ஜெர்மன் மாணவர் வெளியேற்றப்பட்ட விவகாரம் - 'எனது போராட்டம் இந்தியாவுக்கு எதிரானதல்ல'

- எழுதியவர், ஷஷாங்க் சௌஹான்
- பதவி, பிபிசி
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடிய ஜெர்மன் மாணவர் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என எழுத்துபூர்வ உத்தரவு தனக்கு அளிக்கப்படவில்லை, மாறாக வாய்மொழி உத்தரவு மட்டுமே அளிக்கப்பட்டது எனக் கூறியுள்ளார்.
வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவின் கல்வி நிறுவனத்தை தேர்வு செய்து படிக்கும் திட்டத்தின் கீழ் சென்னை ஐஐடிக்கு படிக்க வந்த மாணவர், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டங்களில் கலந்துக்கொண்டதற்காக நாட்டை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டது.
எனக்கு அதிகாரப்பூர்வ உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. ஆனால் சென்னையின் குடியேற்ற அதிகாரி இந்தியாவில் இருந்து கிளம்ப வேண்டும் என்று கூறியதால்தான், ஜெர்மனிக்கே தான் திரும்பி சென்றதாக பிபிசியிடம் கூறுகிறார் மாணவர் ஜேக்கப் லிண்டேன்தால்.
டிசம்பர் 16 மற்றும் 19ம் தேதிகளில் சென்னையின் பல இடங்களில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடந்தது. இரண்டு நாட்கள் நடந்த போராட்டத்திலும் ஜெர்மன் நாட்டை சேர்ந்த மாணவர் ஜேக்கப் லிண்டேன்தால் கலந்துக்கொண்டனர். அவர் போராட்டத்தில் கலந்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இந்திய ஊடகங்களில் அதிகமாக வெளிவந்தன.
இதை தொடர்ந்து சென்னையில் உள்ள குடிவரவு அலுவலகம் (வெளிநாட்டினர் வருகையை பதிவு செய்யும் அலுவலகம்) டிசம்பர் 23ம் தேதி ஜேக்கப்பை அழைத்து, அவரின் விசா விதிமுறைகளின்படி அவர் எந்த போராட்டத்திலும் கலந்துகொள்ள கூடாது, ஆனால் அதையும் மீறி அவர் போராட்டத்தில் ஈடுபட்டதால், இந்திய நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டது.
வெளிநாட்டினர் விசா கோரியதற்கான நோக்கத்திற்கு மட்டுமே இணங்க செயல்படவேண்டும் என்றும், விசாவில் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கும் கட்டுப்பட வேண்டும் என்றும் குடிவரவு ஆணைய வலைத்தளம் கூறுகிறது.
இந்தியாவின் பல குடிவரவு மற்றும் விசா விண்ணப்ப வலைத்தளங்கள் போராட்டங்களில் பங்கேற்பது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

பட மூலாதாரம், BBC
இருப்பினும் தான் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவதற்கான காரணத்தை எழுத்து பூர்வமாக ஜேக்கப் கேட்டபோதும், அதிகாரிகள் அதை வழங்கவில்லை.
தற்போது நியூரம்பெர்கில் இருந்து பிபிசியிடம் பேசிய ஜேக்கப், போராட்டங்களில் கலந்துகொண்டு விசா விதிகளை மீறிய காரணத்திற்காக நான் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டதாக குடிவரவு அலுவலகம் எனக்கு விளக்கம் தந்தது. ஆனால் நான் நாடு கடத்தப்படவில்லை,'' என்று பிபிசியிடம் கூறினார்.
பெங்களூரில் ஒரு விளையாட்டு போட்டியில் கலந்துக்கொள்ள சென்றிருந்தபோது, சென்னையின் குடிவரவு அலுவலகத்திற்கு நான் உடனடியாக செல்ல வேண்டும் என்று சென்னை ஐஐடியின் தொலைபேசி அழைப்பு மூலம் எனக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து சென்னை ஐஐடி தரப்பின் கருத்தை அறிய பிபிசி முற்பட்டது. ஐஐடி தரப்பு இதுவறை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
மேலும் சென்னையில் உள்ள இந்திய தூதரகம், அரசாங்கத்தின் முடிவுக்கு கட்டுப்பட்டு ஜெர்மனுக்கே திரும்பி செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியதாக ஜேக்கப் கூறுகிறார். கட்டாயப்படுத்தி நாட்டை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் முன்பு அவர் தாமாகவே வெளியேறுவது பிரச்சனைகளை தவிர்க்கும் என்றும் ஜெர்மன் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து டெல்லி, ஜெர்மன் செல்ல இரண்டாவது விமானம் எடுக்க வேண்டி இருந்த சூழலில், டெல்லியில் உள்ள ஜெர்மன் தூதரகத்தின் அதிகாரி ஒருவர் வழிநடத்தியதால் தான் இடையூறு இல்லாமல் ஜெர்மனி சென்றதாக ஜேக்கப் கூறுகிறார்.
'எனது போராட்டம் இந்தியாவுக்கு எதிரானதல்ல, அரசியல் நடவடிக்கைக்கு எதிரானது'
"எனது படிப்பை ஜெர்மனியில் தொடர விரும்புகிறேன். இந்தியாவில் நிறைய நண்பர்கள் கிடைத்தனர். சென்னை ஐஐடியில் படித்ததும் சிறந்த அனுபவமாக இருந்தது. நிச்சயமாக இந்தியாவிற்கு திரும்பி வர விரும்புகிறேன். நான் இந்தியாவுக்கு எதிராக போராடவில்லை, ஆனால் அதிகாரத்தை கைப்பற்றி மேற்கொள்ளப்பட்ட அரசியல் நடவடிக்கைக்கு எதிராகவே நான் போராடினேன் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்," என்றார் ஜேக்கப்.

பட மூலாதாரம், CHINTABAR
மேலும் குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து ஜேக்கப் கூறுகையில், ''இந்த சட்டம் குறித்து இந்தியாவில் உள்ள எனது நண்பர்கள் விளக்கினார், போராட்டங்கள் குறித்தும் எனக்கு தெரியப்படுத்தினர். நான் இந்த சட்டம் குறித்து படித்தபோது, இது தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்காக பயன்படுத்தப்பட்டால் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் நாடற்றவர்கள் ஆகிவிடுவார்கள் என்று உணர்ந்தேன். மேலும் சட்டத்தை திருத்தியதற்கான காரணம் நியாயமானதாகத் தோன்றுகிறது, ஆனால் சட்டத்தை எளிதில் தவறாகப் பயன்படுத்த முடியாது என்ற சரியான உத்தரவாதத்தை அரசாங்கத்தால் வழங்க முடியவில்லை.''
'1933-1945 காலகட்டத்தில் நாங்கள் அங்கு இருந்தோம் ' என்று பதாகை ஒன்றை ஏந்தியிருந்தது பற்றி கூறிய ஜேக்கப் "நாஜிக்கள் ஜெர்மனியை ஆட்சி செய்த காலத்துடன் இந்திய அரசை ஒப்பிட வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல. பல சர்வாதிகார அமைப்புகள் நியாயமானதாகத் தோன்றும் சட்டங்களுடன்தான் தொடங்குகின்றன. ஆனால் ஒரு மோசமான அரசாங்கத்தால் ஆபத்தான வழியில் அந்த சட்டங்களை பயன்படுத்த முடியும் என்பதைத்தான் நான் வெளிப்படுத்த விரும்பினேன்," என்று தெரிவித்தார் ஜேக்கப்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












