டெல்லியில் பொம்மை, பேக் தொழிற்சாலை தீ விபத்து: 43 தொழிலாளர்கள் பலி

டெல்லி ராணி ஜான்சி சாலையில் உள்ள பொம்மை மற்றும் பயணப் பை (ட்ராலி பேக்) தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்தனர்.

தீயணைப்பு வீரர்கள் இதுவரை குறைந்தது 50 பேரை மீட்டுள்ளனர்.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய பெயர் வெளியிட விரும்பாத காவல்துறை அதிகாரி ஒருவர், "தீ விபத்து ஏற்பட்டுள்ள இடத்தில் பிளாஸ்டிக் பொம்மை மற்றும் பயணப் பைகள் தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வந்ததாக தெரிகிறது. மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் பெரும்பாலானோர் 15 முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள்" என்று கூறினார்.

சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட்ட பிபிசி ஹிந்தி செய்தியாளர் அனந்த் பிரகாஷ், தாம் விசாரித்த பலரும் இந்த விபத்து மின் கசிவால் நடந்திருக்கவே வாய்ப்புள்ளது என்று கூறியதாகத் தெரிவித்தார்.

விபத்துக்குள்ளான கட்டடத்தில் பிளாஸ்டிக் மோல்டிங் இயந்திரம் ஒன்று இருந்தது என்றும் அவர் கூறினார்.

என்ன நடந்தது?

தீயணைப்பு படை துணை தலைமை அதிகாரி சுனில் செளதிரி, "600 சதுர அடி குறுகிய இடத்தில் தீ பற்றி உள்ளது. அந்த இடத்தில் பள்ளி பைகள், பாட்டில்கள், அட்டைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன," என்கிறார்.

தீயணைப்பு படை தலைமை அதிகரி, "இதுவரை 50 பேரை மீட்டுள்ளோம். பலர் தீ புகையின் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்," என்கிறார்.

தீ விபத்து காலை 5.22 மணிக்கு ஏற்பட்டது.

தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளைத் தீயணைப்பு படைவீரர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

27 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

சம்பவ இடத்தை பார்வையிட்ட டெல்லி தீயணைப்புப் படையின் இயக்குனர் அதுல் கார்க், "இந்த கிடங்கில் அதிகளவில் வைக்கப்பட்டுள்ள தாள்கள் மற்றும் அட்டைப் பெட்டிகள் தீயில் எரிய தொடங்கியதால், அதிலிருந்து எழுந்த புகையினால் சுவாசிக்க முடியாமல் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும், சம்பவம் நடந்த இடம், மிகவும் குறுகலான சாலைக்குள் அமைந்துள்ளதால் முழு வீச்சில் செயல்படுவது கடினமாக உள்ளது" என்று கூறினார்.

லோக் நாயக் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் கிஷோர் குமார், காயமடைந்தவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக கூறுகிறார்.

நரேந்திர மோதி அஞ்சலி

இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி.

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், "தீயணைப்பு படை வீரர்கள் சிறப்பாக பணியாற்றி வருவதாக," ட்வீட் செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக, தேவையான அனைத்து உதவிகளையும் விரைந்து வழங்குமாறு உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

நடவடிக்கை

சம்பவ இடத்திற்குச் சென்ற அமைச்சர் உணவு வழங்கல் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் இம்ரான் ஹூசைன், "தீ விபத்து எப்படி ஏற்பட்டதென விசாரித்து, இதற்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்," என்று கூறி உள்ளார்.

சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட அர்விந்த் கெஜ்ரிவால், இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா பத்து லட்சம் வழங்கப்படும் என அறிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: