நாம் தமிழர் கட்சி: தமிழக உள்ளாட்சித் தேர்தல் மூலம் முதல் அரசியல் வெற்றி

சீமான்

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தின் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி ஒன்றை வென்றுள்ளதன் மூலம் தேர்தல் அரசியலில் முதல் வெற்றியை பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி.

அக்கட்சியை சேர்ந்த நெ. சுனில், ராஜாக்கமங்கலம் ஒன்றியத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் அவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 1,011.

15 வார்டுகள் கொண்ட இந்த ஒன்றியத்தில் மூன்று இடங்களை திமுக கூட்டணியும், 10 இடங்களை அதிமுக கூட்டணியும், நாம் தமிழர் ஓர் இடத்தையும், சுயேட்சை வேட்பாளர் ஓர் இடத்தையும் பெற்றுள்ளனர்.

டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 தேதிகளில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. கடந்த இரு தினங்களாக, இத்தேர்தலின் வாக்குகள் எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல பகுதிகளில் இளம் வேட்பாளர்கள், முதன்முறை வேட்பாளர்கள் என பலர் வெற்றி பெறுவது குறித்த தகவல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.

நாம் தமிழர் கட்சி: கடந்து வந்த பாதை

கடந்த 2010ஆம் ஆண்டு, தமிழ் திரைப்படஇயக்குநரும், நடிகருமான சீமானால் இக்கட்சி தொடங்கப்பட்டது. சி.பா. ஆதித்தனார் நடத்தி வந்த நாம் தமிழர் இயக்கத்தின் தொடர்ச்சியே தற்போதுள்ள நாம் தமிழர் கட்சி என்று அப்போது சீமான் அறிவித்திருந்தார்.

2016ஆம் ஆண்டு, தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும், வேட்பாளர்களை நிறுத்தியது இந்த கட்சி. எந்த தொகுதியிலும் வெற்றிபெறாத சூழலிலும், தேர்தலில் பதிவான வாக்குகளில் ஒரு சதவிகித வாக்குகளை இந்த கட்சி பெற்றிருந்தது.

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் தனது கட்சி வேட்பாளர்களில் 50% இடங்கள் பெண்களுக்கு அளிக்கப்படுவதாக நாம் தமிழர் கட்சி தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்பு மக்களின் கவனத்தை ஈர்க்க செய்யப்பட்ட ஓர் அரசியல் நகர்வு என்று ஒரு தரப்பினரால் கூறப்பட்டாலும், ஒரு கட்சி முன்வந்து இவ்வாறு அறிவித்ததை ஒரு தரப்பினர் பாராட்டவும் செய்தனர்.

நடந்து முடிந்த இந்த மக்களவை தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி ஓர் இடத்தைக்கூட கைபற்றவில்லை என்றாலும், அந்த கட்சி ஏழு தொகுதிகளில் மூன்றாம் இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Facebook பதிவை கடந்து செல்ல

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Facebook பதிவின் முடிவு

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :