மலையாள சினிமா: பட வாய்ப்புக்காக பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் நடிகைகள் - விசாரணை ஆணையம் அறிக்கை

மலையாள சினிமா: பட வாய்ப்புக்காக பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் நடிகைகள்

பட மூலாதாரம், Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: 'பட வாய்ப்புக்காக பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் நடிகைகள்'

மலையாள சினிமா உலகில் பட வாய்ப்புக்காக நடிகைகளை நடிகர்கள் படுக்கைக்கு அழைப்பதாக விசாரணை ஆணையத்தின் அறிக்கை கூறுவதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. `

கேரள மாநிலம் கொச்சியில், 2017-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 17-ந் தேதி மலையாள நடிகை ஒருவரை காரில் கடத்தி பாலியல் தொல்லை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் நடிகர் திலீப் உள்ளிட்ட 10 பேர் சிக்கினர். ஆனால் வழக்கு விசாரணை இன்னும் முடிந்தபாடில்லை. இதே போன்று மலையாள பட உலகில் நடிக்கிற வாய்ப்புக்காக நடிகைகளை நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் படுக்கைக்கு அழைப்பதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து நடிகைகளுக்காக போராடும் நோக்கத்தில் மலையாள பட உலகை சேர்ந்த பெண்கள் ஒன்றுசேர்ந்து டபிள்யு.சி.சி. என்ற அமைப்பை 2017-ம் ஆண்டு தொடங்கினர்.

மலையாள சினிமா: பட வாய்ப்புக்காக பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் நடிகைகள்

பட மூலாதாரம், Getty Images

இந்த அமைப்பினர், மலையாள பட உலகில் பெண்களுக்கு இழைக்கப்படக்கூடிய அநியாயங்கள் பற்றியும், அவர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்தும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்தித்து மனு அளித்தனர்.

அதன்பேரில், பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு, நீதிபதி கே.ஹேமா கமிஷனை அமைத்தது.

இந்த ஆணையத்தில் முதுபெரும் நடிகை சாரதா, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வல்சலா குமாரி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்த ஆணையம், மலையாள பட உலகில் உள்ள நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக்கலைஞர்கள் உள்ளிட்டோரை சந்தித்து, பட உலகில் சந்தித்து வருகிற பிரச்சினைகள் குறித்து விசாரணை நடத்தி, ஆதாரங்களுடன் அறிக்கையை தயாரித்தது.

இந்த அறிக்கையை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் நீதிபதி ஹேமா, நடிகை சாரதா, வல்சலா குமாரி ஆகியோர் சந்தித்து அளித்தனர்.

இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள விஷயங்கள் கசிந்துள்ளன. அதில் திடுக்கிடும் தகவல்கள் பல இடம் பெற்றுள்ளன.

குறிப்பாக பட வாய்ப்புக்காக பட உலகில் உள்ள நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் தங்களை படுக்கைக்கு அழைப்பதாக நடிகைகள் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலர் மரியாதைக்குரிய இடத்தை சினிமா உலகில் பிடிக்க வேண்டுமானால், மிகவும் மோசமான அனுபவங்களை சந்தித்துத்தான் ஆக வேண்டி உள்ளது என வேதனையுடன் கூறி உள்ளனர்.

இதில் பாதிக்கப்படுகிற நடிகைகள், போலீசில் புகார் செய்வதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

பட உலகில் உள்ள பல ஆண்களும், பெண்களும் இந்த விவகாரம் பற்றி பேசும்போது வெறுப்புணர்வை வெளிப்படுத்தி உள்ளனர். இன்னும் சிலர் பயத்தின் காரணமாக பேசவே மறுத்து விட்டதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் நடிகைகளுக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட்டும் அவமானப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு தளங்களில் நடிகைகளின் தனிமனித உரிமைகள் மீறப்படுகின்றன; கழிவறை, உடை மாற்றும் அறை வசதிகள் கூட செய்து தரப்படுவதில்லை என்றும் புகார் கூறி உள்ளனர்.

இந்த அவல நிலையில் இருந்து நடிகைகளுக்கு நிரந்தர தீர்வு தேடித்தர நீதிபதி ஹேமா கமிஷன், கேரள அரசுக்கு சில பரிந்துரைகளையும் செய்துள்ளது.

படுக்கைக்கு அழைக்கும் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வரகடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என்றும் ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.

மலையாள சினிமா: பட வாய்ப்புக்காக பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் நடிகைகள்

பட மூலாதாரம், Getty Images

பட உலகினருக்கு நெறிமுறைகளை வகுத்து, அவற்றை பின்பற்றாதவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும், விதிமுறைகளை மீறுவோரை படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை கேரள அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Presentational grey line

தினமணி: தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம்: இஸ்ரோ தலைவா் கே.சிவன் தகவல்

தூத்துக்குடியில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவா் கே.சிவன் தெரிவித்தார்.

மலையாள சினிமா: பட வாய்ப்புக்காக பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் நடிகைகள்

பட மூலாதாரம், Getty Images

இதுகுறித்து பெங்களூரு இஸ்ரோ தலைமையகத்தில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவா் கூறியது:

2019ஆம் ஆண்டில் இஸ்ரோவின் செயல்பாடுகளை விரிவாக்குவதில் கவனம் செலுத்தினோம். 2019ஆம் ஆண்டில் மட்டும் 6 ராக்கெட், 7 செயற்கைக்கோள் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளோம். பிஎஸ்எல்வி ராக்கெட்டின் 50ஆவது பயணம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது. இதேபோல, பிஎஸ்எல்வி ராக்கெட் இரண்டு வகைகளும் அறிமுகம் செய்யப்பட்டன.

பிஎஸ்எல்வி ராக்கெட்டின் நான்காம் அடுக்கை ஆய்வு சுற்றுவட்டதளமாகப் பயன்படுத்தி, செயற்கைக்கோ சோதனை செய்யப்பட்டது. செமி கண்டக்டா் ஆய்வுக்கூட்டத்தின் சொந்த தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட விக்ரம் புராசசா் சோதனை செய்யப்பட்டது. இந்தியாவின் பிராந்திய செயற்கைக்கோள் பயணவழிகாட்டி முறையின்(நாவிக்) தகவல்களை செல்லிடப்பேசியில் பயன்படுத்தப் பன்னாட்டு செல்லிடபேசி தரக்கட்டமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இரண்டாவது ஏவுகலன் (மாடில்) ஒருங்கிணைப்பு கட்டடம் அண்மையில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இதன்மூலம் விண்ணில் ஏவப்படும் ராக்கெட்டின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதைப் பொதுமக்கள் காண சிறப்பு மாடம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாடத்தில் அமா்ந்து இதுவரை சுமாா் 29 ஆயிரம் போ் ராக்கெட் ஏவப்படுவதை பார்த்துள்ளனர். இது திட்டத்துக்கு திட்டம் அதிகரித்து வருகிறது.

இஸ்ரோவின் கட்டமைப்பை வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக, சிறிய செயற்கைக்கோள் ஏவுகலன்களை விண்ணில் ஏவுவதற்காக தமிழகத்தின் தூத்துக்குடியில் 3 ஆயிரம் ஏக்கா் நிலத்தில் இரண்டாவது ஏவுதளத்தை அமைக்க திட்டம் வகுத்திருக்கிறோம். ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அடுத்தபடியாக தூத்துக்குடியில் ஏவுதளம் அமைக்கப்படுகிறது.

இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் சிறியரக ஏவுலங்களை இங்கிருந்து விண்ணுக்கு செலுத்தப்படும். எதிர்காலத்தில் இந்த ஏவுதளத்தின் பணிகள் விரிவாக்கப்படலாம். தென்துருவத்துக்கு சிறியரக செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு இந்த ஏவுதளம் பயனுள்ளதாக அமையும். ஆரம்பக்கட்டத்தில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்தே சிறியரக செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படும். தூத்துக்குடியில் ஏவுதளம் தயாரானதும், அங்கிருந்து சிறிய ரக செயற்கைக்கோள்கள் ஏவப்படும்.

இஸ்ரோவின் செயல்பாடுகளை அகலப்படுத்தும் வகையில் விண்வெளி தொழில்நுட்ப மையங்கள், விண்வெளி தொழில்நுட்ப ஆய்வு மையங்கள், பிராந்திய விண்வெளி கல்வி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற பல மையங்கள் ஆங்காங்கே அமைக்கப்படும்.

இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு விண்வெளி தொழில்நுட்பம், அறிவியல், பயன்பாடுகள் குறித்த பயிற்சி தொடங்கப்பட்டது. விண்வெளி ஏவும் திட்டங்களை அதிகப்படுத்துவதற்காக புதிய விண்வெளி இந்தியா நிறுவனத்தை(எஸ்எஸ்ஐஎல்) தொடங்கியிருக்கிறோம். இதன்மூலம் பிஎஸ்எல்வி தயாரிப்பில் தொழில் நிறுவனங்களை ஈடுபடுத்த முனைந்திருக்கிறோம்.

சந்திரயான் 3 திட்டத்துக்கு ஒப்புதல்

சந்திரயான் 3 திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சந்திரயான் 2 மற்றும் சந்திரயான் 3 திட்டத்துக்கு இடையே வித்தியாசம் எதுவுமில்லை. சந்திரயான் 2 திட்டத்தில் லேண்டா் மற்றும் ரோவா் ஆகியவை கொண்ட கலன் நிலவில் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. லேண்டா் மற்றும் ரோவா் கலனை தரையிறக்கும்போது அதன் வேகத்தை குறைக்கமுடியாததால், நிலவில் அது விழுந்தது. இதனால் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள இயலவில்லை. ஆனால் சந்திரயான் 2 திட்டத்தின் அங்கமாக ஆா்பிட்டா், நிலவை சுற்றி வந்து சிறப்பாக செயல்பட்டுவருகிறது. எனவே, இம்முறை சந்திரயான் 3 திட்டத்தில் ஆா்பிட்டா் இருக்காது. ஆனால், லேண்டா் மற்றும் ரோவரை நிலவுக்கு கொண்டுசெல்ல ஏவுகலம் பயன்படுத்தப்படும்.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த 16 மாதங்கள் தேவைப்படும். எனவே, சந்திரயான் 3 திட்டம் அடுத்த ஆண்டுக்கு செயல்படுத்தப்படும். சந்திரயான் 2 திட்டம் முழுமையாக வெற்றிபெற இயலாததின் காரணம் குறித்து விசாரித்து, ஆய்வறிக்கையை இந்திய அரசிடம் அளித்திருக்கிறோம். சந்திரயான் 3 திட்டத்துக்கு ரூ.250கோடி செலவிடப்படும். ஏவும் செலவையும் சேர்த்தால் ஒட்டுமொத்தமாக ரூ.615கோடி செலவாகும். இது சந்திரயான் 2 திட்டச்செலவைக் காட்டிலும் குறைவாகும்.

மனிதனை விண்ணுக்கு செலுத்தும் இந்தியாவின் மனித விண்வெளிப் பயணத் திட்டத்தை(ககன்யான்) செயல்படுத்தவேகமாக செயல்பட்டு வருகிறோம். 2022ஆம் ஆண்டுக்கு விண்ணில் செலுத்தப்படவிருக்கும் ககன்யான் கலன் திட்டத்தில் 3 விமானப் படை விண்வெளி வீரர்கள் பயணிப்பார்கள். எனினும், இத்திட்டத்தில் பங்கேற்க இந்திய விமானப் படையின் 4 வீரர்களை தேர்ந்தெடுத்திருக்கிறோம். இவர்களுக்கு ஜனவரி மூன்றாவது வாரத்தில் பயிற்சி தொடங்கும்.

அடுத்தகட்டமாக ரஷ்யாவிலும் பயிற்சி அளிக்கப்படும். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்பாக ஆளில்லா கலனை விண்ணில் செலுத்த வேலைகள் நடந்துவருகின்றன. சந்திரயான் 3 மற்றும் ககன்யான் திட்டங்களின் பணிகள் ஒரேநேரத்தில் செயல்படுத்தப்படும்.

நிகழ் ஆண்டில் எஸ்எஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட், ஜிசாட் 20 செயற்கைக்கோள், நாவிக் செயற்கைக்கோள், இந்திய தரவுத்தொடா் செயற்கைக்கோள் முறை, ஆதித்யா, எஸ்போசாட் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார்.

பேட்டியின்போது, இஸ்ரோ தலைவரின் அறிவியல் செயலாளர் உமாமகேஸ்வரன், ஊடகப்பிரிவு இயக்குநர் விவேக்சிங் உடனிருந்தனர்.

Presentational grey line

இந்து தமிழ் திசை: புத்தாண்டு கொண்டாட்டம் - விபத்தில் சிக்கி 318 பேர் காயம்

சென்னையில் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர், பாலவாக்கம், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் புத்தாண்டை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 60 இடங்களில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இந்த ஆம்புலன்ஸ் வாகனங் கள் மூலம் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது விபத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 48 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 150 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 57 பேரும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 63 பேரும் என மொத்தம் 318 பேர் விபத்துகளில் காயமடைந்து சிகிச்சை பெற்றுள்ளனர்.

லேசான காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். பலத்த காயம் அடைந்தவர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கிண்டி அண்ணா பல் கலைக்கழகம் அருகே தரமணி காவல் நிலைய ஆய்வாளர் புஷ்பராஜ் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள், புஷ்பராஜ் மீது மோதினர். இதில் அவரது தலையில் காயம் ஏற்பட் டது.

இதேபோல பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பாதுகாப்பு பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய எழும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெய சித்ரா(45) மீது பின்னால் வந்த ஆட்டோ மோதியது. இதில் காயமடைந்த அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

ஆட்டோவை ஓட்டி வந்த கொடுங்கையூரைச் சேர்ந்த மணிகண்டனை(34) அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது 304 பேர் காயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Presentational grey line

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் : செர்பிய நடிகையுடன் ஹர்திக் பாண்ட்யா திருமணம்

Instagram பதிவை கடந்து செல்ல
Instagram பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Instagram வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Instagram குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

Instagram பதிவின் முடிவு

புத்தாண்டு தினத்தன்று தனது திருமண நிச்சயதார்த்தத்தை இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா, சமூக ஊடங்கங்களில் அறிவித்துள்ளது குறித்த செய்தியை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு வெளியிட்டுள்ளது.

செர்பிய நடிகையான நடாஷா ஸ்டான்கோவிச் உடனான தனது காதலையும், திருமண நிச்சயத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில படங்களுடன் வெளியிட்டுள்ளார் ஹர்திக் பாண்ட்யா.

நடாஷாவுடன் ஹர்திக் டேட்டிங் செய்து வருவதாக சில மாதங்களாகவே தகவல்கள் சமூக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருந்த நிலையில், அதற்கு ஏதும் பதில் கூறாமல் ஹர்திக் பாண்ட்யா இருந்து வந்தார்.

இந்நிலையில், தங்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக அவர் நேற்று தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் இருவரின் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள்.

துபாய் அருகே கடலில் படகு ஒன்றில் நடாஷாவிடம் மோதிரத்தை பரிசாக கொடுத்து தனது காதலை ஹர்திக் வெளிப்படுத்தியதாக அந்த செய்தி மேலும் குறிப்பிட்டுள்ளது.

மோதிரத்தை பரிசாக பெற்றுக் கொண்ட நடாஷா ஹர்திக்கை முத்தமிட்டு தனது காதலை வெளிப்படுத்தியதாக அந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது.

இது குறித்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

Presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: