ராவ் மற்றும் நீதிபதி தீபக் குப்தா ஆகியோரைக் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
பேரறிவாளன் உள்ளிட்டோர் தொடர்புபடுத்தப்பட்டுள்ள, ராஜீவ் காந்தி கொலையில் பெல்ட் வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டது குறித்த விசாரணையின் நிலவர அறிக்கையை, கடந்த ஜனவரி 14ஆம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது மத்திய அரசு.
இந்த அறிக்கைக்கும், முன்பு சமர்பிக்கப்பட்ட அறிக்கைக்கும் எந்த விதமான வித்தியாசத்தையும் காணமுடியவில்லை என்ற அதிருப்தியையும் முந்தைய விசாரணையின்போது நீதிபதிகள் வெளிப்படுத்தியிருந்தனர்.
புதிய நிலவர அறிக்கையை இந்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என அப்போது மத்திய அரசை நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
கடந்த இரண்டு ஆண்டுகளில் வழக்கின் விசாரணையில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை அறிய நாங்கள் விரும்புகிறோம் என்று நீதிபதி நாகேஸ்வர் ராவ் கூறியிருந்தார்.
இன்று, புதிய நிலவர அறிக்கை குறித்து விசாரித்த நீதிபதிகள், இந்த அறிக்கை, பேரரிவாளன் தரப்பால் பார்க்கப்பட்டதா என்றும் விசாரித்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், குற்றம்சாட்டப்பட்ட பேரரிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு என்ன முடிவு செய்துள்ளது என்பதற்கான பதிலை இரு வாரங்களில் தெரிவிக்குமாறு கூறி, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













