You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காலநிலை மாற்றம்: சுவாசிக்க முடியாமல் திணறும் பெருங்கடல்கள் - ஓர் எச்சரிக்கை மற்றும் பிற செய்திகள்
சுவாசிக்க முடியாமல் திணறும் பெருங்கடல்கள் - ஓர் எச்சரிக்கை
காலநிலை மாற்றம் மற்றும் ஊட்டச்சத்து மாசு காரணமாகப் பெருங்கடல்களில் கடல்வாழ் உயிரிகள் ஆக்சிஜன் இல்லாமல் திணறுகின்றன. இதன் காரணமாகப் பல மீன் வகைகள் அழிவும் நிலைக்குச் சென்றுள்ளன. ஐ.யு.சி.என். அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
கடல்களில் உள்ள ஊட்டச்சத்துக் குறைபாடு முன்பே தெரிந்ததுதான் என்றாலும், காலநிலை மாற்றமானது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுத்தி உள்ளது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
1960ஆம் ஆண்டில், பெருங்கடலில் 45 இடங்களில் இவ்வாறான ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்தது. இது இப்போது 700 இடங்களாக அதிகரித்துள்ளது. இவ்வாறு ஆக்சிஜன் குறைவது, டுனா, மர்லின் மற்றும் சுறா ஆகிய மீன் வகைகளின் இருப்பை அச்சுறுத்தலாக்கி உள்ளது.
என்கவுன்டர் கொலைகளை கொண்டாடுவது அபாயத்தின் அறிகுறி
காவல்துறை குற்றவாளிகளை என்கவுன்டர் மூலம் கொல்லும்போது பெரும்பாலானவர்கள் அதனை ஆதரிக்கிறார்கள். ஆனால், இம்மாதிரியான கொலைகளை ஆதரிப்பது எதிர்காலத்தில் மிக ஆபத்தான நிலைமைக்கு எடுத்துச் செல்லும் என்கிறார்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள். இந்த ஆதரவு எங்கிருந்து உருவாகிறது?
சமீபத்தில் தெலங்கானா கால்நடை மருத்துவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, தீ வைத்து கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் குற்றவாளி என கருதப்பட்ட நான்கு இளைஞர்களை காவல் துறையினர் என்கவுன்டர் செய்தனர். இந்த என்கவுன்டரை நாடு முழுவதும் பலர் கொண்டாடினர். இது குறித்து மனித உரிமை செயற்பாட்டாளர் ஹென்ரி திஃபேனிடம் பேசினோம்.
''இந்த கொண்டாட்டத்திற்குப் பின்னால் உள்ள சில உண்மைகளை நாம் ஏற்க வேண்டும். மக்களால் நீதி மன்றத் தீர்ப்புகளைக் கொண்டாட முடியவில்லை. அதனால், இம்மாதிரியான என்கவுன்டர்களை கொண்டாடுகிறார்கள்.
விரிவாகப் படிக்க:என்கவுன்டர் கொலைகளை சமூகம் கொண்டாடுவது ஏன்?
"இந்தியா முழுவதும் சுமார் 20,000 பட்டினி சாவுகள்": ப. சிதம்பரம்
நவம்பர் 2016ல் பணமதிப்பிழப்பு அறிவித்த நாளிலிருந்து படிப்படியாகக் குறைந்த இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி ஐந்து சதவீதமாக மாறிவிட்டது என்றும் தற்போது இந்தியப் பொருளாதாரம் அதலபாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்றும் முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
ஐ.என்.எக்ஸ். ஊடகம் வழக்கில் கைதாகி, 106 நாட்கள் திஹார் சிறையில் கழித்துவிட்டு, ஜாமீனில் வெளிவந்துள்ள மூத்த காங்கிரஸ் தலைவரான சிதம்பரத்திற்கு, சென்னையில் தமிழக காங்கிரஸ் குழுவினர் வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
விரிவாகப் படிக்க:இந்தியா முழுவதும் சுமார் 20,000 பட்டினி சாவுகள்: ப. சிதம்பரம்
"பழிவாங்கலின் மூலம் நீதியை பெறக்கூடாது"
"நீதியை பழிவாங்கலின் மூலம் பெறக்கூடாது; பழிவாங்கலின் ஊடாக கிடைக்கப்படும் நீதி அதன் அம்சத்தை இழப்பதாக நான் நினைக்கிறேன்," என இந்திய உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்துள்ளார்.
செளதி மாணவர் அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு நடத்தியது ஏன்?
அமெரிக்க கடற்படைத் தளத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சௌதி மாணவரை "காட்டுமிராண்டித்தனமானவர்" என்று சௌதி அரேபியாவின் மன்னர் சல்மான் கண்டித்துள்ளார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
சௌதி மன்னர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்குமாறு தன்னிடம் கேட்டுக்கொண்டார் என அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஃப்ளோரிடாவின் பென்சக்கோலாவில் ஏவியேஷன் பயின்று வரும் சௌதி மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தனர், குறைந்தது 8 பேர் காயமடைந்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: