ராஜஸ்தான்: கோட்டா மருத்துவமனையில் ஒரு மாதத்தில் 77 குழந்தைகள் பலி

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், நாராயண் பரேட்
- பதவி, ஜெய்பூரில் இருந்து, பிபிசிக்காக
ராஜஸ்தானின் கோட்டாவில் ஜே.கே லோன் தாய் சேய் மருத்துவனை மற்றும் மற்றும் புதிய மருத்துவக் கல்லூரி என்ற அரசு மருத்துவமனையில் 48 மணி நேரத்தில் 10 இளம் குழந்தைகள் இறந்த பின்னர், மருத்துவமனை கண்காணிப்பாளர் பணிநீக்கம் செய்யப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனையில் ஒரு மாதத்தில் 77 குழந்தைகள் இறந்திருப்பதாகப் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி அரசாங்கத்தைக் கடுமையாகத் தாக்கியுள்ளது.
மறுபுறம், எதிர்க்கட்சி அரசியல் செய்வதாக அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில், இதுபோன்ற இறப்புகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் கூறுகிறார்.
நாட்டின் ஆரம்பக்கட்ட சுகாதார சேவைகளின் கட்டமைப்பு மிகவும் பலவீனமாக உள்ளது என்றும், இதுவே குழந்தைகளின் அகால மரணத்திற்குக் காரணம் என்றும் பொதுச் சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த விவகாரத்திற்குப் பிறகு நடவடிக்கை எடுத்த மாநில அரசு, மருத்துவமனை கண்காணிப்பாளர் எச்.எல். மீனா, கண்காணிப்புப் பணியில் சரியாக ஈடுபடாததாகக் கூறி பணியிலிருந்து நீக்கியது.
அவருக்குப் பதிலாக டாக்டர் சுரேஷ் துலாரியா நியமிக்கப்பட்டுள்ளார்.

பட மூலாதாரம், BBC
'ஆபத்தான நிலையில் இருக்கும் குழந்தைகள்'
பிபிசியிடம் பேசிய டாக்டர் துலாரியா, "மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் மற்றும் அதிகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன."
டாக்டர் துலாரியாவின் கருத்துப்படி, "மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட குழந்தைகளின் இறப்பும் இந்த எண்ணிக்கையில் அடங்கும். பிறக்கும் போதே பலவீனமாக இருந்த குழந்தைகளும், வேறு மருத்துவமனையிலிருந்து அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட குழந்தைகளும் இதில் அடங்கும்."
எதிர்க்கட்சிகளின் கடுமையான தாக்குதல்களை எதிர் கொண்ட மாநில அரசு, அதிகாரிகளின் குழுவை அனுப்பி, இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டது.

பட மூலாதாரம், Getty Images
ஊடகங்களிடம் பேசிய முதலமைச்சர் அசோக் கெஹ்லாட், "கடந்த ஆறு ஆண்டுகளில், இந்த ஆண்டு மிகவும் குறைவான இறப்புகள் நிகழ்ந்துள்ளன. ஒரு ஆண்டில் 1500, சில நேரங்களில் 1400 மற்றும் சில நேரங்களில் 1300 இறப்புகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் இந்த முறை சுமார் 900 இறப்புகள் நிகழ்ந்துள்ளன. மக்களின் ஆரோக்கியம் மேம்படவேண்டும் என்பதற்காக 'ஆரோக்கியமான ராஜஸ்தான்' என்ற திட்டத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளது.
அரசு பதவியேற்றவுடன், சுகாதார சேவைகளை மேம்படுத்தப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒரு குழந்தை கூட இறப்பது துரதிர்ஷ்டவசமானது. தாயும் குழந்தையும் பாதுகாப்பாக இருப்பதே எங்களது முன்னுரிமை" என்று தெரிவித்தார்.
பாஜக அரசு மீது தாக்குதல்
இதற்கிடையில், கோட்டா மருத்துவமனைக்குச் சென்று அங்கிருந்த நிலைமையைப் பார்வையிட்டார் மாநில பாஜக தலைவர் சதீஷ் பூனியா. "இந்த மரணங்களுக்குப் பிறகும் அரசாங்கத்தின் அணுகுமுறை மெத்தனமாக இருக்கிறது" என்று பூனியா கூறுகிறார்.
கோட்டாவிலிருந்து திரும்பிய பிறகு, பிபிசியிடம் பேசிய பூனியா, "நான் நேரடியாகவே மருத்துவமனைக்குச் சென்று நிலைமையைப் பார்த்தேன். நிலைமை மிகவும் கவலைக்கிடமாகத் தான் இருக்கிறது. மாநில அரசு மனிதாபிமானமற்றதாக இருக்கிறது. நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதனால்தான் இரண்டு முன்னாள் மருத்துவ அமைச்சர்கள் ராஜேந்திர ரத்தோர் மற்றும் கலிச்சரன் சர்ராஃப் உறுப்பினர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டு, இந்த விஷயத்தின் வேர்வரை சென்று ஆராயவிருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
இந்த பிரச்சினையை தாங்கள் அரசியல் நோக்கோடு அல்ல, மனிதாபிமான கண்ணோட்டத்துடன் அணுகுவதாக பாஜக தலைவர் பூனியா கூறினார்.
தனது கட்சியைச் சேர்ந்த ஐந்து எம்.எல்.ஏ.க்களுடன் பேசிய பூனியா, தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவமனைக்கு தலா10 லட்சம் ரூபாய் கொடுக்கும் முடிவையும் எடுத்துள்ளார். எனவே மருத்துவமனைக்குத் தேவையான வசதிகள் செய்துக் கொடுக்க முடியும்.
இந்த சம்பவம் தொடர்பாக மாநில முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே காங்கிரஸ் அரசை சாடுகிறார்.
'இலவச மருந்து திட்டத்தால் அரசுகளுக்கு அழுத்தம்'
பிபிசியிடம் பேசிய மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் துலாரியா, "மாநிலத்தில் இலவச மருந்து கொடுக்கும் திட்டத்தை அமல்படுத்திய பின்னர் அரசு மருத்துவமனைகளில் அழுத்தம் அதிகரித்துள்ளது. அதிகரித்து வரும் இந்த சுமைகளை மருத்துவமனை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது" என்று கூறுகிறார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, மருத்துவமனையில் ஆக்ஸிஜன் குழாயைச் சரிசெய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனையின் சம்பந்தப்பட்ட துறைத் தலைவர் டாக்டர் அம்ரித் லால் பைரவா ஊடகங்களிடம் பேசினார். "மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் இல்லை. இதற்கு மத்தியிலும், சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை மருத்துவமனை ஊழியர்கள் சரியான முறையில் கவனித்து வருகின்றனர்" என்று அவர் தெரிவித்தார்.
"எங்கள் முயற்சிகளால் இத்தகைய இறப்புகளைக் குறைத்துள்ளோம். இலவச பரிசோதனை மற்றும் இலவச மருந்து திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு மருத்துவமனைகளுக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவது மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கிறது" என்று அவர் சொல்கிறார்.
பதிவுகளை மேற்கோள் காட்டும் டாக்டர் பைரவா, "2014 ஆம் ஆண்டில், 15,719 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர், அவர்களில் 1,198 பேர் இறந்தனர். 2015 இல் 17,569 பேர் அனுமதிக்கப்பட்டனர். 1,260 பேர் இறந்தனர். 2016 ஆம் ஆண்டில் 17,892 பேர் அனுமதிக்கப்பட்டனர் மற்றும் 1,193 பேர் இறந்தனர். 2017 ஆம் ஆண்டில், நோயாளிகளின் எண்ணிக்கை 17,216 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 1,027 பேர் என்றும் இருந்தது. இதுவே 2018 ஆம் ஆண்டில் 16,436 க்கு 1,005 என்று இருந்தது. இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 940 என்ற நிலையில் இருக்கிறது.
ஆண்டுதோறும் மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், ஆனால் இதுபோன்ற இறப்புகளின் எண்ணிக்கை விகிதத்தில் குறைந்து வருவதாகவும் டாக்டர் பைரவா கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
மாநில பொது சுகாதாரத் துறையில் பணிபுரியும் டாக்டர் நரேந்திர குப்தாவிடம் பிபிசி பேசியது "ஆரம்ப மட்டத்தில் சுகாதார சேவைகளின் கட்டமைப்பு மிகவும் பலவீனமாக உள்ளது. முன்னதாக இதுபோன்ற மரணங்கள் வீட்டிலேயே நிகழ்ந்தன, இப்போது நோயாளிகள் மருத்துவமனைக்கு வருகிறார்கள். அடிப்படை நிலையிலிருந்தே மாற்றங்கள் செய்யப்பட்டால் தான் இதுபோன்ற மரணங்களைத் தவிர்க்க முடியும். மிகவும் பின்தங்கிய பகுதிகளுக்குச் சென்று பணிபுரிய மருத்துவர்கள் விரும்பவில்லை என்பதும் ஒரு உண்மை. இறக்கும் குழந்தைகளில் பெரும்பாலானவர்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு மிகவும் அதிகமாக இருக்கிறது. பிரசவும் மிகவும் சிக்கலாக இருக்கிறது"என்றார் அவர்.
"தாலூகா நிலயில் சுகாதார சேவைகள் நன்றாக இருந்தால், இதுபோன்ற நோயாளிகள் தாமதமாகப் பிரதான மருத்துவமனைகளுக்கு வராமல், அங்கேயே சிகிச்சை பெறும் நிலை ஏற்படும். அப்போதுதான் முன்னேற்றம் ஏற்படும். பொதுவாக உள்ளூரிலேயே நல்ல மருத்துவ வசதி இருந்தால், தாமதம் இல்லாமல் உடனே சிகிச்சைக்குச் செல்வார்கள்" என்று டாக்டர் குப்தா கூறுகிறார்.
"மருத்துவமனைகள் மீது அதிக சுமை உள்ளது. ஆரம்ப மற்றும் நடுத்தர மட்டங்களில் சுகாதார சேவைகளின் கட்டமைப்பு மிகவும் பலவீனமாக இருக்கிறது. அதனால்தான், மக்கள் கோட்டா போன்ற பெரிய நகரங்களுக்குச் செல்ல வேண்டி இருக்கிறது" என்று டாக்டர் குப்தா கூறுகிறார்.

பட மூலாதாரம், TWITTER
இதற்கிடையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஞாயிற்றுக்கிழமை கோட்டாவில் உள்ள அந்த மருத்துவமனைக்குச் சென்று நிலைமையைப் பற்றித் தெரிந்து கொண்டார். கோட்டாவைச் சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவமனையில் சுகாதார உபகரணங்கள் இல்லாதது குறித்து விசாரித்த அவர், இது தொடர்பாகத் தேவையான நெறிகாட்டு வழிமுறைகளை வழங்கினார்.
ஹடோதியின் தலைமையகம் கோட்டாவில் உள்ளது. எனவே, கோட்டாவைத் தவிர, பூந்தி, பாரன் மற்றும் ஜலாவர் ஆகிய பகுதிகளிலிருந்தும் மக்கள் இங்குச் சிகிச்சைக்காக வருகின்றனர்.
இதைத் தவிர, நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான மாணவர்கள் இங்கு வந்து தங்கி போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருகின்றனர்.
சமீபத்தில் தான் காங்கிரஸ் அரசு ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, நோயற்ற ராஜஸ்தான் என்ற பொருள்படும் 'நிரோகி ராஜஸ்தான்' திட்டத்தை ஆரம்பித்த நிலையில், தற்போது இந்த சம்பவம் வெளியாகியுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












