தமிழகத்துக்கு மத்திய அரசு தரும் நிதி குறைவதாக ஆளுநர் உரையில் புகார்; திமுக வெளிநடப்பு

ஸ்டாலின்

பட மூலாதாரம், Getty Images

ஆளுநர் பன்வாரி லால் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்புச் செய்துள்ளன.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் துவங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்தவுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது உரையைத் துவங்கினார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.

"இந்த சபை விவாதத்திற்கானது. உங்களைப் பற்றி நான் முழுமையாக அறிவேன். நீங்கள் மிகச் சிறந்த பேச்சாளர். இந்த சபை விவாதத்திற்கானது. நான் பேசி முடித்த பிறகு விவாதிக்கலாம்" என்று ஆளுநர் கூறினார்.

தொடர்ந்து எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தபோதும், ஆளுநர் தொடர்ந்து தன் உரையை வாசிக்க ஆரம்பித்தார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உரையில் பின்வரும் அம்சங்கள் இடம்பெற்றிருந்தன: ஜெயலலிதா போட்டு வைத்த பாதையில் தமிழகம் தொடர்ந்து நடந்துவருகிறது. சிறந்த ஆட்சிக்கான தரவரிசைப் பட்டியலில் 18 மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.

ஸ்டாலின்

பட மூலாதாரம், M.K.Stalin

2011ஆம் ஆண்டிலிருந்து 105 முக்கிய அறிவிப்புகள் செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றில் 73 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. மற்ற அறிவிப்புகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2017 பிப்ரவரியில் இருந்து முதலமைச்சர் 453 அறிவிப்புகள் 110வது விதியின் கீழ் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் 140 அறிவிப்புகள் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளன.

பல தடைகளுக்கு மத்தியிலும் 27 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. விரைவில் நகர்ப்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலும் நடக்கவிருக்கிறது.

சட்டம் ஒழுங்கு மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டுவருகிறது. நீதித் துறையைப் பொறுத்தவரை தமிழகம் இந்தியாவிலேயே சிறப்பாகச் செயல்பட்டுவருவதாக சிறந்த ஆட்சிக்கான தரவரிசைப் பட்டியல் கூறுகிறது.

மத்திய அரசு வழங்கும் நிதி குறைகிறது...

தமிழ்நாட்டில் நிதி மேலாண்மை சிறப்பாகச் செய்யப்பட்டுவருகிறது. மத்தியிலிருந்து தமிழகத்திற்கு அளிக்கப்படும் நிதியின் அளவு குறைந்து வருகிறது. 14வது நிதி கமிஷன் பரிந்துரைகள், மத்தியிலிருந்து மாநிலத்திற்கு கூடுதலாக நிதி அளிக்க பரிந்துரைப்பதாக ஒரு தோற்றம் இருந்தாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது அளவு குறைந்துள்ளது. 14வது நிதி கமிஷனின் நிதி பகிர்வு முறையினாலும் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தமிழகம் 7096 கோடி ரூபாயை ஜிஎஸ்டி வரி பகிர்வில் ஏற்படும் இழப்பிற்காக பெற்றுள்ளது. மத்திய அரசின் மானியமாக 17,957 கோடி ரூபாய் இந்த ஆண்டு பெறப்பட்டுள்ளது. இருந்தபோதும் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதி இன்னும் பாக்கியிருக்கிறது. 2017-18ல் முதல் முறையாக ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டபோது, பிரிக்கப்படாத ஜிஎஸ்டி வரியில் 50 சதவீதத்தை மாநிலத்திற்கு கொடுப்பதற்குப் பதிலாக, மொத்தமாக மத்திய அரசு எடுத்துக்கொண்டது. இப்படியாக, 88,340.22 கோடி ரூபாய் மத்திய அரசின் வரியாகச் சென்றது. இதில் 42 சதவீதமே மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.

தமிழ்நாடு அதிமுக

பட மூலாதாரம், Getty Images

14வது நிதிக் கமிஷனின் பகிர்வு முறையால் தமிழ்நாட்டிற்கு 4073 கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்கு இழப்பு ஏற்பட்டது. இந்தத் தொகையை தமிழக அரசு உடனடியாக அளிக்க வேண்டுமென கோருகிறோம். தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய பல்வேறு நிதிகளை உடனடியாக அளிக்க வேண்டுமென மத்திய அரசைக் கோருகிறோம்.

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு கட்டத் திட்டமிட்டிருக்கும் மேகதாது அணைக்காக விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு உடனடியாக நிராகரிக்க வேண்டும். தமிழக அரசின் முன் அனுமதியின்றி கர்நாடக அரசு எவ்விதமான கட்டுமானப் பணிகளையும் காவிரியின் குறுக்கே மேற்கொள்ள அனுமதிக்கக்கூடாது.

பெண்ணையாறு வடிநிலப் பகுதியில் மார்க்கண்டேயா நதியின் குறுக்கே ஒரு அணையைக் கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுவருகிறது. 2012லேயே இதனை எதிர்த்து அப்போதைய முதல்வர் ஜெயலிலதா கர்நாடக அரசுக்குக் கடிதம் எழுதினார். மேலும், இது தொடர்பாக ஒரு நடுவர் மன்றத்தை அமைக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. இதில் தீர்வு ஏற்படும்வரை, தமிழக அரசின் அனுமதியின்றி கர்நாடக அரசு பெண்ணையாற்றின் குறுக்கே எவ்வித கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது.

இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வலியுறுத்தல்

பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் தொடர்பாக, அதிகாரிகள் மட்டத்திலான தொடர் பேச்சுவார்த்தைகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் நீர் மட்டத்தை 152 அடி உயரத்திற்குத் தேக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆகவே அணையைப் பலப்படுத்தும் பணிகளுக்காக 7.85 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக்கொள்கிறது. இங்கு வாழும் எல்லா மதத்தைச் சேர்ந்த மக்களையும் தமிழக அரசு பாதுகாக்கிறது.

பாக் நீரிணை பகுதியில் இலங்கைக் கடற்படையினரால், தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்பட்டு, படகுகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள் 2018-19ல் வெகுவாகக் குறைந்துள்ளன. இப்போது 17 மீனவர்கள் மட்டுமே இலங்கை வசம் உள்ளனர். அவர்களையும் விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

புதிதாக ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்பட்டிருப்பது அரசு நிர்வாகத்தை மக்களிடம் மேலும் நெருக்கமாக்க கொண்டுசெல்லும். தமிழை வளர்க்க தமிழக அரசு தொடர்ச்சியாக பல முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. நவம்பர் 1ஆம் தேதி தமிழக தினமாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சிகாகோவில் நடந்த பத்தாவது தமிழ் ஆய்வு மாநாட்டிற்கும் ஹூஸ்டனில் அமைக்கப்பட்டுவரும் தமிழ் இருக்கைக்கும் தமிழக அரசு நிதி உதவி செய்துள்ளது.

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரைக்கு அருகில் உள்ள காந்தி கிராம பல்கலைக்கழகத்தை கிராமப்புற கல்வி, காந்தியக் கல்விக்கான ஒப்புயர்வு பல்கலைக்கழகமாக தரமுயர்த்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. திருச்செங்கோட்டில் உள்ள காந்தி ஆசிரமத்திற்கு புத்துயிர் அளிக்க தமிழக அரசு முயற்சிகளை மேற்கொள்ளும்.

மூக்கையூரில் 120 கோடி ரூபாயிலும் குந்துக்கல்லில் 100 கோடி ரூபாய் செலவிலும் அமைக்கப்பட்டுவரும் மீன் பிடித் துறைமுகம் முடிவடையும் தருவாயில் உள்ளது. மேலும் திருவொற்றியூர் குப்பம், தரங்கம்பாடி, முதுநகர் ஆகிய இடங்களில் 420 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன் பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படவிருக்கின்றன.

மெட்ரோ

பட மூலாதாரம், Getty Images

சென்னை மெட்ரோ ரயில் சேவையைப் பொறுத்தவரை, திருவொற்றியூர் - விம்கோ நகர் இடையிலான பணிகள் 2020ஆம் ஆண்டின் மத்தியில் நிறைவடையும். மேலும் சென்னை விமான நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் அமையவிருக்கும் கிளாம்பாக்கம் வரையிலான 15 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோவை நீட்டிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. தாம்பரம் - வேளச்சேரி வழித்தடத்தில் நெரிசலைக் குறைக்க புதிய ரயில் வழித்தடத்தை அமைப்பது குறித்து அரசு ஆராயும்".

ஆளுநர் உரையைப் புறக்கணித்து வெளிநடப்புச் செய்த தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழகத்தின் கடன் நான்கு லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. தொழில் வளர்ச்சி கிடையாது. புதிய வேலை வாய்ப்புகளும் இல்லை. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று இப்பொழுது இருக்கக்கூடிய அமைச்சரவை தீர்மானம் போட்டு இதே ஆளுநருக்கு அனுப்பி வைத்திருக்கிறது. இதுவரையில் இவர்கள் இடத்திலிருந்து எந்த செய்தியும் வரவில்லை.

இந்த நாட்டினுடைய மதச்சார்பின்மைக்கும் அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கக் கூடிய வகையில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்து இருக்கக்கூடிய நேரத்தில், அ.தி.மு.க. அதை ஆதரித்து இருக்கிறது.

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தேர்தல் ஆணையமும் காவல்துறையும் அரசு நிர்வாகமும் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்துக்கொண்டு ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பட்டவர்த்தனமாக செயல்பட்டிருக்கிறது. இந்த உரை ஆளும் கட்சியால் தயாரிக்கப்பட்டிருக்கக்கூடிய உரை என்பதால் ஆளுநர் உரையை நாங்கள் புறக்கணிக்கிறோம்" என்றார்.

மனித நேய ஜனநாயகக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான தமீமுன் அன்சாரி, ஐயுஎம்எல் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான அபுபக்கர் ஆகியோர் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கறுப்பு உடை அணிந்து அவைக்கு வந்திருந்தனர். பிறகு இவர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், டிடிவி தினகரன் ஆகியோரும் அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: