You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆபாசப் படங்களின் தாக்கம்: உடலுறவு நேரத்தில் தாக்கப்படும் பெண்கள் - அதிர்ச்சி தரும் ஆய்வு
- எழுதியவர், அலிஸ் ஹார்டே
- பதவி, பிபிசி
மன ஒப்புதலுடன் நிகழும் உடலுறவின் போது அறைதல், கழுத்தை நெரித்தல், வாயை அடைத்துக் கொள்வது அல்லது துப்புவது போன்ற தேவையற்ற செயல்களுக்கு ஆளாவதாக 40 வயதுக்கு உள்பட்ட பிரிட்டன் பெண்களில் மூன்றில் ஒரு பகுதி பேர் கூறியுள்ளதை அடுத்து இந்த விஷயம் வெளியில் தெரிய வந்துள்ளது என்று பிபிசி ரேடியோ 5 லைவ் கூறியுள்ளது.
மூன்று வெவ்வேறு ஆண்களுடன், ஒப்புதலுடன் உறவு வைத்துக் கொண்ட சமயங்களில் விரும்பத்தகாத செயல்களுக்கு ஆளானதாக 23 வயதான அனா என்பவர் தெரிவித்தார்.
தன்னுடைய தலைமுடியைப் பிடித்து இழுத்து அறைந்ததாக அவர் குறிப்பிட்டார். பிறகு தன்னுடைய கழுத்தைச் சுற்றி அந்த ஆண் இறுக்கியதாகவும் கூறினார்.
``நான் அதிர்ச்சி அடைந்தேன். என்னால் சமாளிக்க முடியவில்லை. அடக்குமுறைக்கு ஆளானேன். தெருவில் உங்களை யாராவது அறைந்தாலோ அல்லது கழுத்தை நெரித்தாலோ அது ஒரு தாக்குதலாகக் கருதப்படும்'' என்று அவர் தெரிவித்தார்.
தன்னுடைய நண்பர்களுடன் அவர் பேசியபோது, இது இயல்பாக நடக்கும் விஷயங்கள் தான் என்பதை அறிந்து கொண்டார்.
"அப்போதிருந்து, ஏறத்தாழ எல்லா ஆண்களுமே இவற்றில் ஏதாவது ஒரு செயலில் ஈடுபடுகிறார்கள்.''
மற்றொரு சமயத்தில் உடலுறவு நேரத்தில், விருப்பம் இல்லாமல் அல்லது முன் அறிகுறி ஏதும் இல்லாமல் ஓர் ஆண் தன் கழுத்தை நெரிக்க முயற்சித்தார் என்று அனா கூறினார்.
இந்த ஆண்டு பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை முடித்துள்ள அவர், தனக்கு லேசான காயங்கள் மற்றும் நாள் கணக்கில் வலி ஏற்படுத்தும் வகையில் ஒரு ஆண் கடுமையாக நடந்து கொண்டார் என்றும் தெரிவித்துள்ளார்.
மன ஒப்புதலுடன் நிகழும் உடலுறவின் போது அறைதல், கழுத்தை நெரித்தல், வாயை அடைத்துக் கொள்வது அல்லது துப்புவது போன்ற தேவையற்ற செயல்களுக்கு ஆளாகி இருக்கிறீர்களா என்றும், எப்போதாவது அது விருப்பம் இல்லாமல் நடந்திருக்கிறதா என்றும் பிரிட்டனில் 18 முதல் 39 வயதுக்கு உள்பட்ட 2002 பெண்களிடம் சவன்டா காம்ரெஸ் என்ற ஆய்வு நிறுவனம் கணக்கெடுப்பு நடத்தியது. இந்த முடிவுகளை கொண்டு, பிரிட்டன் முழுக்க எப்படி இருக்கும் என மதிப்பிடப்பட்டது.
ஆய்வில் பங்கேற்றவர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலானவர்கள் (38%) இதுபோன்ற செயல்களுக்கு ஆளாகியுள்ளனர். குறைந்தது சில சமயங்களிலாவது அது விரும்பத்தகாத செயல்களாக இருந்துள்ளது என அவர்கள் கூறியுள்ளனர். மூன்றில் இரண்டு பங்கு பேருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர். அது விரும்பத்தகாத செயலாக இல்லை என்று ஒரு பகுதியினர் (31%) கூறியுள்ளனர். இதுபோன்ற அனுபவம் இல்லை என்றோ, இதுபற்றித் தெரியாது என்றோ அல்லது பதில் அளிக்க விரும்பவில்லை என்றோ 31% பேர் குறிப்பிட்டுள்ளனர்.
``இளம்பெண்கள் வெறித்தனமான, அபாயகரமான மற்றும் கண்ணியக் குறைபாடான செயல்களுடன் கூடிய உறவுக்கு நிர்பந்திக்கப்படும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன'' என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன என்று பெண்கள் நீதிக்கான மையத்தின் நிர்வாகிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
``இயல்பானது தான் என்ற எண்ணம் உருவாக்கப் பட்டிருப்பதும், அளவுக்கு அதிகமான ஆபாசப்படங்களும் தான் இந்தப் பழக்கம் பரவலாக இருப்பதற்குக் காரணம்'' என்று அவர்கள் கூறினர்.
``40 வயதுக்கு உள்பட்ட பெண்கள், இன்னொரு ஆணுடன் ஒப்புதலுடன் உறவு கொள்ளும் போது, எந்த அளவுக்கு அடிக்கடி வன்செயல்களுக்கு ஆளாகின்றனர், எந்த அளவுக்கு அது அச்சுறுத்தலாக அமைகிறது'' என்பதை இந்தத் தகவல்கள் காட்டுகின்றன என்று மகளிர் உதவிக்கான தற்காலிக இணை தலைமை நிர்வாகி அடினா கிளாய்ரே தெரிவித்தார்.
``ஒருவருடன் உறவு கொள்ள சம்மதிப்பது என்பது அறைதல் அல்லது இன்னொருவர் கழுத்தை நெரித்தலின் அபாயத்தைக் குறைப்பதாக ஆகிவிடாது'' என்கிறார் அவர்.
`பயந்து போய்விட்டேன்'
``நாங்கள் படுக்கைக்குச் சென்றோம். உறவின் போது - எந்த அறிகுறியும் இல்லாமல் - அவர் என் கழுத்தை நெரிக்கத் தொடங்கினார். உண்மையில் நான் அதிர்ச்சி அடைந்தேன். பயந்து போய்விட்டேன். அப்போது நான் எதுவும் சொல்லவில்லை. ஏனெனில் நாம் பலவீனமாக இருக்கிறோம், இந்த ஆள் நம்மை ஆட்படுத்திவிடுவார் என்று நினைத்தேன்" என்கிறார் எம்மா.
ஆபாசப் படங்கள் ஏற்படுத்திய தாக்கம் தான் இதற்குக் காரணம் என்கிறார் அவர்.
``ஆன்லைனில் இதுபோன்ற காட்சிகளை அவர் பார்த்துவிட்டு, நிஜ வாழ்க்கையிலும் அதை செய்து பார்க்க முயற்சி செய்திருக்கிறார் என்று கருதினேன்.''
மன ஒப்புதலுடன் நிகழும் உடலுறவின் போது அறைதல், கழுத்தை நெரித்தல், வாயை அடைத்துக் கொள்வது அல்லது துப்புவது போன்ற செயல்களுக்கு ஆளானவர்களில் 42% பேர் அதற்கு கட்டாயப்படுத்தப்பட்டனர், அழுத்தத்துக்கு உள்ளாக்கப்பட்டனர் என்று கூறியுள்ளதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
வெறித்தனம் `இயல்பானது' என்பதாய் மாறி வருகிறது
ஸ்டீவன் போப் என்பவர் பாலியல் மற்றும் உறவுமுறைகள் குறித்த உளவியல் நிபுணர்.
இதுபோன்ற செயல்கள் `தினந்தோறும்' அதிகரித்து வருவதன் எதிர்மறை தாக்கம் பற்றி தாம் ஆய்வு செய்து வருவதாக பிபிசி ரேடியோ 5 லைவ் செய்தியாளரிடம் அவர் கூறினார்.
``இது மவுனமாகப் பரவும் ஒரு ஆபத்து. இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து அவ்வாறு செய்கிறார்கள். ஆனால் அது மிகவும் துன்பம் தருவதாக இருக்கலாம். உறவு நிலையின் கண்ணியத்தைக் குறைப்பதாகப் பலர் இதைக் கருதுகிறார்கள். ஆனால் - வன்முறை ஏற்புடையது என்று மாறி வருவது - மோசமானதாக உள்ளது.''
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள், இதில் உள்ள ஆபத்துகள் பற்றி அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்று அவர் கவலை தெரிவிக்கிறார்.
``கழுத்தை நெரித்தல் அல்லது வாயை அடைத்தல் எல்லை மீறும் போது `நூலிழையில் தப்பிய நிலையில்' பலர் என்னிடம் வருகிறார்கள். நீண்ட நேரம் சுயநினைவிழந்து இருந்துள்ளனர்.''
``கழுத்தை நெரித்தல் என்பது மிகவும் ஆபத்தானது. ஆனால் அதுபற்றி துளியும் யோசிப்பதில்லை என்பது வருத்தமானது.''
இந்த ஆய்வு முடிவுகள் ``மிகவும் பயத்தை ஏற்படுத்துபவையாக உள்ளன'' என்று பிரசார அலுவலர் பியோனா மெக்கென்ஜி கூறியுள்ளார்.
``மன ஒப்புதலுடன் உறவு கொண்ட சமயங்களில் கழுத்தை நெரித்தல், அறைதல், துப்புதல் போன்ற செயல்களுக்கு ஆட்பட்ட, கடுமையான வார்த்தைகளால் திட்டப்பட்ட மற்றும் கையால் குத்தப்பட்ட பெண்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். இது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் செயல் என்பதை ஆரம்பத்தில் பெரும்பாலான பெண்கள் உணர்ந்திருக்கவில்லை.''
`பாலியல் உறவு விளையாட்டு தவறாகிப் போய்' பெண்கள் கொல்லப்பட்ட பல நிகழ்வுகள் நடந்துள்ளன. மன ஒப்புதல் என்பதை தங்களுக்குப் பாதுகாப்பு தரும் அல்லது வன்மையாக நடந்து கொள்வதற்கான சம்மதம் என எடுத்துக் கொள்கிறார்கள். இதற்கு நாங்கள் ஒப்புதல் அளிக்க முடியாது.
பாலியல் உறவு என்பது ``அதிகம் ஆண்களின் செயல்பாடு சார்ந்ததாகிவிட்டது. ஆபாசப் படங்களில் உள்ளதைப் போல ஆகிவிட்டது. இதில் பெண்களுக்குப் பெரிய பங்கு இல்லை'' என்பது போல மாறிவிட்டது என்று அனா கூறுகிறார்.
உறவின் போது வெறித்தனமாக நடந்து கொள்வது இயல்பானது என்றாகிவிட்டது. ``அவர்கள் சாதாரணமானவர்கள் தான். அவர்களுக்குள் ஒற்றுமையான அம்சங்கள் எதுவும் இல்லை. அடிக்கடி ஆபாசப் படங்கள் பார்ப்பவர்களாக இருப்பார்கள் என்று கருதுகிறேன். படங்களைப் பார்த்துவிட்டு, பெண்கள் அவற்றைத்தான் விரும்புவார்கள் என நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் எதுவும் கேட்கத் தவறிவிடுகிறார்கள்'' என்று அவர் கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: